நிதிநிலை அறிக்கை 2017 - II

முந்தைய ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகள்
Updated on
2 min read

முந்தைய ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கைகள் போலவே, இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையும் பல இன்றியமையாத சீர்திருத்தங்களைச் செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது. முதலீட்டு வரவு வரியையே (கேபிடல் கெயின்ஸ் டாக்ஸ்) எடுத்துக்கொள்வோம். தாராளமயமாக்கல் கொள்கை 1991-இல் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்தியப் பொருளாதாரமே பங்குச் சந்தையை நம்பித்தான் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன பெரிய தொழில் நிறுவனங்கள்.
விவசாய நிலத்திற்கு முதலீட்டு வரவு வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வீடு, வீட்டு மனை, வணிக வளாகம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை வாங்கி விற்றால் கிடைக்கும் ஆதாயத்திற்கான முதலீட்டு வரவு வரிக்கான கால அளவு 36 மாதத்திலிருந்து 24 மாதங்களாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலிடப்பட்ட பங்குகள் 12 மாதத்திற்கு மேல் முதலீட்டு வரவு வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும்போது, பட்டியலிடப்படாத பங்குகளும், அசையாச் சொத்துகளும் ஏன் 24 மாத வரம்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது புரியவில்லை.
ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போதும், எல்லா நிதியமைச்சர்களும் தவறாமல் கையாளும் ஒரு நடவடிக்கை, புதிது புதிதாக அபராதங்கள் விதிப்பது. தொட்டதற்கெல்லாம் அபராதம் என்கிற நிலைமையால், இந்திய அரசாங்கமே அபராதத்தில்தான் நடைபெறுகிறதோ என்கிற தோற்றம் ஏற்படுகிறது. நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல.
உச்சநீதிமன்றம் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு வழிமுறைகள் கூற நீதிபதி எம்.பி. ஷாவின் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தது. அதன் பரிந்துரையின்படி, ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான எந்தவிதப் பரிமாற்றமும் ரொக்கப் பரிவர்த்தனையாக இருக்கக் கூடாது. அதை அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. அதுவரை சரி.
அதனைத் தொடர்ந்து, ரூ.3 லட்சத்துக்கு மேற்பட்ட அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைக்கு 100% அபராதம் என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். அபராதம் விதிக்கப்படுவதை தவறு என்று சொல்ல முடியாது. அதற்காக, 100% அபராதம் விதிப்பதாக இருந்தால், அதற்கேற்ற சூழலை அரசு ஏற்படுத்தி இருக்க வேண்டும். இந்த அபராதம் என்கிற ஆயுதம், அதிகாரிகள் கையூட்டுப் பெறுவதற்குத்தான் அதிகம் பயன்படுமே தவிர அரசுக்கு வருவாய் ஈட்டித் தராது என்பதுகூடவா நமது நிதியமைச்சருக்குப் புரியவில்லை?
ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைப்பது என்பதுதான் சாத்தியமே தவிர, முழுமையாக அகற்றுவது சாத்தியமே இல்லை. சீனாவில் 70%-ம், அமெரிக்காவில் 45%-ம் ரொக்கப் பரிமாற்றம்தான். இத்தனைக்கும் அமெரிக்காவில் அதிகபட்ச செலாவணி 100 டாலர்தான். அதே நேரத்தில் பண அட்டைகளும், கடன் அட்டைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. ரொக்கப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், எல்லா பரிமாற்றங்களும் வரிவலைக்குள் உட்படுத்தப்படுவதும் அமெரிக்காவில் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் இந்தியாவின் இலக்காகவும் இருக்க வேண்டும்.
இந்தியாவில் அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக லஞ்சத்தின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலைமை. அதனால் அபராதம் என்று வந்தாலே லஞ்சம் என்று அதற்குப் பொருள் கொள்ள வேண்டும். நீதிமன்றங்களில் மேல்முறையீடுகளும், வழக்குகளும் குவிந்து கிடக்கின்றன. அபராதத்தைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் படைத்தவர்கள் காட்டில் மழை. அபராதத் தொகையில் ஒரு பகுதி கையூட்டாகப் பெறப்பட்டு தள்ளுபடி செய்யப்படும்.
சாமானிய குடிமகன் குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5,000 அபராதம். ஆறு மாதம் கடந்து தாக்கல் செய்தால் ரூ.10,000 அபராதம். இப்போது ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிமாற்றத்திற்கு அபராதம். எதற்கெடுத்தாலும் அபராதம் என்கிற போக்குக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் புதிது புதிதாக அபராதம் விதிக்கிறார்.
ரொக்கப் பரிமாற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றால், முதலில் அதற்கான அடிப்படை சூழலையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியாக வேண்டும். பண அட்டைப் பரிவர்த்தனைக்கான தேய்ப்பு இயந்திரத்தின் இறக்குமதி வரிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் போதுமான அளவு தேய்ப்பு இயந்திரங்கள் இல்லை என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ரொக்கப் பரிவர்த்தனைக்கு ரூ.3 லட்சம் வரம்பு விதிப்பதும், வரம்பை மீறினால் அபராதம் விதிப்பதும், சரியான புரிதலும், திட்டமிடலும் இல்லாமல் இருப்பதைத்தான் வெளிப்படுத்துகிறது.
தேய்ப்பு இயந்திரங்களுக்கு இறக்குமதி வரியில் விலக்கு அளிப்பது இருக்கட்டும். ரொக்கமில்லாமல் பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டுமென்றால், முதலில் அதற்கான சேவைக் கட்டணத்தை அல்லவா சீரமைத்திருக்க வேண்டும்? சில வியாபாரங்களில் லாபமே 2%தான் இருக்கும் எனும்போது, ரொக்கமில்லாப் பரிவர்த்தனைக்கு 2.5% முதல் 4% வரை வங்கிகளுக்கு அவர்களால் எப்படி சேவைக் கட்டணம் செலுத்த முடியும்? குறிப்பிட்ட அளவுவரை ரொக்கமில்லாப் பரிமாற்றங்களுக்கு சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்காமல், ரொக்கப் பரிவர்த்தனை என்பது சாத்தியமே இல்லை. இதைப்பற்றி அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை எதுவுமே குறிப்பிடாமல் இருப்பதுதான், இந்த நிதிநிலை அறிக்கையின் மிகப்பெரிய குறைபாடு!
- தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com