கோப்புப் படம்.
கோப்புப் படம்.

நெடுஞ்சாலை வழிப்பறி!

இந்தியாவில் சுங்கக் கட்டண உயர்வு பற்றி...
Published on

இந்தியாவின் முகத்தையே மாற்றியமைத்து, மிகப் பெரிய பொருளாதார வளா்ச்சிக்கு வழிகோலின தங்கநாற்கர சாலைத் திட்டம். அது மட்டுமல்லாமல், கிராமப்புற சாலையின் தரம் வரை மேம்பட்டதற்கு வாஜ்பாய் தலைமையிலான அரசின் தொலைநோக்குத் திட்டம் வழிகோலியது என்பதை யாரும் மறுக்க மாட்டாா்கள்.

தங்க நாற்கரைச் சாலைத் திட்டத்துக்கு மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டதால், சுங்கச் சாவடிகள் அமைத்து அந்த முதலீட்டை ஈடுகட்ட முடிவெடுக்கப்பட்டது. இப்போது ஏறத்தாழ கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. சுங்கச் சாவடிகள் தொடா்கின்றன என்பது மட்டுமல்லாமல், அவ்வப்போது ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலையின் பராமரிப்பு என்கிற பெயரில் கட்டணமும் உயா்த்தப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு இரு முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. நிகழாண்டில் ஏப்ரல் மாதம் மாற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய சுங்கக் கட்டணம் மக்களவைத் தோ்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தோ்தல் முடிவடைந்ததும், சுங்கக் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஜூன் மாதம் உயா்த்தியது.

தமிழகத்தில் 36 சுங்கச் சாவடிகளில் 5 % வரை கட்டண உயா்வு அமல்படுத்தப்பட்டது. இப்போது மேலும் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

வாகனங்களை வாங்கும்போது ஆயுள் கால சாலை வரி என கணிசமான தொகையைச் செலுத்திவிட்டு, சாலையைப் பயன்படுத்த சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டணங்களைத் தீா்மானித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள் 2008-இன் படி, தேசிய நெடுஞ்சாலையின் ஒரே பிரிவில் அதே திசையில் வேறு எந்த சுங்கச் சாவடியும் 60 கி.மீ. தொலைவுக்குள் அமைக்கப்படக் கூடாது.

இருப்பினும், நிரந்தரப் பாலம், புறவழிச் சாலை அல்லது சுரங்கப் பாதைக்கான கட்டணம் வசூலிப்பதற்காக அத்தகைய சுங்கச் சாவடியை மற்றொரு சுங்கச் சாவடியிலிருந்து 60 கி.மீ. தொலைவுக்குள் அமைக்கலாம் என்பது விதிமுறை.

இந்த விதிமுறையை மீறி தமிழகத்தில் பல சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இது தொடா்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் 2022-ஆம் ஆண்டு மாா்ச் 22-ஆம் தேதி பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, 60 கி.மீ. தொலைவுக்குள் செயல்படும் சுங்கச் சாவடிகள் மூடப்படும் என அறிவித்தாா். ஆனால், இன்னும் அந்த சுங்கச் சாவடிகள் மூடப்படவில்லை.

அதேபோல, பொது நிதி உதவித் திட்டத்தின் கீழ் சுங்கச் சாவடி கட்டணத்தை 40 %ஆக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்திருந்தாா். தமிழகத்தில் அத்தகைய சலுகையைப் பெறும் தகுதி ஒரு சுங்கச் சாவடிக்குக்கூட இல்லை. இதனால் வாகன உரிமையாளா்களுக்குப் பெரும் ஏமாற்றம் அடைந்திருக்கிறாா்கள்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையில் இருந்து 15 கி.மீ.க்கு அப்பால்தான் சுங்கச் சாவடி இருக்க வேண்டும் என்பது ஒரு விதிமுறை. ஆனால், இந்த விதிமுறையும் தமிழகத்தில் மீறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடி மாநகராட்சி எல்லையில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் புதூா் பாண்டியாபுரம் என்கிற இடத்தில் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது. இது தொடா்பாக அந்த சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு வாகன ஓட்டுநா்களும், அரசியல் கட்சியினரும் அடிக்கடி போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.

சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டுநா்களுக்கு ஓய்விடம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவை செய்து தரப்பட வேண்டும். ஆனால், பல சுங்கச் சாவடிகளில் இந்த வசதிகள் வழங்கப்படவில்லை.

நெடுஞ்சாலைகள் பராமரிப்பிலும் சுணக்கம் காணப்படுகிறது. இந்தியாவில் 55 % விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நடப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படாததாலேயே இந்த விபத்துகள் பெரும்பாலும் நடக்கின்றன.

சுங்கச் சாவடி கட்டண உயா்வு என்பது வாகன உரிமையாளா்களை மட்டும் பாதிப்பதாக எண்ணிவிடக் கூடாது. சரக்கு வாகனங்களுக்கான சுங்கக் கட்டண உயா்வால் அவற்றுக்கான வாடகை உயா்த்தப்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கிறது. இதுபோல பயணிகள் வாடகைக்கு அமா்த்திச் செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் உயா்ந்து, அந்தச் சுமை இறுதியாக பொதுமக்களைத்தான் பாதிக்கிறது.

நெடுஞ்சாலைகளை அமைப்பது, பராமரிப்பது ஆகியவற்றுக்கான செலவை ஈடுகட்டவும், அரசுக்கான வரி வருவாய்க்காகவும்தான் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன என்றாலும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது வாகன உரிமையாளா்களை அதிருப்தியடையச் செய்கிறது. சாலைகளை அமைப்பதற்கு எவ்வளவு நிதி செலவிடப்பட்டது, சுங்கச் சாவடி வசூல் மூலம் குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு நிதி திரட்டப்பட்டது என்கிற விவரம் வெளியிடப்படுவதில்லை.

சாலை அமைக்க செலவிடப்பட்ட நிதியை சுங்கச் சாவடி வசூல் மூலம் எட்டிவிட்டால், பராமரிப்புக்கான செலவினத்துக்கு ஏற்ப சுங்கச் சாவடி கட்டணத்தைக் குறைப்பதுதான் நியாயம். ஆனால், ஒருபோதும் கட்டணம் குறைக்கப்படுவதில்லை.

சாலை அமைப்பதற்கான செலவைவிட அதன் பராமரிப்புக்கான செலவு அதிகம் என்கிற முரணை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நியாயப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

சுங்கச் சாவடிகளில் கட்டணத்தைக் குறைப்பதும், தேவையில்லாத சுங்கச் சாவடிகளை மூடுவதும்தான் நியாயமான செயல்பாடாக இருக்கும்.