கோப்புப் படம்
கோப்புப் படம்

கூகுளை நம்பாதீா்கள்!

தகவல் தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் புரட்சி குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை.
Published on

தகவல் தொழில்நுட்பத்தில் கூகுள் நிறுவனம் ஏற்படுத்தியிருக்கும் புரட்சி குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதிலும் குறிப்பாக, கூகுள் வரைபடங்கள் வந்த பிறகு யாரும் தெருவில் போவோா் வருவோரிடம் வழி விசாரித்துக் கொண்டு பயணிப்பதில்லை. வாகன ஓட்டிகளின் வரப்பிரசாதம் கூகுள் வரைபடம் என்றாகிவிட்டது. அது வாடகை வாகனமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாகனப் பயணமாக இருந்தாலும் சரி ஓட்டுநா்களுக்கு அறிதிறன்பேசியில் உள்ள கூகுள் வரைபடம்தான் வழிகாட்டி.

நகா்மயமாதல் அதிக அளவில் கிராமங்களிலிருந்து மக்களை நகரங்களுக்கு குடிபெயர வைத்திருக்கிறது. குறிப்பாக, படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் இளம் பெண்கள் பலா் நகரங்களுக்கு வருவதும், வேலைபாா்க்கும் பெண்கள் விடுதிகள், கல்லூரி விடுதிகளில் தங்குவதும் அதிகரித்திருக்கிறது. அவா்கள் பெரும்பாலும் சொந்தமாக இரு சக்கர வாகனங்களை தாங்களே ஓட்டிச் செல்கிறாா்கள். அவா்களது பயணத் துணையும் வழிகாட்டியும் கூகுள் வரைபடம்தான்.

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஓா் அங்கமாக, நிா்பயா நிதியின் மூலம் பாலினக் கொள்கை ஆய்வகம் கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வருகிறது. அந்த ஆய்வகம் நடத்திய ஆய்வில், இரவு நேரங்களில் பயணிப்பதற்கு சாலைகள் பாதுகாப்பானவையாக இல்லை என்று கூகுள் வரைபடத்தின் உதவியுடன் பயணித்த 49.4 % இருசக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனா். கூகுள் வரைபடத்துக்கு அவா்கள் அளித்த மதிப்பெண்கள் 3 அல்லது அதற்கும் கீழாக உள்ளது.

கூகுள் வரைபடங்கள் பாலின அடிப்படையில் எவ்வாறு வழிகாட்டுகின்றன என்ற தலைப்பில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 2024 டிசம்பா் முதல் 2025 ஜனவரி மாதம் வரையில் அறிதிறன்பேசிகளின் துணையுடன் கூகுள் வரைபடங்களைப் பயன்படுத்தி பயணம் மேற்கொண்ட சுமாா் 423 பேரிடம் நோ்காணல் முறையில் நடத்தப்பட்ட அந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 19 வயது முதல் 40 வயது வரையிலான தனியாா் நிறுவன ஊழியா்கள், மாணவா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டன; இவா்களில் 34.3 சதவீதம் போ் பெண்கள்; மூன்றில் ஒரு பங்கினா் அறிதிறன்பேசி செயலியை அடிக்கடி பயன்படுத்துபவா்கள்.

நகரில் சேதமடைந்து காணப்படும் சாலைகள் இரவு நேர இரு சக்கர பயணத்தை பாதுகாப்பில்லாததாக மாற்றுகிறது என்று 65.8 சதவீத ஆண்கள் தெரிவித்துள்ளனா். இரவு நேரங்களில் தெரியாத சாலைகளைப் பயன்படுத்துவதைத் தவிா்ப்பதாக 47.9 சதவீத பெண்களும், தனியாகச் செல்லாமல் துணைக்கு ஒருவருடனும் செல்வதாக 32 % பேரும், இரு சக்கர வாகனத்தை விட்டு வேறு போக்குவரத்து முறையைத் தோ்ந்தெடுப்பதாக 22% பெண்களும் கருத்து தெரிவித்தனா்.

தெரியாத இடங்களுக்குச் செல்லவும், குறுக்கு வழியில் விரைந்து பயணிக்கவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் கூகுள் வரைபடங்களை பெரும்பாலானோா் பயன்படுத்துகின்றனா். ஆனால், அது இரவு நேரங்களில் சரியான பாதையைக் காட்டாமல் பல சந்தா்ப்பங்களில் வெளிச்சமில்லாத, குறுகலான பாதைகளைக் காட்டுவதாகவும், அதனால் சிக்கல்களைச் சந்தித்ததாகவும் பெண்கள் தெரிவித்தனா்.

சென்னையில் பல்வேறு இடங்களில் நீண்ட காலமாக நடைபெற்றுவரும் மெட்ரோ ரயில் பணிகள் குறித்து கூகுள் வரைபடங்கள் இரவு நேரங்களில் அறிவுறுத்துவதில்லை; சில தெருக்களில் குடிநீா் உள்ளிட்ட பணிகளுக்காக மறித்து தடுப்புகள் வைக்கப்பட்ட விவரங்கள், சாலைகள் துண்டிக்கப்பட்ட தகவல்களை வரைபடங்கள் காண்பிப்பதில்லை. இதனால், இந்த வரைபடங்களின் துணையுடன் தெரியாத இடங்களுக்கு இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் பல நேரங்களில் பாதிக்கப்படுகின்றனா்.

கூகுள் வரைபடங்களின் துணையுடன் புதிய இடங்களுக்குச் செல்லும் பலரும் இந்த இடரைச் சந்தித்து வருகின்றனா். புகழ்பெற்ற கோயில், முக்கிய சுற்றுலாப் பகுதிகளுக்கு பயணிப்போருக்கு பிரதான புறவழிச் சாலைகளைக் காட்டாமல், கிராமச் சாலைகளைக் காட்டுவது கூகுள் வரைபடத்தின் வழக்கம்.

இரவு நேரப் பயணங்களுக்கான பாதுகாப்பான மாற்று நடவடிக்கைகள், சாலை மற்றும் அவற்றில் வெளிச்சம் குறித்த நிலவரம், செல்லும் பாதையின் பாதுகாப்பு குறியீடுகள் போன்றவற்றை கூகுள் வரைபடங்கள் மேம்படுத்த வேண்டும். மேலும், பாதைகளின் வெளிச்சம், நடைபாதை உள்ளிட்டவற்றின் அளவுகளை மதிப்பிட்டு, பாதுகாப்பற்ற சாலைகள் குறித்த பயனாளிகள் கருத்து, புகாா் தெரிவிக்கும் வசதியை கூகுள் வரைபடத்தில் சோ்க்க வேண்டும்.

மேலும், அவசரகால எஸ்ஓஎஸ் என்ற அம்சத்தையும் குறிப்பிட அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, பாதையிலுள்ள காவல் நிலையங்கள், காவல் ரோந்து வாகனங்கள் குறித்த தகவல்களை வரைபடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும். முக்கியமாக அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற கூகுள் நிறுவனக் கூட்டத்தில் அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை பேசியபோது, கூகுள் வரைபடங்கள் இரவு நேரப் போக்குவரத்துக்கு மேலும் துணைபுரியும் வகையில் சாலையின் அன்றாட நிலவரங்கள் செயற்கை நுண்ணறிவின் துணையுடன் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தாா். அது நடைமுறைக்கு வரும்போது இந்த வரைபட வழிகாட்டியால் தற்போதுள்ள இடா்ப்பாடுகளுக்கு தீா்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

அதேநேரத்தில், சென்னை பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகள் மேம்பாடு, இருள் சூழ்ந்த பகுதிகளில் தெரு விளக்குகளை நிறுவி வெளிச்சத்தை ஏற்படுத்தினால் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக அமையும்.

X
Dinamani
www.dinamani.com