முட்டாள் தின நிதியாண்டு!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திரா காந்தி அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்ட ஒரு யோசனை இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. வழக்கமாக ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கும் மத்திய அரசின் நிதியாண்டை மாற்றலாமா என்பதுதான் அந்த யோசனை.
Updated on
2 min read

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திரா காந்தி அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்ட ஒரு யோசனை இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. வழக்கமாக ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கும் மத்திய அரசின் நிதியாண்டை மாற்றலாமா என்பதுதான் அந்த யோசனை. நரேந்திர மோடி அரசு, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் சங்கர் ஆச்சார்யா தலைமையிலான குழுவை அமைத்து, இது குறித்துப் பரிசீலனை செய்து, புதிய நிதியாண்டு முறையைப் பின்பற்றுவது சரியாகுமா, சாத்தியப்படுமா என்பதைப் பரிசீலித்து அறிக்கை அளிக்கப் பணித்துள்ளது.

இதே கேள்வி 1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியினாலும், அப்போது நிதியமைச்சராக இருந்த இன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியாலும் எழுப்பப்பட்டது. இந்திய அரசுப் பணி அதிகாரியாக இருந்தவரும், முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநருமான எல்.கே. ஜாவின் தலைமையில் ஒரு குழு, இது குறித்துப் பரிந்துரைக்க அமைக்கப்பட்டது. அந்தக் குழு, நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்கிற பழக்கத்திலிருந்து மாற்றி ஜனவரி முதல் தேதியிலிருந்து டிசம்பர் 31-ஆம் தேதி வரை என அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. உலகின் 156 நாடுகள் ஜனவரியில் தொடங்கும் நிதியாண்டைப் பின்பற்றுவதாகவும், அதுதான் இந்தியாவுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்தியாவைப் போன்ற பருவமழையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் தனது நிதிநிலை அறிக்கை தொடர்பான பணிகளை அக்டோபர் மாதம் தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுவதில் அர்த்தம் இருக்கிறது. பருவமழைக் காலம் முடிந்து, அதன் விளைவுகளை முழுமையாக உணர்ந்து நிதிநிலை அறிக்கைக்கான வேலைகளை அக்டோபர் மாதம் தொடங்கும்போது, அடுத்த நிதியாண்டின் பொருளாதாரச் சூழலை முழுமையாக உணர்ந்துச் செயல்பட முடியும்.

உலகின் பல்வேறு நாடுகளும், அவரவர் நாட்டின் பருவநிலையை அடிப்படையாகக் கொண்டுதான் தங்களது நிதியாண்டை நிர்ணயித்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்க நிதியாண்டு அக்டோபர் 1 முதல் செப்டம்பர் 30 வரை, ஆஸ்திரேலிய நிதியாண்டு ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை, சீன நிதியாண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என்று தங்கள் நாட்டின் பருவநிலைக்கு ஏற்றாற்போலத்தான் நிதியாண்டை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் கீழ் இந்தியா இருந்ததால், 1867 முதல் அவர்களது நிதியாண்டையே நாமும் கடைப்பிடிக்கிறோம். அப்போது முதல்தான் இந்தியாவுக்கென்று நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் வழக்கமும் தொடங்கியது. அதைவிட வேடிக்கை என்னவென்றால், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் காலை 11.30 மணிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால், அதற்கு நிகரான இந்திய நேரமான மாலை ஐந்து மணிக்குத்தான் இந்தியாவின் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

1999 வரையில் மாலையில்தான் நமது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இந்த நடைமுறையை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹாதான் 1999-இல் கைவிட்டு, காலையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் வழக்கத்துக்கு மாற்றினார்.

இப்போதைய நிதியாண்டில் ஒரு மிகப்பெரிய குறைபாடு இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் நிதியாண்டு தொடங்கி இரண்டே மாதத்தில் பருவமழை தொடங்கி விடுகிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தொடரும் பருவமழையைப் பொருத்துத்தான் இந்தியப் பொருளாதாரம் செயல்படுகிறது. அதனால் எந்தவொரு கொள்கை முடிவையும் முன்கூட்டியே தெளிவாக எடுக்க முடிவதில்லை.

இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. விவசாயம் நமது மொத்த பொருள் உற்பத்தி விகிதத்தில் (ஜி.டி.பி.) 17.4% பங்களிப்பைத்தான் நல்குகிறது. எண்பதுகளில் மிகக் குறைவான பங்களிப்பைத் தந்திருந்த சேவைத் துறை இப்போது 53% பங்களிப்பை நல்குகிறது. அதனால், விவசாயத்தையோ, பருவமழையையோ சார்ந்து நமது நிதியாண்டை நிர்ணயிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயத்தின் பங்களிப்பு, மொத்தப் பொருளாதாரத்தில் குறைந்திருந்தாலும் இந்திய மக்கள்தொகையில் 49% மக்கள் விவசாயம் சார்ந்தவர்களாகவும், விவசாய வருமானத்தில் வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களது தேவையின் அடிப்படையில்தான் சரக்கு மற்றும் சேவைத் துறை செயல்படுகிறது. பருவமழையின் அடிப்படையில்தான் இன்னமும்கூட இந்தியாவின் பொருளாதாரம் செயல்படுகிறது.

நிதியாண்டை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமொன்றும் அல்ல. பல பிரச்னைகளை நாம் எதிர்கொண்டு சமாளித்தாக வேண்டும். ஆனால், மாறிவிட்ட உலகமய சூழலில் பெரும்பாலான உலகநாடுகள் கடைப்பிடிக்கும் ஜனவரியில் தொடங்கும் நிதியாண்டுக்கு நாமும் மாறுவதால் பல நன்மைகள் உண்டு.

கடும் கோடையில் இந்திய நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுவதைவிட, குளுமையான ஜனவரி மாதக் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படுவதை யார் வரவேற்கிறார்களோ இல்லையோ, நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிச்சயம் வரவேற்பார்கள், கூட்டத்தொடரில் தவறாமல் பங்கு கொள்வார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com