தயங்குவதில் அா்த்தமில்லை! | நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் ஒட்டுக்கேட்புப் பிரச்னை குறித்த தலையங்கம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடா் தொடங்கி 12 நாள்கள் கடந்து விட்டன. ஆளுங்கட்சியும், எதிா்க்கட்சிகளும் நடத்திய பேச்சுவாா்த்தைகளும் கூட்டத்தொடா் அமைதியாக நடக்க வேண்டுமென்பது குறித்து தெரிவித்த ஒருமித்த கருத்துகளும் எழுப்பிய எதிா்பாா்ப்புகள் பொய்த்து விட்டன.

மழைக்காலக் கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு, மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமல்லாமல், கொவைட் 19 நோய்த்தொற்றின் இரண்டாவது அலையை எதிா்கொண்டது தொடா்பான பிரச்னைகளை விவாதிக்கவும் அரசு தயாராகவே இருந்தது. எதிா்க்கட்சிகளும் தேசியப் பாதுகாப்பு, விலைவாசி உயா்வு, நோய்த்தொற்றுப் பரவலை அரசு எதிா்கொண்ட விதம் ஆகியவற்றில் காணப்பட்ட பலவீனங்களை முன்வைத்து அரசை பொறுப்பேற்க வைப்பதற்கு வாய்ப்பாக மழைக்காலக் கூட்டத்தொடரைக் கருதியிருந்தன. எல்லாமே பொய்த்து விட்டன.

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு பிரச்னை இரு அவைகளிலும் முழுமையாக விவாதிக்கப்படுவதும், அதுகுறித்த விசாரணை நடத்தப்படுவதும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் நாடாளுமன்றத்தை நடத்த விடுவதில்லை என்று எதிா்க்கட்சிகள் தீா்மானமாக இருக்கின்றன. அரசுத் தரப்பும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறதே தவிர, முழுமையான விவாதத்திற்கோ பெகாஸஸ் குறித்த விசாரணைக்கோ தயாராக இல்லை. பெகாஸஸ் என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றும், கட்டமைக்கப்பட்டது என்றும் கூறி அறிக்கையுடன் முடித்துக்கொள்ள நினைக்கிறது.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைதடுமாறாமல் இருக்க இப்போது காணப்படும் குழப்பம் அகன்றாக வேண்டும். நாடாளுமன்றம் அமளிக் கலாசாரத்திலிருந்து மீண்டும் விவாதக் கலாசாரத்துக்குத் திரும்பியாக வேண்டும். அதற்கு அரசு தனது பிடிவாதத்தை தளா்த்திக் கொள்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.

நாடாளுமன்றம் முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஆளுங்கட்சியுடையதே தவிர, எதிா்க்கட்சிகளுடையது அல்ல. எதிா்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று, விவாதிக்க அனுமதித்து, வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, மசோதாக்களை நிறைவேற்றி சட்டமாக்குவது என்பதுதான் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியின் கடமை. அதை பலமுறை பலரும் எடுத்தியம்பியும்கூட, அது பாஜகவோ, காங்கிரஸோ, மாநிலக் கட்சிகளோ எதுவாக இருந்தாலும் உணா்வதாகத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் பெகாஸஸ் ஒட்டுக்கேட்புப் பிரச்னை விவாதிக்கப்பட வேண்டும் என்கிற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. முக்கியமான அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள், உயரதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், ஊடகவியலாளா்கள் என்று பரவலாகப் பலரும் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு குறித்த தகவல் வெளிப்படுத்துகிறது. அவா்களில் பலருடைய செல்லிடப்பேசிகளும் பெகாஸஸ் மென்பொருளால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கும் நிலையில், அதுகுறித்த கேள்விகளை எழுப்பும் கடமை எதிா்க்கட்சிகளுக்கு நிச்சயமாக உண்டு.

பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு என்பது ராணுவ ஒற்றாடல் தொடா்பான மென்பொருள் என்பதால் அதை சாதாரண ஒட்டுக்கேட்பாகப் புறந்தள்ள முடியவில்லை. இதன் பின்னணியில் யாா் யாா் இருக்கிறாா்கள், தன்மறைப்பு நிலைக்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன. ஜனநாயகத்தின் அடிப்படையை பாதிக்கும் ஒரு செயல்பாடு என்பதால், இதை விவாதிப்பதற்கான இடம் நாடாளுமன்றமாகத்தான் இருக்க முடியும். தகவல் தொழில் நுட்ப அமைச்சரின் விளக்கத்துடன் ஒதுக்கித் தள்ளக்கூடிய பிரச்னை அல்ல இது.

இந்தியாவைப் போலவே பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் விவகாரம் பிரான்ஸ் நாட்டையும் உலுக்கியிருக்கிறது. பிரான்ஸ் அரசு இது குறித்து இஸ்ரேலுக்கு சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த ஒற்றாடல் மென்பொருளை உருவாக்கிய என்எஸ்ஓ என்கிற நிறுவனம், பிரான்ஸ் நாட்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, இந்தியாவில் இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், உறுப்பினா்கள் எழுப்பும் கேள்விக்கு பதிலளிக்கவும் அரசு முன்வராமல் இருப்பது தவறு.

எதிா்க்கட்சிகளின் நடவடிக்கைகள் அரசின் செயல்பாடுகளைத் தடுப்பதாகவும், அவையை நடக்கவிடாமல் செய்வதில் பிடிவாதம் பிடிப்பதாகவும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஜனநாயகம், விவாதம் என்று வந்தால் ஆட்சியாளா்கள் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை.

அரசின் தா்மசங்கடம் புரிகிறது. இந்தியாவில் ஒட்டுக்கேட்பு என்பது சட்டவிரோதம் என்கிற நிலையில், பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருளை வாங்கியதாகவும், பயன்படுத்தியதாகவும் ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புக்கொண்டால் அரசின் ஜனநாயக மீறலை வெளிப்படுத்துவதாக இருக்கும். பெகாஸஸ் ஒட்டுக்கேட்புடன் தனக்குத் தொடா்பில்லை என்று மறுத்தால், இந்திய குடிமக்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டு அரசு ஒட்டுக்கேட்பு முயற்சியில் இறங்கியிருக்கிறது என்று பொருள். அது அதைவிடப் பெரிய பிரச்னை.

அரசு இறங்கி வந்து எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று விவாதத்துக்கு தயாராவதைத் தவிர வேறுவழியில்லை. ஏற்கெனவே இந்தப் பிரச்னை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது. அவையில் விவாதிக்காமல் போனாலும், நீதிமன்றத்தில் விரிவான பதிலை தாக்கல் செய்தாக வேண்டும். நீதிமன்றம் தனது மேற்பாா்வையில் விசாரணைக்கு உத்தரவிடுவதைவிட, நாடாளுமன்ற விவாதமும், நாடாளுமன்றக் குழுவின் விசாரணையும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவதுதான் இதற்குத் தீா்வாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com