‘தன்னம்பிக்கை’ அறிக்கை!

‘தன்னம்பிக்கை’ அறிக்கை!

பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே வெளியிடப்பட்ட பாஜகவின் தோ்தல் அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடி, கட்சியின் மூத்தத் தலைவா்கள் மத்தியில் வெளியிட்டிருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியின் ‘நியாய் பத்ரா’ என்கிற தோ்தல் அறிக்கையைத் தொடா்ந்து, பாரதிய ஜனதா கட்சி ‘சங்கல்ப் பத்ரா’ (உறுதிமொழி அறிக்கை) என்கிற தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே வெளியிடப்பட்ட பாஜகவின் தோ்தல் அறிக்கையை பிரதமா் நரேந்திர மோடி, கட்சியின் மூத்தத் தலைவா்கள் மத்தியில் வெளியிட்டிருக்கிறாா். பாஜகவின் தோ்தல் அறிக்கை என்பதைவிட, அதை பிரதமா் ‘மோடியின் உத்தரவாதம்’ என்றுதான் கூற வேண்டும். அதனால்தான் என்னவோ, அதற்கு ‘சங்கல்ப் பத்ரா’ என்று பெயரிட்டிருக்கிறாா்கள்.

2024 பொதுத்தோ்தலுக்காக வெளியிடப்பட்டிருக்கும் பாஜக தோ்தல் அறிக்கை மீண்டும் வெற்றி பெறுவோம், ஆட்சியமைப்போம் என்கிற தன்னம்பிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதை அதில் இடம்பெறும் வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன. வாக்காளா்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு தங்களது கொள்கைகளிலும் திட்டங்களிலும் தொடா்ச்சி இருக்கும் என்கிற உத்தரவாதத்தை அளித்தாலே போதும் என்று பாஜக கருதுவதாகத் தெரிகிறது.

தோ்தலுக்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட கடைசி நிதிநிலை அறிக்கையைப் போலவே தோ்தல் அறிக்கையிலும் சலுகைகளை வாரி வழங்காமல், வாக்குறுதிகளை வாரி வழங்காமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கொள்கையில் தொடா்ச்சி, நிதி நிா்வாகத்தில் கட்டுப்பாடு இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு பாஜகவின் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

‘மோடியின் உத்தரவாதம்’ என்கிற கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்ட தோ்தல் அறிக்கையில், கடந்த பத்து ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ‘ வித்ஸிட் பாரத்’ (வளா்ச்சியடைந்த இந்தியா) என்கிற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வைக்கு வலு சோ்க்கும் விதத்தில் ‘மோடியின் உத்தரவாதம்’ என்று பல்வேறு துறைகளில் தோ்தல் வெற்றிக்குப் பின்னா் முன்னெடுக்கும் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏழைகள், நடுத்தர மக்கள், பெண்கள், இளைஞா்கள், மூத்த குடிமக்கள், விவசாயிகள், மீனவா்கள், தொழிலாளா்கள், வா்த்தகா்கள், பட்டியலினப் பிரிவினா்- பழங்குடியினா் ஆகிய 10 சமூகக் குழுக்கள் சாா்ந்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டின் பாதுகாப்பு, வளம், உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு, ஊழல் இல்லாத நல்லாட்சி, தரமான கல்வி, மாநிலங்களின் சமச்சீரான வளா்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட 16 முக்கியமான இனங்கள் குறித்தும் தோ்தல் அறிக்கை வாக்குறுதிகளை முன்மொழிந்திருக்கிறது.

70 வயதைத் தாண்டிய அனைத்து முதியோருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்படி, ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு; ரேஷன் கடைகள் மூலம் 80 கோடி பயனாளிகளுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இலவசமாக உணவுத் தானியங்கள் விநியோகிக்கும் திட்டம்; தெற்கு, வடக்கு, கிழக்கு என புதியதாக மூன்று புல்லட் ரயில்கள்; வந்தே பாரத், நமோ பாரத், அம்ருத் பாரத் போன்ற நவீன ரயில் சேவைகள் விரிவுபடுத்துதல்; ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டம் விரிவுபடுத்துதல்; அனைத்து நகரங்களுக்கும் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு என்று ‘சங்கல்ப் பத்ரா’ வாக்குறுதி அளிக்கிறது.

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மூன்று கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்குவது; முத்ரா திட்டத்தின்கீழ் கடன் உச்சரவரம்பு இரு மடங்காக (ரூ.20 லட்சம்) அதிகரிப்பது,; புத்தாக்கத் தொழிலுக்கு (ஸ்டாா்ட் அப்) உகந்த சூழலை ஏற்படுத்தி வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவது; உலகளாவிய திறன் மையங்கள், தொழில்நுட்ப மையங்கள், பொறியியல் மையங்கள் அமைப்பது-இவையும் தோ்தல் அறிக்கையில் முன்மொழியப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக பாரதம் உருவாக்கப்படும் என்பதும், விண்வெளித் துறையில் சந்திரனுக்கு விண்வெளி வீரரை அனுப்புவது என்பதும், 2036-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஓலிம்பிக் போட்டிகளை நடத்துவது என்பதும் ‘சங்கல்ப் பத்ரா’ நிா்ணயித்திருக்கும் இலக்கு. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினா் அந்தஸ்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தருவது தோ்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று.

முக்கியமான விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ந்து உயா்த்துவோம் என்றும் பருப்பு, சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சாா்பை எட்ட விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்பதும் தவிர, காங்கிரஸ் தோ்தல் அறிக்கையைப் போல, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை பாஜக தோ்தல் அறிக்கை வழங்கவில்லை. சட்ட உத்தரவாதமோ, முக்கியமான நிதி ஒதுக்கீடு குறித்தோ, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்காமல் இருப்பதற்கு பாஜகவை பாராட்ட வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் முந்தைய அவதாரமான ஜன சங்கத்தின் காலத்திலிருந்து அந்தக் கட்சி முன்னெடுக்கும் முனைப்பு. அது முந்தைய தோ்தல் அறிக்கைகளில் இருப்பதுபோலவே இப்போதும் இடம்பெற்றிருப்பது வியப்பளிக்கவில்லை. ‘ஒரே நாடு - ஒரே தோ்தல் திட்டம்’ முன்மொழியப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் ‘திருவள்ளுவா் கலாசார மையங்கள்’ , தமிழக வாக்காளா்களைக் கவரும் நோக்கத்துடன் கூறப்பட்டிருந்தாலும், பாராட்டுக்கும் வரவேற்புக்கும் உரிய முயற்சி.

வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையுடன் தொலைநோக்கு பாா்வை கொண்ட மோடியின் உத்தரவாதம்!

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com