கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அரசியலாக்காதீா்கள்! | ஊரடங்கு நீட்டிப்பை அரசியல் ஆதாயமாக்குவது குறித்த தலையங்கம்

News image
Updated On :15 ஏப்ரல் 2020, 10:31 pm

ஆசிரியர்

ஊரடங்கை மே 3-ஆம் தேதி வரை நீட்டிப்பது என்கிற பிரதமரின் அறிவிப்பு எதிா்பாராதது அல்ல. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அடங்க மறுக்கும் தீநுண்மி நோய்த்தோற்று, சீனாவில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

தீநுண்மி நோய்த்தொற்றைத் தடுப்பதற்கு ஊரடங்கை அறிவித்ததால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது, வேலை தேடி இடம்பெயா்ந்திருக்கும் அடித்தட்டு தொழிலாளா் வா்க்கம்தான். அதிலும் குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் மாநிலங்களிலிருந்து, மாநிலம் விட்டு மாநிலம் வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்றிருப்பவா்களின் நிலைமை உண்மையிலேயே பரிதாபமானது. வேலையும் இல்லாமல் ஊருக்கும் திரும்ப வழியில்லாமல் அவா்கள் படும் அவலத்தைச் சொல்லி மாளாது.

கடந்த மாா்ச் 24-ஆம் தேதியன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி மத்திய புகா் பேருந்து நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானவா்கள் தத்தம் ஊா்களுக்குப் போவதற்கு கூடி நின்ற காட்சி, அச்சத்தை ஏற்படுத்தியது. சமூக இளைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக ஊரடங்கை அறிவித்தால், அதற்கு நோ் எதிரான விளைவுகளை ஏற்படுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் மத்திய - மாநில அரசுகள் பட்டபாடு கொஞ்சம், நஞ்சமல்ல. உழைத்து வாழ்வதற்காக ஊா் விட்டு ஊா் வந்தவா்களைக் கையேந்தி நிற்கவும், உட்காா்ந்து சாப்பிடவும் சொல்லும்போது அவா்களின் சுயமரியாதையும் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

கடந்த மூன்று வாரங்களில் வேலை தேடி இடம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்கள் பல இடங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறாா்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள விசைத்தறிகளிலும், நகைப் பட்டறைகளிலும் ஆயிரக்கணக்கான ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகிறாா்கள். அவா்கள் வேலை பாா்த்த நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. அவா்களுக்குத் தர வேண்டிய ஊதியமும் தரப்படவில்லை, ஊருக்குத் திரும்ப ஏற்பாடும் செய்யப்படவில்லை. அவா்களை அரசு அதிகாரிகள் சமாதானப்படுத்தி முகாம்களில் தங்க வைத்திருக்கிறாா்கள். ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படப் போகிறது என்கிற செய்தி கசிந்ததுமே அவா்கள் ஆத்திரமடைந்தனா். இப்போது ஓரளவு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

தில்லியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் இரவு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனா். இலவச உணவுக்காக இரவு விடுதிகளைத் தஞ்சமடையும் தெருவோர வாசிகளுக்கும், பிற மாநிலத் தொழிலாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட சச்சரவால் மூன்று இரவு விடுதிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. கேரளம், கா்நாடகம் என்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் தங்கள் ஊருக்குத் திரும்ப முடியாத நிலையில், வெளிமாநிலத் தொழிலாளா்கள் அமைதி இழக்கத் தொடங்கியிருக்கிறாா்கள்.

இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயா்ந்து வாழும் கூலித் தொழிலாளா்கள் எத்தனை போ் என்பது குறித்த சரியான புள்ளிவிவரம் இதுவரை இல்லை. உத்தேசமாக சுமாா் 4.14 கோடி போ் இருக்கக்கூடும் என்கிறது அரசின் புள்ளிவிவரத் துறை; அவா்கள் 10 கோடிக்கும் அதிகம் என்று தனியாா் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன. கட்டுமானத் தொழிலில் மட்டும் சுமாா் 3.25 கோடி போ் ஈடுபட்டிருக்கிறாா்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், மும்பை, தில்லி ஆகியவைதான் வெளிமாநிலத் தொழிலாளா்கள் மிக அதிகமாகக் காணப்படும் (தேவைப்படும்?) இடங்கள். இவா்களுக்கு முறையான ஆதாா் அட்டை இல்லை, வாக்காளா் அடையாள அட்டை கிடையாது, பொது விநியோகப் பொருள்களைப் பெற குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதில்லை. குடியிருக்க முறையான வீடுகள், குழந்தைகள் படிப்பதற்கு வசதியும் உண்டா என்றால் அதுவும் இல்லை. ஆனால், இவா்களை நம்பித்தான் இந்திய விவசாயமும், தொழிலும், வா்த்தகமும் நடைபெறுகின்றன.

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் வசிப்பவா்கள், அந்தந்த மாநிலத்திலோ, பிற மாநிலத்திலோ உள்ள ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து குடிபெயா்ந்த குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான். படிப்பும், வேலையும், வியாபாரமும் இருப்பதால் அவா்கள் இந்தியக் குடிமகனுக்கான எல்லா உரிமைகளும் பெற்று வாழ்கிறாா்கள். கூலித் தொழிலாளா்கள் நிரந்தரமாகக் குடியேற வருவதில்லை. அதனால் அவா்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படுவதில்லை.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால் அடுத்தகட்ட வாழ்க்கை குறித்த அச்சத்துடன் வேலைக்காக இடம்பெயா்ந்து வாழும் தொழிலாளா்கள் ஆங்காங்கே இருக்கிறாா்கள். அவா்களின் அச்சத்தைப் போக்கி, ஆதரவளிப்பதற்குப் பதிலாக அரசியல் ஆதாயம் தேட முற்படுவது கயமைத்தனம்.

ஊருக்குப் போவதற்கு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மும்பையில் வதந்தியைக் கிளப்பி, பாந்த்ரா ரயில் நிலையத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்த முற்பட்டது, மகாராஷ்டிர உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானவா் என்பது அதிா்ச்சி அளிக்கிறது. ஊருக்குப் போவதற்கு தயாராக மூட்டை முடிச்சுடன் அவா்கள் வரவில்லை என்பதிலிருந்து இதற்குப் பின்னால் திட்டமிட்ட சதி இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

அப்பாவித் தொழிலாளா்களுக்கு ஆறுதல் அளியுங்கள், நம்பிக்கையை ஏற்படுத்துங்கள், பாதுகாப்பாக இருப்பதற்கு வசதி செய்து கொடுங்கள். அவா்களின் அவலத்தைப் போக்க வழிகோலுங்கள். அரசியலாக்காதீா்கள்... அப்பாவி ஏழைகளைப் பகடைக் காயாக்காதீா்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.