'சார்க்'குக்கு மாற்றாகாது!

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவிட்டிருக்கும் நிலையிலும்,

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவிட்டிருக்கும் நிலையிலும், ஆசியாவில் உள்ள எல்லா நாடுகளுக்கும் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கம் ஓர் இனம் புரியாத அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையிலும் பீம்ஸ்டெக்' அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 
2004-இல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும், 2008-இல் இந்தியத் தலைநகர் புது தில்லியிலும், 2014-இல் மியான்மர் தலைநகர் நேபிடாவிலும் கூடிய பீம்ஸ்டெக்' மாநாடு இந்த ஆண்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டில், கடந்த மாதம் 30, 31-ஆம் தேதிகளில் கூடியது.
பீம்ஸ்டெக்' என்பது வங்காள விரிகுடா கடலை ஒட்டியுள்ள நாடுகளின் கூட்டமைப்பு. ஆரம்பத்தில் வங்கதேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட பொருளாதாரக் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.1997-இல் மியான்மரும் உறுப்பு நாடாக இணைந்தபோது பீம்ஸ்டெக்' என்று பெயரிடப்பட்டது. நேபாளமும், பூடானும் வங்காள விரிகுடா கடலை ஒட்டிய நாடுகளாக இல்லாவிட்டாலும் கூட, இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க 2004-இல் பீம்ஸ்டெக்'கில் இணைத்துக் கொள்ளப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளாகவே, நமது வெளியுறவுக் கொள்கையில், அண்டை நாடுகள் முதலில்', கிழக்கு நோக்கிய பார்வை' என்று சில கொள்கைகளை வகுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைப் பொருத்தவரை, 'சார்க்' அமைப்பு பலவீனம் அடைந்துவிட்ட நிலையிலும், இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவிட்ட நிலையிலும் பீம்ஸ்டெக்' அமைப்பை வலுப்படுத்துவதில், இப்போது இந்தியா அதிக கவனம் செலுத்துவதில் வியப்படைய ஒன்றுமில்லை. 
பாகிஸ்தானையும் மாலத்தீவையும் தவிர்த்த, இந்தியாவின் ஏனைய அண்டைய நாடுகள் பீம்ஸ்டெக்' அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவும் வணிகத் தொடர்பும் கொண்டிருக்கும் மியான்மரும் தாய்லாந்தும் பீம்ஸ்டெக்'கின் உறுப்பினர்கள். இது நமது வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றதாக இருப்பதால், நரேந்திர மோடி அரசு பீம்ஸ்டெக்'குக்கு முக்கியத்துவம் அளிக்க முன் வந்திருப்பது ஆச்சரியப்படுத்தவில்லை.
பீம்ஸ்டெக்'கின் உறுப்பு நாடுகளில், உலக மக்கள்தொகையில் 22% வகிக்கின்றனர். ஏறத்தாழ 150 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அமைப்பின் மொத்த ஜிடிபி சுமார் 2.7 டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.194.18 லட்சம் கோடி). அதனால்தான், இந்தியா இந்த அமைப்பை தெற்காசியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையேயான பாலமாக கருதுகிறது.
எந்தவொரு மாநாட்டின் வெற்றியும், அந்த மாநாட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் எடை போடப்படும். காத்மாண்டில் நடந்து முடிந்த நான்காவது பீம்ஸ்டெக்' மாநாட்டில் ஒரேயொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே கையொப்பமிடப்பட்டிருக்கிறது என்பதால் இதுகுறித்த வெற்றி தோல்விக் கணக்குகளை எடைபோட முடியவில்லை. அதேநேரத்தில் கூர்ந்து கவனிக்கும்போது, இந்த மாநாடு சில நம்பிக்கையூட்டும் செய்திகளைத் தெரிவிக்கிறது.
உறுப்பு நாடுகளின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அமைதியான, வளமை மிக்க வங்காள விரிகுடாவை உறுதிப்படுத்துவதுதான் எங்களது நோக்கம்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது, மறைமுகமாக இந்த மாநாடு தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை உணர்த்துகிறது. 
இம்மாநாடு, வேளாண் தொழில் நுட்பப் பரிமாற்றம், தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பருவநிலை மாற்றம், அதிகரித்த வணிகம் மற்றும் முதலீடு, உறுப்பு நாடுகள் மத்தியில் நுழைவு அனுமதியை சுலபமாக்குவது உள்ளிட்ட பல பிரச்னைகளை விவாதித்தது. வணிகம் மற்றும் முதலீடு, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, எரிசக்தி, சுற்றுலா, தொழில்நுட்பம், மீன் வளம், வேளாண்மை, பொது சுகாதாரம், வறுமை ஒழிப்பு, கலாசாரக் கூட்டுறவு, தீவிரவாதத்துக்கும் குற்றச் செயல்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் என்று இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் பல பொதுவான பிரச்னைகளில் கைகோத்து செயல்படுவதில் ஆர்வம் காட்டுகின்றன. அவர்களது ஆர்வம் நடைமுறை செயல்பாடாக மாறினால், பிரிக்ஸ்' அமைப்பைப் போல வலுவான கூட்டுறவு அமைப்பாக பீம்ஸ்டெக்' மாறக்கூடும். அதற்கான முன்னோட்டமாகத்தான் காத்மாண்டு மாநாட்டைக் கருத வேண்டும்.
இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகம், பீம்ஸ்டெக்' குறித்து அளவுக்கதிகமான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டுவிடக் கூடாது. நேபாளம் உள்ளிட்ட சில உறுப்பு நாடுகள் பீம்ஸ்டெக்'கையும் சார்க்கை'யும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகத்தான் காண்கிறார்கள். 
மேலும், பீம்ஸ்டெக்'கின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஏதாவதொரு வகையில் சீனாவுடன் பொருளாதார ரீதியாக நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவும் இந்த நாடுகளுக்கெல்லாம் கணிசமான முதலீட்டை வழங்கி இருக்கிறது. அதனால், பீம்ஸ்டெக்'கை இந்தியாவின் தலைமையிலான வலிமையான நட்புறவு அமைப்பாகக் கருதிவிடாமல், பொருளாதாரக் கூட்டுறவின் மூலம் வணிகத்தையும் சுற்றுலாவையும் அதிகரித்துக்கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே நாம் கருதவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com