மாற்றமல்ல, வாய்ப்பு..!
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் உள்ள "ஷித்தல் நிவாஸ்' என்கிற குடியரசுத் தலைவர் மாளிகையில் 35 வயதான "பாலன்' என்று அழைக்கப்படும் பாலேந்திர ஷா 47-ஆவது பிரதமராக அண்மையில் பதவி ஏற்றிருக்கிறார்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா...
AP

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா...
AP
நேபாளத் தலைநகர் காத்மாண்டில் உள்ள "ஷித்தல் நிவாஸ்' என்கிற குடியரசுத் தலைவர் மாளிகையில் 35 வயதான "பாலன்' என்று அழைக்கப்படும் பாலேந்திர ஷா 47-ஆவது பிரதமராக அண்மையில் பதவி ஏற்றிருக்கிறார். இந்திய எல்லையை ஒட்டிய மாதேஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிரதமராவது இதுதான் முதல் முறை என்பதால், அவரது தலைமையிலான ஆட்சி முக்கியத்துவம் பெறுகிறது.
அரசியல் பல விசித்திரங்களை சிருஷ்டிக்கும் என்பதற்குப் பிரதமர் பாலேந்திர ஷாவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டு. "சித்த குரு ஜனதா சங்' (மக்களுடன் நேரடியாக) என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக, மக்களின் குறைகளையும், ஆட்சியாளர்களின் தவறுகளையும் பரப்புரை செய்து வந்தார் ரபி லாமிச்சானே. அவர் 2022 ஜூன் மாதம் ராஷ்ட்ரீய சுதந்திரா கட்சியை (ஆர்.எஸ்.பி.) தொடங்கினார். அடுத்த ஆறாவது மாதம் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி நான்காவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது.
அந்தக் கட்சி 2022 முதல் 2024 வரையில் அமைந்த கூட்டணிகளில் இரண்டு முறை அங்கம் வகித்தது. கூட்டுறவுத் துறை நிதி முறைகேட்டு ஊழலில் சிக்கி ரபி லாமிச்சானே கைது செய்யப்பட்டபோது, அந்தக் கட்சியின் நற்பெயர் களங்கப்பட்டது என்றாலும், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டு, போராட்டம் வலுப் பெற்றதற்கு ஆர்.எஸ்.பி.யும் ஒரு காரணம் என்பது என்னவோ உண்மை.
இளைஞர்கள் போராட்டத்தில் முக்கியக் கோஷமாக மாறியது "பலிதான்' என்கிற தனது இசை ஆல்பத்தில் பாலேந்திர ஷா எழுதியிருந்த "எனது மனது சுத்தமானது; அது உண்மையை ஓங்கி ஒலிக்கப் பயப்படாதது' என்கிற பாடல் வரிகள். அந்தக் கவிதை வரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இளைஞர் போராட்டத்தில் ஓங்கி ஒலித்தது; ஆட்சியை அகற்றும் வலிமையான ஆயுதமானது.
1990-இல் காத்மாண்டில் பிறந்த பாலேந்திர ஷா, கர்நாடக மாநிலம் விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்த பொறியியல் பட்டதாரி. கவிஞரும், "ராப்' பாடகருமான பாலேந்திர ஷா, 2022-இல் நேபாளத் தலைநகர் காத்மாண்டின் முதலாவது சுயேச்சை மேயர். ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் எதிராக அவர் துணிந்து எடுத்த நடவடிக்கைகள், அவரை "டைம்' இதழால் 100 அடுத்த தலைமுறைத் தலைவர்களில் ஒருவர் என்று அடையாளம் காட்ட வைத்தது.
பாலேந்திர ஷா நேபாள இளைய தலைமுறையின் லட்சியக் கதாநாயகனாக உயர்ந்திருந்ததார். அவரது கவிதைகளுக்கு நாடு தழுவிய அளவில் ரசிகர்கள் இருந்தனர். இன்ஸ்டாகிராமிலும், யூடியூபிலும் 10 லட்சம் பேரும், முகநூலில் 35 லட்சம் பேரும் அவரைப் பின்தொடர்கிறார்கள். 2019-இல் வெளிவந்த அவரது "பலிதான்' என்கிற பாடல் ஆல்பம் ஒரு கோடி பேருக்கும் அதிகமானோரால் கேட்கப்பட்டிருக்கிறது.
செப்டம்பர் மாதம் இளைஞர்களின் போராட்டம் தொடங்கியது என்றால், காத்மாண்டு மேயரான பாலேந்திர ஷா, டிசம்பர் மாதம்தான் ஆர்.எஸ்.பி. கட்சியில் இணைந்தார். அதுவரை தலைவர் ரபியும், கட்சியின் சின்னமான காண்டியும் (மணி) மட்டுமே அடையாளமாக இருந்த ஆர்.எஸ்.பி.-க்கு, பாலேந்திர ஷா பிரதமர் வேட்பாளராகி புதிய அடையாளம் கொடுத்தார்.
மார்ச் 5-ஆம் தேதி நடந்த தேர்தலில் நேபாள நாடாளுமன்றத்தில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் 165 இடங்களில் 125 இடங்களில் வென்று ஆர்.எஸ்.பி. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. நேபாளத்தின் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது இந்தத் தேர்தலில்தான். கடந்த 36 ஆண்டுகளாக இருந்துவந்த அரசியல் கட்சிகள் அனைத்துமே மண்ணைக் கவ்வின.
இந்தியாவை ஒட்டிய நேபாளப் பகுதியில் வாழும் மக்கள் "மாதேசிகள்' என்று அழைக்கப்படுவார்கள். அவர்களது வாழ்க்கை முறைக்கும் உத்தர பிரதேசம், பிகார் மக்களின் வாழ்க்கை முறைக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேபாளத்தில் பிரதமராகி இருப்பதால், சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டிருந்த இந்திய-நேபாள உறவை செப்பனிட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பிரதமர் பாலேந்திர ஷா மிகவும் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார். சீனாவையும் பகைத்துக் கொள்ளாமல், இந்தியாவுடனான நட்புறவையும் பேண வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் எதிர்கொள்ளும் சவால் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிய இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது. அவர்கள் அதிருப்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.
15 முதல் 24 வயதினருக்கு இடையில் வேலைவாய்ப்பின்மை 22.7% இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது; அடுத்த ஐந்தாண்டுகளில் 12 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று ஆர்.எஸ்.பி. உறுதியளித்திருக்கிறது. அதை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதானதல்ல.
அண்டை நாடுகள் அமைதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். நமது வளர்ச்சி அவர்களது வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்தது. அதனால், நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷா தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா துணை நிற்க வேண்டும். அதன்மூலம் தொன்று தொட்டு நிலவும் இரு நாட்டு நல்லுறவு முன்புபோல தழைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...