இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரசியல் நிர்பந்தம்!

கடந்த வாரம் கொல்கத்தாவில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியோ,

News image
Updated On :23 ஜனவரி 2018, 7:46 pm

ஆசிரியர்

கடந்த வாரம் கொல்கத்தாவில் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, காங்கிரஸ் கட்சியுடன் எந்தவிதமான கூட்டணியோ, தேர்தல் உடன்படிக்கையோ செய்து கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது. 
பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் சரி, முந்தைய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சரி, பாஜகவைத் தோற்கடிப்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் குறிக்கோள் என்பதில் ஒத்தகருத்துடையவர்கள். ஆனால், அவர்கள் கருத்து வேறுபடுவதெல்லாம் பாஜகவைத் தோற்கடிக்கக் காங்கிரஸுடன் கைகோப்பதா, கூடாதா என்பதில்தான். 
காங்கிரஸுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்பட வேண்டுமா வேண்டாமா என்பது கடந்த 40 ஆண்டுகளாக அந்தக் கட்சியில் தொடர்ந்து வரும் விவாதம். 80-களில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் பொதுச் செயலாளராக இருந்தபோது இதே கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக எந்த அளவு எதிரியோ அதே அளவிலான எதிரிதான் காங்கிரஸ் என்றும், காங்கிரஸுடன் ஒட்டோ உறவோ வைத்துக் கொள்வது மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டுக்கு எதிரானது என்பதிலும் தீர்மானமாக இருந்தார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்.
1957-இல் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் முறையில் வெற்றி பெற்று கேரள மாநிலத்தில் ஆட்சி அமைத்தது ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி. அந்த ஆட்சியை 1959- ஜூலை 31-ஆம் தேதி, மத்தியில் ஆட்சியில் இருந்த பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது.
1969-இல் நடந்த காங்கிரஸ் பிளவின்போதும் சரி, 1975-இல் அன்றைய இந்திரா காந்தி அரசால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைச் சட்டத்தின்போதும் சரி, காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்தது. 1989-இல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தபோது, பாஜகவைப் போலவே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளும் காங்கிரஸுக்கு மாற்றாக அமைந்த அந்த அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். 
90-களில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற ஹர்கிஷன் சிங் சுர்ஜித் காங்கிரஸுடன் நேரடியான நட்புறவோ கூட்டணியோ அமைத்துக் கொள்ளாவிட்டாலும், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் அளவுக்குக் கடுமையான காங்கிரஸ் எதிர்ப்பாளராக இருக்கவில்லை. 1996-இல் காங்கிரஸின் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முன்னணி அரசு அமைவதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். 
அப்போது காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கு பெற்றும்கூட மார்க்சிஸ்ட் கட்சி அரசில் அங்கம் வகிக்கவில்லை. மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதி பாசுவை ஐக்கிய முன்னணி அரசின் பிரதமராக ஏற்றுக்கொள்ள அனைவரும் தயாராக இருந்தபோது, காங்கிரஸ் ஆதரவில் அமையும் அரசில் பங்குபெறக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு முடிவெடுத்தது. அதை 'இமாலயத் தவறு' என்று மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியில் இருந்து பலரும் விமர்சித்தனர்.
2004-இல் மார்க்சிஸ்ட் கட்சி அன்றைய மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடதுசாரிகளின் ஆதரவுடன்தான் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பெறமுடிந்தது என்றாலும்கூட, இடதுசாரிகளின் கொள்கைக்கு மாறான பல முடிவுகளை அந்தக் கூட்டணி அரசு எடுத்தபோது, பிரகாஷ் காரத் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியால் அந்த ஆட்சிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க முடியாமல் போனது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணியில் அந்த உறவு துண்டிக்கப்பட்டது.
தேசிய கட்சியாக இருந்த இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சி இப்போது கேரளம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே அரசியல் சக்தியாக நிலைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சியாகவும், கேரளத்திலும் திரிபுராவிலும் ஆளும் கட்சியாகவும் இருக்கும் இடதுசாரிகள் அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸுடன் கைகோத்து தேசிய அரசியலில் ஈடுபடுவதன் மூலம் இடதுசாரிகளுக்குக் கிடைக்கும் ஆதாயத்தைவிட அவர்கள் வலுவாக இருக்கும் மூன்று மாநிலங்களிலும் ஏற்படக்கூடிய இழப்புதான் அதிகம்.
அடுத்த மாதம் திரிபுராவில் தேர்தல் நடக்க இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஒரு சக்தியாக தன்னை வளர்த்துக்கொள்ள முற்பட்டிருக்கிறது என்றாலும்கூட திரிபுராவில் இடதுசாரிகளின் முதல் எதிரி காங்கிரஸ்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கொல்கத்தாவில் மத்தியக் குழு கூடியது. அதனால், காங்கிரஸுடன் ஒட்டோ உறவோ கூடாது என்கிற பிரகாஷ் காரத்தின் கருத்துக்கு ஆதரவாக 55 உறுப்பினர்களும் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் கருத்துக்கு 31 பேரின் ஆதரவும் கிடைத்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான முக்கியத்துவத்தையும் செயல்பாட்டையும், கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகள் குலைத்துவிடக்கூடாது. உலகமயமாக்கலின் தாக்கத்தையும், 
சந்தைப் பொருளாதாரத்தின் பாதிப்புகளையும் எடுத்துரைத்து எதிர்க்க, வலுவான இடதுசாரி இயக்கம் இந்தியாவுக்கு அவசியம். அதற்காகவாவது மார்க்சிஸ்ட் கட்சி தேசிய அளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் எதிரான மாற்றுச் சக்தியாக உருவாவது இந்தியாவுக்கு நல்லது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.