ஊதிய உயர்வா? வேலைவாய்ப்பா?

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை.
Updated on
2 min read

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வின் தொழிற்சங்கம் தவிர, ஏனைய முக்கியக் கட்சிகள் அனைத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்ட வேலை
நிறுத்தப் போராட்டம் என்றாலும்கூட, இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் கேரளம், திரிபுரா தவிர ஏனைய மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றி பெற்றது என்று சொல்ல முடியாது.
பத்து முக்கியமான தொழிற்சங்கங்கள் இணைந்து 12 கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய "பாரத் பந்த்' எதிர்பார்த்த வெற்றியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தாததில் வியப்படைய ஒன்றுமில்லை. பொதுவாகவே, மக்கள் மத்தியில் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு குறைந்து வருகிறது. சாமானிய மக்களை பாதிக்கும் பொதுவான பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் போராட்டங்களுக்கே ஆதரவு குறைந்து வருகிறது எனும்போது தொழிலாளர்களின் பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்பட்ட
இந்தப் போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
தொழிற்சங்கங்களின் 12 அம்சக் கோரிக்கைகளில் முக்கியமானது, குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது. அதிகரித்துவிட்ட விலைவாசியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஊதிய உயர்வும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை நியாயப்படுத்துகின்றன. ஏற்கெனவே, தில்லியில்
அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அறிவித்திருக்கிறது. மத்திய அரசும், கணிசமாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை அதிகரித்து அறிவித்திருக்கிறது.
ஊதியத்தை உயர்த்திக் கொண்டே போவது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது. விலைவாசியை, குறிப்பாக உணவுப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்துவதும், கட்டுக்குள் வைத்திருப்பதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும். விலைவாசி உயர்வுதான், தொழிலாளர்களை ஊதிய உயர்வு கேட்டுப் போராட வைக்கிறதே தவிர, அவர்கள் ஊதிய உயர்வு கோருவது ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கல்ல.
தொழிற்சங்கங்கள் முன்வைத்திருக்கும் மிக முக்கியமான கோரிக்கை, குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது. இது அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் பொதுவானதாகக் கோரப்படுகிறது. அமைப்பு சார்ந்த தொழிற்சங்கங்களின் பின்புலம் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், அமைப்புச் சாராத தொழிலிலும், யார் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் அவர்களது குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 என்று நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
அதாவது, தினக்கூலி ரூ.600 என்றும் சொல்லலாம்.
தற்போது நடைமுறையில் இருக்கும் ரூ.300 என்கிற கூலியை அல்லது சம்பளத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்கிற கோரிக்கையைத் தவறு என்று தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில், இது
எப்படி சாத்தியப்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். வீட்டு வேலைகளுக்கும், சிறு தொழில்கள், வியாபாரங்களுக்கும் வேலைக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தினசரி ரூ.600 அல்லது மாதத்திற்கு ரூ.18,000 ஊதியமாகக் கொடுப்பது என்பது சாத்தியப்படுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
பாதுகாப்பு, காப்பீடு, வங்கிகள் போன்ற தொழில்களில் தனியார்மயம் கூடாது என்று தொழிற்சங்கங்கள் வாதிடுவதில் அர்த்தமில்லை. இடதுசாரிகளைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகள் அனைத்துமே சீர்திருத்தத்தையும், தனியார்மயத்தையும் ஆதரிக்கும் சூழலில் தொழிற்சங்கங்களின் இந்தக் கோரிக்கை எடுபடாது. இதற்கு பதிலாக, அமைப்பு சார்ந்த, சாராத அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு கிடைப்பதற்கும், அவர்களது
அடிப்படை உரிமைகள் பறிபோகாமல் பாதுகாப்பதற்கும் முயற்சி எடுப்பதுதான் இன்றைய தேவை.
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நிலைமை வேலைவாய்ப்பு அதிகரித்தால் மட்டுமே மேம்
படும். வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டுமானால், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவும், நீக்கவும் சட்டத்தில் வழிகோலாதவரை, புதிய தொழில்கள் தொடங்குவது அதிகரிக்காது. முதலீடு செய்வதற்கு யோசிப்பார்கள். அடிப்படை ஊதியத்தை உயர்த்து
வதைவிட வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் புத்திசாலித்தனம்.
பொது வேலைநிறுத்தம் என்பது வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய தடையாகவும் பாதிப்பாகவும் இருக்கும்
என்பதுதான் உண்மை. சாதாரண குடிமகனின் நடமாட்டத்தையும், செயல்பாடுகளையும் முடக்குவது என்பது அரசியல் சட்டப்படி தனிமனித உரிமையை பாதிப்பதாக இருக்கும் என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது. வேலைநிறுத்தங்கள் அரசியல் சட்ட விரோதமானவை என்கிற கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி இருக்கிறது.
2013-இல் நடத்தப்பட்ட வேலைநிறுத்தத்தால் இந்தியப் பொருளாதாரத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு என்றால் இப்போது அதுவே எத்தனை கோடியாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளில் பல நியாயமானவை, விவாதித்து முடிவு காணப்பட வேண்டியவை. ஆனால், அதற்காக வேலைநிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com