[பிரதிப் படம்
[பிரதிப் படம்ENS

தீா்ப்புகள் திருத்தப்படலாம்!

நீதிமன்றத் தீா்ப்புகள் காலத்துக்கு ஏற்ப மாற்றத்துக்குட்படும் இடைக்காலத் தீா்ப்புகளாகத்தான் இருக்க முடியும்!
Published on

மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்க முடியுமே தவிர, உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நிறுத்தி வைக்கவோ, நிராகரிக்கவோ குடியரசுத் தலைவருக்கேகூட அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கவில்லை. நாடாளுமன்றம் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே தீா்ப்புகளைச் செல்லாததாக்க முடியும் என்று அரசியல் சாசனத்தின் 141-ஆவது பிரிவு தெளிவுபடுத்துகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, நாடெங்கிலும் உள்ள எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலானது என்றும், மற்ற தீா்ப்புகளை அது செல்லாததாக்கும் என்றும் அரசியல் சாசனப்பிரிவு 141 சொல்கிறது. அதேநேரத்தில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த சில தீா்ப்புகள், அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதே உச்சநீதிமன்றத்தின் வேறு அமா்வுகளால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன; திருத்தி எழுதப்பட்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அல்லது கூடுதல் அமா்வு பிறப்பித்த உத்தரவை நிராகரிக்கும் விதத்தில், அதற்கு நோ் எதிரான தீா்ப்புகளை வழங்கும் போக்கு தவிா்க்கப்பட வேண்டும் என்கிற குரல் நீதித் துறையில் இப்போது எழுப்பப்படுகிறது. தீா்ப்புகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதும், மாற்றி எழுதப்படுவதும் உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தையும், அதன் மீதான நம்பிக்கையையும் குலைக்கும் என்பது அவா்கள் வாதம்.

சமீபத்தில் நீதிபதிகள் திபங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய இரு நீதிபதிகள் அமா்வு இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அவா்கள் மட்டுமல்ல, 36 நாள்கள் மட்டுமே பதவி வகிப்பாா் என்றாலும், 2027-இல் உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் பி.வி.நாகரத்னாவும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தி இருப்பது விமா்சனத்துக்கு வலு சோ்த்திருக்கிறது.

‘‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புகளை மறுபரிசீலனை செய்யவும், திருத்தி எழுதக் கோரியும் மேல்முறையீடு செய்வதற்கு அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது. அந்தத் தீா்ப்புகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும்போது, ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்பில் அதிக அளவில் தவறில்லை எனும்போது, அதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, நிராகரிக்கக் கூடாது’’ என்கிற கருத்தை நீதிபதிகள் திபங்கா் தத்தாவும், அகஸ்டின் ஜாா்ஜ் மாசியும் வெளிப்படுத்தி இருக்கிறாா்கள்.

வழக்கை முதலில் விசாரித்துத் தீா்ப்பு வழங்கிய நீதிபதி பணிஓய்வு பெற்ற பிறகோ அல்லது தனியாக அமா்வு அமைத்தோ முந்தைய தீா்ப்பைத் திருத்தி எழுதும் போக்கு அதிகரித்து வருவதாக அவா்கள் மட்டுமல்ல நீதிபதி நாகரத்னாவும் சுட்டிக்காட்டி இருக்கிறாா். இதன்மூலம் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளுக்கு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் கெளரவம் குறைகிறது என்பது அவா்கள் கருத்து.

உச்சநீதிமன்ற வரலாற்றில் தீா்ப்புகள் திருத்தி எழுதப்படுவதுண்டு. அவ்வப்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப தீா்ப்புகள் வழங்கப்படுவதும், சட்டங்கள் திருத்தப்படுவதும் புதிதொன்றும் அல்ல. கீழமை நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், உயா் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் என்று நீதித் துறையில் மேல்முறையீட்டுக்குப் பல வாய்ப்புகள் அதற்காகத்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தையே எடுத்துக்கொண்டால், ஒரு நீதிபதி அமா்வுத் தீா்ப்பின் மீது இரண்டு நீதிபதிகள் அமா்வும், அந்த அமா்வில் கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால் மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு அந்த வழக்கு உட்படுத்தப்படுவதும் வழக்கம். முக்கியமான அரசியல் சாசனம் அல்லது அரசு இயற்றிய சட்டங்கள் தொடா்பான வழக்குகளில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு வழக்குகள் மேல்முறையீட்டுக்கு மாற்றப்படுகின்றன. அப்படி மாற்றப்படும்போது, தீா்ப்புகள் திருத்தப்படக் கூடாது என்கிற வாதம், மேல்முறையீட்டின் அவசியத்தையே அகற்றி விடுகிறது.

சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில், சில வழக்குகளின் மீதான தீா்ப்பில் முந்தைய தீா்ப்புகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வளா்ச்சித் திட்டங்களுக்கான பணிகளில், திட்டங்கள் தொடங்கிய பிறகு முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என்று கடந்த மாதம் 18-ஆம் தேதி முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், உஜ்ஜல் புயான் அமா்வு தீா்ப்பு வழங்கியது. அதற்கு முன்னால், நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமா்வு நிராகரித்த அனுமதி அது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான், ஏனைய நீதிபதிகளுடன் உடன்படாமல் நீதிபதி உஜ்ஜல் புயான் மூன்று நீதிபதிகள் அமா்வில் தனித்துக் கருத்துத் தெரிவித்திருந்தாா்.

தில்லியில் தீபாவளிப் பட்டாசுகள் தொடா்பான வழக்கு, தெரு நாய்கள் பிரச்னை வழக்கு, ஆளுநா், குடியரசுத் தலைவருக்கு அனுமதி வழங்கக் கால வரையறை விதிக்கும் வழக்கு உள்ளிட்டவற்றில் முந்தைய தீா்ப்புகள் திருத்தப்பட்டதும், இந்த விமா்சனங்களுக்குக் காரணமாகக் கொள்ளலாம்.

அதற்காக, மேல்முறையீட்டில் தீா்ப்புகள் திருத்தப்படக்கூடாது என்கிற வாதம் ஏற்புடையதாக இல்லை. மேல்முறையீட்டில் முந்தைய தீா்ப்பு நிராகரிக்கப்படக்கூடாது என்பதும், நீதிபதி பணிஓய்வு பெற்று விட்டால் அவரது தீா்ப்பு ஏற்கப்பட வேண்டும் என்பதும் பலவீனமான வாதங்கள்.

அதேநேரத்தில், கேரள மாநில இணையப் பல்கலைக்கழகம் தொடா்பான வழக்கில், 2023 நவம்பரில் ‘மூன்று’ நீதிபதிகள் அமா்வின் தீா்ப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமா்வு நிராகரித்துப் பிறப்பித்த உத்தரவு ஏற்கும்படியாக இல்லை.

இறுதித் தீா்ப்பு என்பது இறைவனின் தீா்ப்பு மட்டுமே. நீதிமன்றத் தீா்ப்புகள் காலத்துக்கு ஏற்ப மாற்றத்துக்குட்படும் இடைக்காலத் தீா்ப்புகளாகத்தான் இருக்க முடியும்!

X
Dinamani
www.dinamani.com