உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

யானைக்கும் அடி சறுக்கும்!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.

News image

மம்தா பானர்ஜி - ANI

Updated On :11 ஜூன் 2026, 6:00 am IST

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ச்சியாக மூன்று முறை வென்றிருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வென்று 207 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. இப்போது மம்தா பானர்ஜி தனது கட்சியையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.

முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி தான்போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது கடந்த ஏப். 26-இல் 14 கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் நெருக்கமாக இருப்பதைக் காட்டிக் கொள்ள அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி.-க்கள், வேட்பாளர்கள், திரை நட்சத்திரங்கள், உள்ளூர் பிரபலங்கள் முண்டியடித்ததால் காவல் துறையின் பணி மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், தோல்விக்குப் பின்னர், தனது கட்சியினர் மீதான தாக்குதல்களைக் கண்டித்து கடந்த ஜூன் 2-ஆம் தேதி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மம்தா பானர்ஜியுடன் அவரது கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் மட்டுமே பங்கேற்றனர். இதுதான் அரசியல் விசுவாசம்.

மம்தா பானர்ஜி தோல்வியுற்ற நிலையில், 82 வயதான சோபன்தேவ் சட்டோபாத்யாய-வை பேரவைக் கட்சிக் குழுத் தலைவராக மம்தா அறிவித்தபோது எம்.எல்.ஏக்.கள் முதல்முறையாக போர்க்கொடி உயர்த்தினர். அதிலிருந்து தொடங்குகிறது மம்தாவின் சரிவு. சோபன்தேவ் நியமனத்துக்காக அளிக்கப்பட்ட கடிதத்தில் தங்கள் கையொப்பம் போலியாக இடப்பட்டதாக ரிதபிரத பானர்ஜி, சந்தீபன் சாஹா ஆகிய எம்எல்ஏ-க்கள் குற்றஞ்சாட்டினர்.

அவர்கள் கட்சியின் தேசிய பொதுச் செயலரும் மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகக் குரல் எழுப்பினர். 80 எம்எல்ஏ-க்களில் 58 பேர் ரிதபிரத பானர்ஜியின் பின்னால் அணிவகுத்தனர். மூன்றில் இரு பங்குக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் கடிதம் அளித்ததால் எதிர்க்கட்சித் தலைவராக ரிதபிரத பானர்ஜியை பேரவைத் தலைவர் ரதீந்திர போஸ் அங்கீகரித்தார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாக, திரிணமூல் காங்கிரஸின் 28 மக்களவை உறுப்பினர்களில் கட்சியின் தலைமைக் கொறடாவான ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 எம்.பி.க்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கடிதம் அளித்துள்ளனர். மாநிலங்களவை எம்.பி.க்கள் சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ் ஆகியோரும் அண்மையில் ராஜிநாமா செய்துள்ளனர்.

ஆள்கடத்தல், ஊழல், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக இப்போதைய எம்எல்ஏ-க்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள், கட்சிப் பிரமுகர்கள் என நூற்றுக்கணக்கானோர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது வெளியில் அபிஷேக் பானர்ஜி, எம்.பி. கல்யாண் பானர்ஜி ஆகியோர் அண்மையில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் திடீரென ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. இப்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் மாணவர் அணி செயல்பட்ட நிலையில், அதற்கு இணையாக தனது மருமகன் அபிஷேக் பானர்ஜி தலைமையில் யுவ திரிணமூல் என்ற அமைப்பை மம்தா 2011-இல் உருவாக்கியபோதே இப்போதைய தோல்விக்கும் கட்சி சந்திக்கும் சிக்கல்களுக்கும் விதை விதைக்கப்பட்டது.

2014 மக்களவைத் தேர்தலில் அபிஷேக் வென்றபோது கட்சியின் கட்டுப்பாடு பெருமளவில் அவரிடம் சென்றுவிட்டது. ஐ-பேக் நிறுவனத்தின் வருகையால் கட்சி கார்ப்பரேட் மயமானது.

அபிஷேக்கின் அதிகாரத்தால் வெறுத்துப்போன கட்சியின் முன்னணித் தலைவர் முகுல் ராய் 2017-இல் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து சுவேந்து அதிகாரி 2021-இல் வெளியேறினார்.

2011-இல் ஆட்சியைப் பிடித்தபோது, தங்கள் பதவியையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள், உள்ளூர் இடதுசாரிப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரிணமூலில் இணைவதை மம்தா ஊக்குவித்தார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி எம்எல்ஏ-க்கள் என 60-க்கும் மேற்பட்டோர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர்.

தொடர்ச்சியாக மூன்று முறை வென்றதால், வரம்பற்ற அதிகாரத்தின் காரணமாக ஊழலும் வன்முறையும் எழுதப்படாத விதியாகவே மாறியது. இப்போது எதிர்ப்புக் குரல் எழுப்பி உள்ள ரிதபிரத பானர்ஜியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்தவர்தான். இப்போது ஏன் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, "தேர்தலுக்கு முன்னர் எதிர்ப்புக் குரல் எழுப்பி இருந்தால் கொல்லப்பட்டிருப்பேன், திரிணமூல் வென்றிருந்தால் அமைதியாக இருந்திருப்பேன்' என்று கூறியதிலிருந்தே திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய அடக்குமுறைக் கலாசாரத்தை புரிந்துகொள்ள முடியும்.

எதிர்ப்புக் குரல்களை மட்டுப்படுத்த, அபிஷேக் பானர்ஜியின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் டெரிக் ஓ' பிரையன், டோலா சென் ஆகியோரை தேசிய இணைச் செயலர்களாக மம்தா பானர்ஜி நியமித்துள்ளார். குதிரைகள் வெளியேறிய பிறகு லாயத்தைப் பூட்டித்தான் என்ன பயன்?

புரையோடிய ஊழல், கட்சியினரின் அடாவடித்தனம், உறவினரின் ஆதிக்கம், கட்சித் தாவலை ஊக்குவித்தது போன்றவற்றால் மம்தா மக்கள் செல்வாக்கை இழந்துள்ளார். சிறுபான்மையினர் வாக்குவங்கியை தக்கவைத்துக் கொள்வதற்காக மம்தா அரசு அளித்த அளவுக்கு மீறிய ஆதரவும் சலுகைகளும், பெரும்பான்மை சமுதாயத்தை திரிணமூல் காங்கிரஸýக்கு எதிராக ஒருங்கிணைத்ததுதான் அவரது செல்வாக்குச் சறுக்கலுக்குக் காரணம். மம்தா பானர்ஜியின் வலதுகரமாகத் திகழ்ந்த, இப்போதைய முதல்வர் சுவேந்து

அதிகாரியை முன்னிறுத்தி பாஜக அவரை வீழ்த்தி இருக்கிறது. முள்ளை "முள்ளால்' அகற்றி இருக்கிறார்கள்!

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை, நயவற்க

நன்றி பயவா வினை.

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.