சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் உள்பட அதில் தொடர்புடைய ஒன்பது பேருக்கும் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறார் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.
2020-ஆம் ஆண்டு கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று பொதுமுடக்க காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதலாக தங்களது கைப்பேசிக் கடையைத் திறந்து வைத்திருந்தனர் என்பதுதான் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் செய்த குற்றம். அதற்காக அவர்களை விசாரணைக்குக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உயிர்போகும் விதத்தில் அவர்கள் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் இதுவரையில் கிடைக்கவில்லை.
"காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துவரப்படுபவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. அவை பின்பற்றப்படவில்லை. ஒருவேளை இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு நேரடியாகக் கண்காணிக்காமல் இருந்தால், உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் முன்பே இந்த வழக்கும் புதைக்கப்பட்டிருக்கும்'' என்கிற நீதிபதி முத்துக்குமரனின் தீர்ப்பு வரிகள் "நீதிதேவனின் குரல்' என்றுதான் சொல்ல வேண்டும்.
சாத்தான்குளம் சம்பவத்தை விதிவிலக்கு என்று கடந்துபோக முடியாது. 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை, காவல் துறை உதவிக் கண்காணிப்பாளர் (ஏ.எஸ்.பி.) ஒருவர் இடுக்கியால் பிடுங்கிச் சித்திரவதை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் சாட்சி சொல்லி இருக்கிறார்கள். வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மூன்று ஆண்டுகளாகியும் விசாரணை முடியவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைத்தபாடில்லை.
2025 ஜூன் மாதம் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்கிற 29 வயது இளைஞர் நகைத் திருட்டுப் புகாரில் விசாரணைக்கு திருப்புவனம் காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
காவல் துறையின் சித்திரவதையால் நடந்த கொலை என்பது சிபிஐ விசாரணையில் உறுதியாகி இருப்பதும், வழக்கு நடைபெறுவது ஒருபுறம் இருக்கட்டும். வழக்கின் அடிப்படை நகைத் திருட்டு. இப்போது, நகை திருட்டுப் புகார் பொய் என்று சிபிஐ கண்டறிந்தது மட்டுமல்ல, புகார் அளித்த நபரே அது பொய்ப் புகார் என்று ஏற்றுக்கொண்டவுடன் நீதிமன்றம் அந்த வழக்கை முடித்தும் வைத்திருக்கிறது. அப்படியானால், அப்பாவி அஜித்குமாரின் கொலைக்குக் காவலர்கள் மட்டும்தானா பொறுப்பு? பொய்ப் புகார் காரணமில்லையா?
இவையெல்லாம் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் நடந்த காவல் துறை சித்திரவதைகள், கொலைச்சம்பவங்களில் சில. இதேபோல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் காவல் துறை, சிறைச்சாலை மரணங்கள் நடக்கின்றன. பெரும்பாலானவை வெளியுலகத்துக்குத் தெரியாமல் காவல் நிலையக் கூடத்துக்குள் முடங்கி விடுகின்றன அல்லது அரசு மருத்துவர்களின் உதவியுடன் தற்கொலை அல்லது இயற்கை மரணம் என்று அறிவிக்கப்பட்டு புதைக்கப்படுகின்றன.
2010-இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சித்திரவதைத் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் காலாவதியாகியது. 2017-இல் சட்ட ஆணையம் ஒரு மாதிரி மசோதாவை முன்மொழிந்தது.
2010 மசோதாவில் வாக்குமூலம் பெறுவதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, உளவியல் ரீதியிலான சித்திரவதையோ, உடல் ரீதியிலான சித்திரவதையோ குறிப்பிடப்படவில்லை. அது மட்டுமல்ல, சித்திரவதை குறித்து புகார் அளிக்க ஆறு மாதம் காலவரம்பும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஐ.நா.வின் சித்திரவதை மற்றும் குரூரமான, மனிதாபிமானமில்லாத, தன்மானக் குறைவான வழிமுறையோ, தண்டனையோ வழங்கப்படுவதற்கு எதிரான தீர்மானத்தில் (கன்வென்ஷன்) 1997 முதல் இந்தியா இணைந்திருக்கிறது. சித்திரவதைத்
தடுப்புச் சட்டத்தை இயற்றினால்தான், அந்த கன்வென்ஷனில் முழுமையாக நாம் இணைய முடியும். அதில் இணைவதன் மூலம், நமது செயல்பாடுகள் சர்வதேச கண்காணிப்பு வளையத்தில் வரும் என்பதால், அந்தச் சட்டத்தை இயற்றாமல் இருக்கிறோம்.
இந்திய தண்டனைச் சட்டத்தில் சித்திரவதை என்றால் என்ன என்பது குறித்த விளக்கம் இல்லை. பிரிவு 330, 331 ஆகியவை கைது செய்து விசாரணை நடத்துவது, வாக்குமூலம் பெறுவது குறித்தானவை மட்டுமே. கைது செய்யாமல் விசாரணைக்கு அழைத்துச் சென்று நடத்தப்படும் சித்திரவதைகள் குறித்து எந்த விதிமுறையும் கிடையாது.
சாத்தான்குளம் தீர்ப்பு ஒரு வகையில் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. முதன்முறையாக காவல் நிலைய மரணங்களுக்காக சில காவலர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். இனிமேலாவது, காவல் துறையினரின் துன்பியல் உணர்வுக்கு கடிவாளம் போடப்படும் என்று எதிர்பார்ப்போமாக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் வழக்கில் நீதி! மற்ற குடும்பங்கள் பாதிக்கப்படக் கூடாது : ஜெயராஜ் மகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: காவல் துறையினா் 9 பேரும் குற்றவாளிகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நாளை தீா்ப்பு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

