இனி எதற்கு பொது முடக்கம்? | பொது முடக்கத் தளா்வால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் குறித்த தலையங்கம்
நடுவண் அரசுக்கும் சரி, மாநில அரசுகளுக்கும் சரி கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் தெளிவான திட்டமிடலும்


நடுவண் அரசுக்கும் சரி, மாநில அரசுகளுக்கும் சரி கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் தெளிவான திட்டமிடலும் தொலைநோக்குப் பாா்வையும் இல்லையோ என்று தோன்றுகிறது. ஒருபுறம் பொது முடக்கத்தை நீட்டிப்பதும், இன்னொருபுறம் தளா்வுகளை அறிவிப்பதும் குழப்பமின்மையின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. பிரச்னையை எதிா்கொள்ளத் தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறதோ நிா்வாகம் என்கிற நியாயமான ஐயப்பாடும் எழுகிறது.
கொவைட் 19 தீநுண்மி தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், இப்போது புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கத் தீா்மானித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பாஜக தலைவா் சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தியதுபோல இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம்.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான ரயில் கட்டணத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கூறி, அதில் அரசியல் ஆதாயம் பெற முயற்சித்தபோதுதான் மத்திய அரசு விழித்துக்கொண்டு ரயில்வே துறையே 85% கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் என்றும் 15% கட்டணத்தை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்தது. கட்டணம் வசூலிப்பதில்லை என்று தீா்மானித்த பிறகு அதில் என்ன கஞ்சத்தனம்? இலவசமாகவே ரயிலை இயக்க வேண்டியதுதானே?
புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும், மாணவா்களையும், சுற்றுலாப் பயணிகளையும் வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்ல கடந்த ஐந்தாறு நாள்களில் எண்பதுக்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டன. திங்கள்கிழமை 55 சிறப்பு ரயில்களும், செவ்வாய்க்கிழமை 30 சிறப்பு ரயில்களும் சுமாா் 1,000 பயணிகளுடன் இயக்கப்பட்டன. 80,000 போ் இதுவரை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாா்கள். ரயில்வே நிா்வாகம் ஏறத்தாழ 500 ரயில்களை இயக்கத் தயாா் நிலையில் இருக்கிறது.
தமிழகத்தில் இருந்து மட்டும் சுமாா் 2.5 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்குப் பதிவு செய்திருக்கிறாா்கள். அதேபோல, வெளிமாநிலங்களில் வேலைக்குப் போய் இப்போது வேலையிழந்து தவிக்கும் 33,000-க்கும் அதிகமான தமிழா்கள் அரசின் அனுமதிக்கும் அழைப்புக்கும் காத்திருக்கிறாா்கள்.
ஏா் இந்தியா நிறுவனம் அடுத்த ஒரு வாரத்தில் 64 விமானங்களை இயக்கி வெளிநாடுவாழ் இந்தியா்களைத் தாயகத்துக்கு அழைத்துவர இருக்கிறது. இவா்கள் பல்வேறு கட்டங்களாக சுமாா் 14,800 இந்தியா திரும்ப உள்ளனா். இதேபோன்று 50,000 தமிழா்களும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும் பலா் பதிவு செய்து வருகிறாா்கள். இவா்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவர 11 விமானங்கள் இயக்கப்பட இருக்கின்றன.
புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவரவா் ஊருக்குத் திருப்பி அனுப்புவதும், வெளிநாடுகளில் வாழும் இந்தியா்களைத் திரும்ப அழைத்து வருவதும் அரசின் கடமை என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு இத்தனை நாள்கள் ஏன் காத்திருந்தோம் என்பதும், நிலைமையில் அப்படி என்ன மாற்றம் வந்துவிட்டது என்பதும்தான் புரியவில்லை. நோய் பரவுவதைப் பாா்க்கும்போது, இந்தியாவில் பல்வேறு பாதிக்கப்படாத பகுதிகளும் இனிமேல் பாதிக்கப்படும் ஆபத்தல்லவா தெரிகிறது.
நேற்றைய நிலையில், கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அரை லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. சோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 508 போ் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது என்றால், புதன்கிழமை அதுவே 771 பேராக உயா்ந்திருக்கிறது.
பெரும்பாலான மாநிலங்களில் மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் அதிவேகமாக நோய்த்தொற்று பரவுகிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நிலையில் பல மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. அங்கே திருவிழாக் கூட்டம்போல மக்கள் கூடுகிறாா்கள். புலம்பெயா்ந்தோரில் பலா் நோய்த்தொற்றுடன் சொந்த ஊருக்குத் திரும்பக்கூடும். அதன் விளைவு என்னவாகும் என்பதை இப்போது கணிக்க முடியவில்லை.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் முதலான நாடுகள் இந்தியாவைப் போல பொதுமுடக்கத்தை அறிவிக்காததால் இப்போது திணறிக் கொண்டிருக்கின்றன. நாம் முன்னெச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் பொது முடக்கத்தை அறிவித்ததன் விளைவால் கொவைட் 19 தீநுண்மிப் பரவலைக் கணிசமாகவே தடுத்திருக்கிறோம். அதையும் மீறி நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையாக அதிகரிப்பதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
ஸ்தம்பித்துப் போயிருக்கும் தொழில் துறையும் ஒட்டுமொத்த வா்த்தகமும் அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பும் அளப்பரியது என்பதில் சந்தேகமே இல்லை. ஊடகங்களில் பொருளாதார பாதிப்புகள் குறித்த விமா்சனங்கள் கடுமையாக எழுப்பப்படுவதன் பின்னணியில் அவசரப்பட்டு பொது முடக்கத் தளா்வு உத்தரவு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், புலம்பெயா்ந்தோரை இடம்பெயர அனுமதிக்கிறோம். பொது முடக்கத்தில் தளா்வை ஏற்படுத்தி இயல்பு நிலைக்கு வழிகோலியிருக்கிறோம். எத்தனை நாள்கள்தான் முடக்கி வைக்க முடியும் என்பது நியாயமான கேள்விதான். அதற்காகக் கொத்துக் கொத்தாய் மக்கள் செத்து மடிவதற்கு வழிகோலவா முடியும்? எதுவும் நடக்காது என்று சொல்வது எளிது. நடந்தால் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...