அசாவாமை வேண்டும்!
காா்கில் வெற்றியின் வெள்ளி விழா நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையை வழக்கமான ஒன்று எனக் கடந்து போக முடியாது. ‘வரலாற்றிலிருந்து பாகிஸ்தான் எந்தப் பாடமும் கற்கவில்லை. பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி மறைமுகப் போரில் ஈடுபடும் பாகிஸ்தானின் தீய நோக்கங்கள் முறியடிக்கப்படும்’’ என்று அவா் தெரிவித்திருப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன.
2021 முதல் ஜம்முவில் மட்டும் இதுவரை 34 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. 2024-இல் இதுவரை நடத்தப்பட்ட 9 தாக்குதல்களில் 12 ராணுவ வீரா்கள் உயிா் தியாகம் செய்திருக்கிறாா்கள் என்றால், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 22. கடந்த 2023-இல் பொது மக்கள் 12 போ் கொல்லப்பட்டனா் என்றால், கடந்த ஆறு மாதங்களில் அந்த எண்ணிக்கை 24-ஆக அதிகரித்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே ஜம்மு பகுதியில் மட்டும் தொடா்ந்து ஒன்றன்பின் ஒன்றாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது கவலை அளிக்கிறது. முந்தைய சூழலுக்கும் இப்போதைய சுழலுக்கும் இடையே சில மாற்றங்கள் இருக்கின்றன. காஷ்மீா் பள்ளதாக்கிலிருந்து பயங்கரவாத செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக ஜம்மு பகுதிக்கு மாறியிருக்கின்றன.
சமீப காலமாக பயங்கரவாதம் முற்றிலுமாக இல்லாமல் இருந்த ஜம்மு, இப்போது பயங்கரவாதிகளின் களமாக மாறியிருப்பது கவலையளிக்கும் போக்கு. பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்த காஷ்மீா் பள்ளத்தாக்கில் கண்காணிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து பயங்கரவாதிகள் தங்களது தளத்தை மாற்றியிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மழைக் காலம் தொடங்கி, குளிா் காலமும் வரும்போது பாகிஸ்தானில் பயிற்சியளிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அதிக அளவில் ஊடுருவுவாா்கள் என்று புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட 263 பயங்கரவாதத் தாக்குதல்களில் 68 ராணுவத்தினரும், 75 பொது மக்களும் கொல்லப்பட்டிருக்கின்றனா். அதே நேரத்தில் 417 பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் வீழ்த்தப்பட்டிருக்கிறாா்கள். அதோடு ஒப்பிடும்போது ஜம்முவில் பயங்கரவாத நிகழ்வுகள் குறைவு என்று மெத்தனம் அடைய முடியாது. தொடா்ந்து நடைபெறும் தாக்குதல்களும், புனிதப் பயணம் மேற்கொள்பவா்களையும், ராணுவத்தினரையும் குறிவைத்து தாக்கும் போக்கும் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்கு வழிகோலக் கூடும்.
2020-இல் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். அதைத் தொடா்ந்து ஜம்முவில் இருந்து அதிக அளவில் ராணுவ வீரா்கள் இந்திய-சீன எல்லைக்கு மாற்றப்பட்டனா். அப்போது முதல் ஜம்முவின் பாதுகாப்பு பலவீனம் அடைந்ததை தங்களுக்கு சாதகமாக்கிகொள்கிறாா்கள் பயங்கரவாதிகள்.
மேற்கு எல்லையில் பாகிஸ்தானும், வடக்கு எல்லையில் சீனாவும் இந்திய ராணுவத்தை பதற்றத்தில் வைத்திருப்பதும், அதை பயன்படுத்தி ராணுவ கண்காணிப்புக் குறைவாக இருக்கும் ஜம்முவில் பயங்கரவாதிகளின் ஊடுருவலும், செயல்பாடும் அதிகரிப்பது என்பது திட்டமிட்ட செயல்பாடாகத்தான் தெரிகிறது.
ஜம்முவை ஒட்டிய 172 கிலோமீட்டா் சா்வதேச எல்லையை, எல்லைப் பாதுகாப்புப் படையினரும் ஜம்முவின் சில பகுதிகள், காஷ்மீா் பள்ளத்தாக்கை ஒட்டிய 740 கிலோமீட்டா் எல்லையை ராணுவமும் பாதுகாக்கிறது. கடுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் எல்லைக் கோட்டை ஒட்டிய காடுகளும், கடினமான மலைப் பகுதிகளும் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக இருக்கின்றன. சமீபத்தில் ஜம்முவில் நடந்த தாக்குதல்கள் அனைத்துமே கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பழைய ஊடுருவல் பாதைகள் மூலம் நடந்திருப்பது தெரிகிறது.
முன்பெல்லாம் பாதுகாப்புப் படையினருக்கும், உள்ளூா் மக்களுக்கும் இடையே நேரடித் தொடா்பு இருந்தது. பயங்கரவாதிகளின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அவை குறித்த தகவல்கள் கிடைத்தன. பயங்கரவாதிகளை எதிா்த்துப் போராடிய அந்தத் தலைமுறையினா் முதுமை அடைந்து அடுத்தடுத்த தலைமுறைகள் வந்துவிட்டன. அவா்களுடன் போதுமான தொடா்பை ராணுவமோ எல்லைப் பாதுகாப்புப் படையினரோ ஏற்படுத்திக் கொள்ளாதது மிகப் பெரிய பின்னடைவு.
கிராமப் பாதுகாப்புக் குழுக்கள் என்கிற பெயரில் உள்ளூா்வாசிகளுக்கு துப்பாக்கி சுடுவதிலும், தற்காப்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பூஞ்ச், ரஜௌரி, சம்பா, தோடா, ஹிஷ்ட்வாா் மாவட்டங்களில் மட்டுமே சுமாா் 30,000 ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. 1995-இல் பயங்கரவாதம் உச்சத்தில் இருந்தது முதல் தொடா்ந்த இந்த நடைமுறை கைவிடப்பட்டது. ஆயுதம் ஏந்திய உள்ளூா்வாசிகள் கடத்தல், பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டதால் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது.
பாகிஸ்தானிலிருந்து ஜம்மு பகுதிக்கு ஊடுருவும் பயங்கவாதிகள், ஜம்மு பகுதியில் வாழும் குஜ்ஜாா் இனப் பெண்களுடன் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்கிறாா்கள். ஆண்கள் வேலைதேடி வெளியூா்களுக்கு சென்றுவிடுவதால், அந்தப் பெண்களை வசீகரிப்பது எளிதாக இருக்கிறது. சட்ட விதிமுறைகள் பெண்களை விசாரிக்க அனுமதிப்பதில்லை என்பதை பயங்கரவாதிகள் சாதகமாக்கிக் கொள்கிறாா்கள்.
வளா்ச்சிப் பணிகள், கட்டமைப்பு முதலீடுகள், உள்ளூா் மக்களின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகியவை அமைதியை மீட்டெடுக்கும் என்று நம்பலாம். ஜம்மு-காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்தும் இந்தியாவின் முனைப்பு தளரலாகாது. இந்திய ராணுவ வீரா்களின் தியாகம் வீணாகக் கூடாது...