
படித்த இளைஞர்களுக்காக திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான தொலைநோக்குப் பார்வையுடன் மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட பிரதமரின் உள்ளகப் பயிற்சி திட்டம் (இன்டர்ன்ஷிப்) பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கற்றலுக்கும் நேரடித் தொழில் பயிற்சிக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையிலான இந்தத் திட்டம் கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டயம், பட்டப் படிப்புகள் பயின்ற 18 வயது முதல் 24 வயது வரையிலான இளைஞர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறலாம்.
குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள படித்த இளைஞர்களுக்கு அரசு பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் இந்த உள்ளகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை மற்றும் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் ரூ.6,000 உதவித் தொகையும் இந்தப் பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் ஆண்டான நிகழாண்டில் நாடு முழுவதிலும் 735 மாவட்டங்களில் உள்ள 327 நிறுவனங்களின் கிளைகளில் 1,19,158 பேர் பயிற்சியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஆட்டோமொபைல், சுற்றுலா, மருத்துவம், வங்கி மற்றும் நிதி சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்கள், சுரங்கம், தொழிற்சாலைகளில் அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப இந்தப் பயிற்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உள்ளக பயிற்சித் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் தமிழகத்தில்தான் அதிக அளவிலான பயிற்சி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள பொதுத் துறை, தனியார் நிறுவனங்களில் மொத்தம் 15,785 பேர் பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரத்தில் 15,187 பேரும், குஜராத்தில் 11,672 பேரும், கர்நாடகத்தில் 9,928 பேரும் பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இது இந்த மாநிலங்களின் தொழில் கட்டமைப்புகளையும், இளைஞர்களின் ஈடுபாட்டையும் காட்டுகிறது.
இந்திய இளைஞர்களின் தொழில் திறன்களைக் கட்டமைப்பதில் இந்த மாநிலங்களின் பங்கு இந்தப் பயிற்சியின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. தொழில் துறை ரீதியாக வளர்ந்த மாநிலங்கள், நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான உள்ளகப் பயிற்சி வாய்ப்புகளை வழங்கியுள்ளன. அந்த மாநிலத்தில் உள்ள பெரு நிறுவனங்களின் ஈடுபாடு, மாநில அரசுகள் தொழில் நிறுவனங்களுடன் வைத்திருக்கும் சுமுக உறவும் இந்தப் பயிற்சித் திட்டம் வெற்றிபெற மற்றொரு காரணம்.
மேலும், தேசிய அளவிலான பெரு நிறுவனங்களும், தமிழகத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்களும் இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சியை அளிப்பதில் ஆர்வம் காட்டியதையும் குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸ், சுந்தரம் பாஸனர்ஸ், ராம்கோ சிமென்ட்ஸ், ஜோஹோ போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இளைஞர்களுக்குப் பயிற்சி வாய்ப்பை அளித்துள்ளன.
இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் ஆண்டில் சீரான மேம்பாட்டை கண்டிருந்தாலும், வருங்காலங்களில் பின்தங்கிய மாநிலங்களைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கும் பயிற்சி வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதன் நோக்கம் நாடு முழுவதும் ஒருசேர சென்றடைந்து தேசிய அளவிலான சீரான வளர்ச்சி கிடைக்கும்.
2024 அக்டோபர், டிசம்பர் மாதங்களில் முதல்கட்ட உள்ளகப் பயிற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து 6 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 25 துறைகளைச் சேர்ந்த 280 முன்னணி நிறுவனங்கள் 1.27 லட்சம் பயிற்சி வாய்ப்புகளை அறிவித்திருந்தது. இதில் தகுதிவாய்ந்த 80,000 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்வதும் திட்டத்தின் நோக்கம்.
பட்டயம், பட்டப் படிப்பை நிறைவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்தப் பயிற்சிக்குப் பிறகு, மத்திய அரசின் சான்றிதழ்களுடன் வெளியே வரும்போது, அவர்களுக்குப் பல முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. ஐஐடி, மேலாண்மை கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்களின் மேம்பாட்டுடன், அவர்களின் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது சிறப்பு.
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகாரங்கள் துறையின் கீழ் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் பங்கேற்போருக்கு பிரதமரின் 'ஜீவன் ஜோதி பீமா யோஜனா', 'சுரக்ஷா பீமா யோஜனா' போன்ற திட்டங்களின் கீழ் காப்பீட்டு வசதிகளும் அளிக்கப்படுகின்றன. மேலும், தனியார் நிறுவனங்களும் விபத்துக் காப்பீடு வசதிகளை வழங்குகின்றன.
ஒருமுறை விண்ணப்பித்து கிடைக்கவில்லையென்றால் ஐந்து முறை விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் விண்ணப்பிக்க வசதியாக கைப்பேசி செயலியையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார். அதை நாட்டின் பல்வேறு மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது.
உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் கீழ், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வயது வரம்பை 24-இல் இருந்து 25-ஆக உயர்த்த வேண்டும் என விண்ணப்பதாரர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையும் மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஏராளமான இளைஞர்கள் பலன்பெறுவர். மத்திய அரசின் சில திட்டங்களுடன் தமிழக அரசு முரண்பட்டு வந்தாலும், வேலைவாய்ப்புப் பயிற்சி போன்ற திட்டங்களை முன்னின்று செயல்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.