கடந்த வெள்ளிக்கிழமை ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் தில்லியில் ஊர்வலம் நடத்தினார்கள். அதற்கு முன்னால், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமாரின் மீது சுமத்தப்பட்டிருக்கும் தேச விரோத வழக்கின் விசாரணைக்கு நீதிமன்ற வளாகத்திற்கு வந்திருந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்களைத் தாக்கிய சம்பவத்திற்குத் தலைமை தாங்கிய விக்ரம் சிங் செளஹானுக்கு அவர்கள் பாராட்டு நடத்தினார்கள்.
தில்லி பாட்டியாலா மாளிகை நீதிமன்ற வளாகத்தில் நடந்த வெறித் தாக்குதல்களுக்குக் காரணமான, தலைமை வகித்து நடத்திய செளஹானுக்கும் அவருடன் இருந்த இரண்டு வழக்குரைஞர்களுக்கும் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையை அவர்கள் மதிக்கக்கூட இல்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாட்டியாலா மாளிகைக் கீழமை நீதிமன்றத்திற்கு சம்பவம் குறித்து விசாரிக்க வந்த வழக்குரைஞர்கள் வசைபாடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டிருக்கிறது என்றால், அது சட்டப்படியான நடவடிக்கையை அவமதிப்பது என்று பொருள். இந்த ஒரு காரணத்துக்காகவே கருப்பு அங்கியில் உலவும் வன்முறைக் கும்பலை நீதிமன்ற அவமதிப்புக்காக நீதிபதிகள் தண்டித்திருக்க வேண்டாமா? உடனடியாகக் கைது செய்து வழக்குத் தொடரச் செய்திருக்க வேண்டாமா?
உச்சநீதிமன்றம், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதற்காக தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸியைக் கண்டித்திருக்கிறது. இந்திய பார் கவுன்சில் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதற்குப் பிறகும்கூட, குற்றம் சாட்டப்பட்ட வழக்குரைஞர்கள் பாராட்டப்பட்டிருப்பதும், கடந்த வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் ஊர்வலம் நடத்தியிருப்பதும், நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இதுகுறித்துக் கேட்டபோது, தில்லி காவல் துறை ஆணையர் விசித்திரமான பதிலளித்திருக்கிறார். "வழக்குரைஞர்கள் நீதித் துறை அலுவலர்கள், அவர்கள் சட்டம் படித்து, நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டிருக்கும் சேவகர்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதோ, அவர்களது செயல்பாடுகளைத் தடுக்க முற்படுவதோ சரியாக இருக்காது' என்று சாமானியன் பதிலளிக்கலாம், பொறுப்பான பதவி வகிக்கும் காவல் துறை ஆணையர் சொல்ல முடியாது. அப்படியானால், வழக்குரைஞர்கள் சட்டவிரோதமான செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ, குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆணையர் பஸ்ஸி கருதுகிறாரா?
பாட்டியாலா மாளிகை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பான விடியோ பதிவுகளும், நேராகப் பார்த்த சாட்சிகளும் நிறையவே உண்டு. அதனடிப்படையில், வன்முறைக்குக் காரணமானவர்கள் இதற்குள் அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் பிடியில் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறையின் அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி இந்தக் கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியும், நடந்த சம்பவத்தையும் வன்முறையையும் கண்டித்திருக்கிறது. அவர்களது கவலை உண்மையாக இருக்குமானால், நீதிமன்ற வளாகத்தில் ஒரு மாணவனை வெறித்தனத்துடன் தாக்கும் பாஜகவின் தில்லி சட்டப்பேரவை உறுப்பினர் ஒ.பி. சர்மாவைக் குறைந்தபட்சம் தாற்காலிகமாகவாவது கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டாமா? அத்தனை ஊடகங்களிலும் புகைப்படங்களும், விடியோ பதிவும் இருந்தும், பாஜக தலைமையின் பார்வையில் அது ஏன் படாமல் இருக்கிறது?
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பீட்டர் ரமேஷ்குமார் என்கிற வழக்குரைஞர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்திற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதிகளின் அதிகாரத்தைக் கேள்வி கேட்ட, நீதிமன்ற நடவடிக்கைகளை பாதித்த காரணங்களுக்காக நீதிமன்றம் அவரை தண்டித்திருக்கிறது. துணிவிருந்தால் தனக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்று நீதிபதிகளுக்கே சவால் விடுக்கும் அளவுக்கு அவரது நடவடிக்கை போனது என்றால், எந்த அளவுக்கு வழக்குரைஞர்கள் தரம் தாழ்கிறார்கள் என்பது வெளிச்சமாகிறது.
சட்டம் படித்துக் கருப்பு அங்கி அணிந்து விடுவதாலேயே தாங்ககள் சட்டத்திற்கு மேலானவர்கள் என்கிற உணர்வுடன் வழக்குரைஞர்களின் ஒரு பகுதியினர் செயல்படுவது அதிகரித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் வெ. ராமசுப்பிரமணியன், கே. ரவிச்சந்திரபாபு அமர்வுக்கு இருக்கும் துணிச்சல் இந்தியாவிலுள்ள எல்லா நீதிபதிகளுக்கும் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தப் போக்குக்கு முடிவுகட்ட முடியும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், வழக்குரைஞர்களுக்கு எந்தவித சிறப்புச் சலுகையும் வழங்கப்படவில்லை. ஏனைய இந்தியக் குடிமகனுக்கு உள்ள உரிமைதான் இவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சட்டம் படித்திருந்தும், இந்த அடிப்படை உண்மையைக்கூட சில வழக்குரைஞர்கள் தெரிந்து வைத்திருக்காமல் இருப்பது அவர்களது சட்டம் குறித்த புரிதலின் குற்றமா இல்லை தங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்கிற ஆணவத்தால் ஏற்பட்ட அகம்பாவமா தெரியவில்லை.
கருப்பு அங்கியை அணிந்து வழக்குரைஞராக வலம் வந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், சட்டம் ஒன்றும் செய்யாது என்கிற எண்ணம் ஏற்படுவதும், அப்படிப்பட்ட அவலத்தை நீதிமன்றமும், அரசும் அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதும் என்கிற நிலைமை ஏற்பட்டால், சட்டம் மட்டுமல்ல, அரசியலமைப்பே கேலிக்குரியதாகிவிடும்!