ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பறிபோகும் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பை இழக்கும் கணினித் தொழில்நுட்பப் பட்டதாரிகளின் வருங்காலம் என்னவாகும்?

News image

Center-Center-Coimbatore

Updated On :10 ஏப்ரல் 2026, 1:30 am

ஒருபுறம் மேற்காசிய போர்ச் சூழலால் உலகம் நிலைகுலைந்து நிற்கிறது என்றால், இன்னொரு புறம் தகவல் தொழில்நுட்பத் துறை மிகப் பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முன்னுரிமை பெறும் நிலையில், பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களை அதற்கேற்ப சீரமைக்க முற்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பலர் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள் என்பது மேற்காசிய போர் களேபரத்தில் கவனம் பெறவில்லை.

அமெரிக்காவின் டெக்சாஸை தனது தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் "ஆரக்கிள்'. மென்பொருள், தரவு சார்ந்த தொழில்நுட்பம் உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுக்கும் "ஆரக்கிள்' நிறுவனம், உலகளாவிய அளவில் 30,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்திருக்கிறது. அவர்களில் 12,000 பேர் இந்தியாவில் பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புணே, கொல்கத்தா, மும்பை, நொய்டா உள்ளிட்ட இடங்களில் "ஆரக்கிள்' நிறுவனத்தின் அலுவலகங்கள் இயங்குகின்றன. அமெரிக்காவுக்கு வெளியே மிக அதிகமான ஊழியர்களுடன் "ஆரக்கிள்' நிறுவனம்

இந்தியாவில்தான் செயல்படுகிறது. பொறியியல், கிளவுட் தொழில்நுட்பம், சப்ஜெக்டிங் சிஸ்டம்ஸ், நிதி மேலாண்மையியல் தொடர்பான குழுக்கள் உள்ளிட்டவை இந்த அலுவலகங்களால் கையாளப்படுகின்றன.

செயற்கை நுண்ணறிவை நோக்கித் தனது செயல்பாடுகளை நகர்த்தும் முடிவுதான் "ஆரக்கிள்' நிறுவனத்தின் ஆட்குறைப்புக்குக் காரணம். "ஓபன் ஏ.ஐ.' ஸ்டார் கேட் சார்ந்த தரவு மையத் திட்ட கட்டமைப்பு விரிவாக்கத்துக்காக 50 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமான முதலீட்டை ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்காக ஒதுக்கீடு செய்ய "ஆரக்கிள்' நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

"ஏ.ஐ.' என்று பரவலாக அறியப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு தங்களை மாற்றிக் கொள்ளவும், அதைப் பயன்படுத்தி தங்களது செயல்பாடுகளை வடிவமைக்கவும் அனைத்துத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் முனைப்புக் காட்டத் தொடங்கி விட்டன. ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்காக முந்தைய தொழில்நுட்பம் சார்ந்த பணிகளைக் குறைத்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டிசிஎஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களைக் குறைத்தது நினைவிருக்கலாம்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகளாவிய அளவில் 85,000 பேரைக் குறைத்திருக்கின்றன. அதாவது, ஒவ்வொரு நாளும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் சுமார் 1,000 ஊழியர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். அமேசான் நிறுவனம் ஜனவரி மாதத்தில் மட்டும் 16,000 பேரைக் குறைத்தது என்றால், கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டும் ஐபிஎம் நிறுவனம் 9,000 ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பறித்திருக்கிறது.

செயற்கை நுண்ணறிவின் வரவால் வருங்காலத்தில் வேலைவாய்ப்புகள் குறையக் கூடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதே அதன் தாக்கம் சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் பல வேலைவாய்ப்புகளை பழிவாங்கத் தொடங்கி விட்டது. இதற்கு எந்தவொரு முன்னணி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமும் விதிவிலக்கல்ல.

அமேசான் நிறுவனம் இரண்டு கட்டமாக 30,000 பேரைக் குறைத்திருக்கிறது என்றால், அதில் குறைந்தது 1,000 பணியிடங்கள் இந்தியாவில் உள்ளவை. சுமார் 20,000 பணிகளை (ரோல்ஸ்) டிசிஎஸ் நிறுவனம் நிறுத்திக் கொள்கிறது என்றால், அதன் ஊழியர்களில் 2 % பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று பொருள். விப்ரோ, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த 2025}இல் 10,000 பணியிடங்களைக் குறைத்திருக்கின்றன.

சுமார் 11,000 புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்ஸ்) கடந்த 2025}இல் மூடப்பட்டு விட்டன. ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாதது, அவர்களாகவே விலகுதல், பணி விலகக் கட்டாயப்படுத்துதல் போன்றவை மட்டுமல்லாமல், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 50,000 முதல் 60,000 வரையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை நிகழாண்டில் மேலும் அதிகமாகுமே தவிர குறையாது.

ஏ.ஐ. தொழில்நுட்பம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குமா? என்பது உறுதிப்படவில்லை. ஆனால், அதிக அளவில் ஏற்கெனவே இருக்கும் வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் விளைவால் பல குடும்பங்கள் கடன் வலையில் தள்ளப்படும் என்பதும், நிலைகுலையும் என்பது மட்டுமே கவலை ஏற்படுத்தவில்லை. அதன் தொடர் விளைவாக மக்களின் நுகர்வுச் செலவு குறையும்; வரி வசூலில் பாதிப்பு ஏற்படும்; வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் சேமிப்புகள் குறையும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் சட்டங்கள் பல சலுகைகளை வழங்குகின்றன; வரி விலக்குகள் தரப்படுகின்றன; குறைந்த விலையில் இடம் ஒதுக்கப்படுகிறது; மின்சாரம், சாலைகள், தண்ணீர் உள்ளிட்ட சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

ஊழியர்களின் வேலைக் குறைப்பால், அந்த நிறுவனங்களின் லாபம் கூடுமே தவிர குறையப் போவதில்லை. வேலைவாய்ப்பை இழக்கும் கணினித் தொழில்நுட்பப் பட்டதாரிகளின் வருங்காலம் என்னவாகும்? என்பதை அந்த நிறுவனங்கள் சிந்திக்காது; அரசு சிந்தித்தாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.