பேசிப் பயனென்ன?

பொருளாதார வளர்ச்சியும் வருமான அதிகரிப்பும் சாமானியர்கள்கூட அறிதிறன்பேசியும் மின்னணு உபகரணங்களும் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும்
Updated on
2 min read

பொருளாதார வளர்ச்சியும் வருமான அதிகரிப்பும் சாமானியர்கள்கூட அறிதிறன்பேசியும் மின்னணு உபகரணங்களும் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தியிருப்பது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், இன்னொருபுறம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவற்றால் ஏற்படுகின்ற மின்னணுக்கழிவுகள் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களின் உடல் நலத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐக்கியநாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது.
ஆசியாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் மின்னணுக்கழிவுகளின் அளவு 63 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை. மின்னணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது, செயலற்றதாக்கி அழிப்பது ஆகியவற்றில் உடனடியாக ஆசிய நாடுகள் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரமும் வருவாயும் அதிகரித்திருப்பதால் மிக அதிகஅளவில் செல்லிடப்பேசிகள், கணினிகள், குளிர்பதனப் பெட்டிகள், தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களின் விற்பனை ஆசியாவில் எதிர்பாராத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. 2010 - 15 வரையிலான இடைவெளியில் சீனாவில் மட்டும் மின்னணுக்கழிவுகளின் அளவு இரட்டிப்பாகி இருக்கிறது என்கிறது அந்த ஆய்வறிக்கை.
சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரும் சராசரியாக 21.7 கிலோ மின்னணுக் கழிவை உருவாக்குகிறார்கள். சிங்கப்பூரிலும், தைவானிலும் 19 கிலோவுக்கும் அதிகமாக ஒரு நபர் மின்னணுக்கழிவு உருவாக்குகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. கம்போடியா, வியத்நாம், பிலிப்பின்ஸ் போன்ற நாடுகள் மிகக்குறைவான மின்னணுக்கழிவுகளை (சராசரியாக நபருக்கு 1 கிலோ மட்டுமே) உருவாக்கும் நாடுகள்.
முறையில்லாத, சட்டத்திற்கு புறம்பான வழியில் மின்னணுக்கழிவுகளை கொட்டுவது என்பது விஷத்தன்மையுள்ள ரசாயனப் பொருள்களால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணி. மின்னணுப் பொருள்களில் காணப்படும் உலோகத்தைப் பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அமிலங்களை நுகர்வதோ அதனால் பாதிக்கப்படுவதோ மிக மோசமான ஆரோக்கியக் கேட்டை ஏற்படுத்தும்.
சீனாவிலுள்ள கைய்யூ என்கிற நகரம், மின்னணுக்கழிவுகளை சுழற்சி செய்வதையே மிகப்பெரிய தொழிலாகக் கொண்டிருக்கும் நகரம். உலகிலுள்ள பல நாடுகளிலிருந்தும் மின்னணுக்கழிவுகள் இங்கே வாங்கிவரப்பட்டு மறுசுழற்சி செய்து உலோகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்த நகரத்தின் பொருளாதாரமே இதை நம்பித்தான் இருக்கிறது.
2014-இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி இந்த நகரத்தின் சுற்றுச்சூழல் காற்று முழுவதும் உலோகங்களால் மாசுபட்டு இருப்பதும், தண்ணீர் விஷத்தன்மை வாய்ந்ததாக இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த நகரத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ரத்தத்தில் அதிக அளவு ஈயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், சுழற்சிக்குப் பின்னான கழிவுகள் அருகிலுள்ள ஓடையிலும் கால்வாயிலும் கொட்டப்படுவதாலும், பிளாஸ்டிக் ரசாயனங்கள், சர்க்கியூட் போர்டுகள் உள்ளிட்டவை எரிக்கப்படுவதாலும் ஏற்படுகின்ற மாசு அங்கு வாழும் மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதெல்லாம் சீனாவிலும் ஏனைய நாடுகளிலும் மட்டும்தான் என்று நினைத்துவிட வேண்டாம். உலகிலேயே அதிக அளவு அறிதிறன்பேசிகளும், செல்லிடப்பேசிகளும் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது நமது இந்தியாதான். அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா முதலிடத்திற்கு வந்தாலும் வியப்படைய வேண்டாம். மூன்றாவது இடத்தில் அமெரிக்கா, அடுத்ததாக பிரேஸில், ரஷியா ஆகியவை இருக்கின்றன. சீனாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும்கூட ஆண்டுதோறும் பல லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் உருவாவதோடு, பிற நாடுகளின் மின்னணு சாதனங்களின் கழிவுகளும் இந்தியாவில் கொட்டப்படுகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் மின்னணு சாதனக் கழிவுகளை மக்களுக்கு பாதிப்பின்றி முறையாக அப்புறப்படுத்துகிறார்கள் அல்லது செயலிழக்கச் செய்கிறார்கள். இல்லையென்றால் இந்தியா உள்ளிட்ட வளர்ச்சியடையும் நாடுகளுக்கு மறுசுழற்சிக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, அந்தப் பொருள்களை தயாரிப்பவர்கள் மின்னணு உபகரணங்களை திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர்.
இந்தியாவில் எந்த ஒரு நிறுவனமும் கழிவுகளை திரும்பப் பெறுவதில்லை என்பதால் ஆயிரக்கணக்கான டன் மின்னணு சாதனக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் பல ஆயிரம் டன் மின்னணு சாதனக் கழிவுகளை மின்னணு மறுசுழற்சி நிறுவனங்கள் இறக்குமதி செய்து அவற்றையும் இங்கே கொட்டி வருகின்றனர்.
அனுமதி பெறாத மறுசுழற்சியாளர்கள் மின்னணு சாதனக் கழிவுகளை முறையாக கையாள்வதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் வரையிலான மின்னணுக்கழிவுகள் இந்தியாவில் இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு 2011-இல் மின்னணு சாதனை கழிவு மேலாண்மை, கையாளுதல் சட்டத்தை கடந்த 2011-இல் இந்திய அரசு வடிவமைத்து 2012-இல் நடைமுறைக்கு கொண்டுவந்தது. அது எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகின்றது என்பதைச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மின்னணுக் கழிவுகளின் தொடர் பாதிப்பு காரணமாக கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைபாடு, புற்றுநோய், நுரையீரல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல பேராபத்துகள் ஏற்படக்கூடும். இதெல்லாம் தெரிந்தும் நாம் விழித்துக்கொள்ளாமல் இருக்கிறோம் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com