தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

விடை காண வேண்டிய தடை!

இந்தியாவுக்குப் பதக்கம் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்கிற ஒற்றை நினைப்பில் இணைந்த அவர்கள் அனைவருக்குமே, போட்டியில் ஓடும்போது தனிப்பட்ட சாதனை குறித்த சிந்தனை இருக்கவில்லை.

தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் - AP

Updated On :

அய்சி நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் நிகழ்த்திய சாதனைகளையும், பெற்ற பதக்கங்களையும்விட, அவர்களது சாதனைகளுக்குப் பின்னால் இருந்த உழைப்பும், சவால்களும்தான் நம்மை மலைக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக, பதக்கங்களை வென்று திரும்பி இருக்கும் வீராங்கனைகளின் பின்னணி குறித்த செய்திகள் ஒட்டுமொத்த இந்தியாவின் மனசாட்சியையே உலுக்குவதாக உள்ளன!

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் பிரிவில், பந்தய தொலைவை 54.75 விநாடிகளில் கடந்து, 42 ஆண்டுகளுக்குப் பிறகு பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருக்கும் நம்ம ஊர் 'தங்க மங்கை' வித்யா ராம்ராஜின் பின்னணியை சற்று சிந்தித்தால், அந்த வெற்றியின் மகத்துவம் விளங்கும். கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வழுக்குப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்ராஜின் மகள் வித்யா; ஆனால், வறுமை அவரது திறமைக்குத் தாழ் போட முடியவில்லை.

அவர் மட்டுமல்ல, அவருடன் தடை ஓட்டப் பிரிவிலும், தொடர் ஓட்டத்திலும் கலந்து கொண்ட ஏனைய வீராங்கனைகளும் மிகவும் எளிமையான, வறுமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

துப்பாக்கி வெடித்துப் போட்டி தொடங்கியபோது, முதலில் ஓடிய ஹரியாணாவின் ரோத்தக் மாவட்டம், குமத் கிராமத்தைச் சேர்ந்த கிரண் பஹால் ஆகட்டும்; அவரிடமிருந்து 'பேட்டனை' வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தைக் கடந்த கர்நாடக மாநிலம் கூர்கைச் சேர்ந்த பூவம்மாவாகட்டும்; மூன்றாவது கட்டத்தைக் கடந்த

உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரின் பிராச்சி செüதரியாகட்டும்; அவரிடமிருந்து 'பேட்டனை' வாங்கிக் கொண்டு நான்காவது கட்டத்தைக் கடந்து 4ஷ்400 மீ. தடை ஓட்டப் பந்தயத்தின் வெற்றி இலக்கை எட்டிய நமது வித்யா ராம்ராஜ் ஆகட்டும்-ஒவ்வொருவரும் இந்த வெற்றியை எட்டக் கடந்து வந்த தடைகள் ஏராளம், ஏராளம்.

மகளிர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில், சீனாவுக்கு எதிராக விளையாடும்போது மிகவும் சாதுர்யமாக 'பெனால்ட்டி' ஸ்ட்ரோக்கை எதிர்கொண்டு, 1-0 கோல் கணக்கில் நாம் தங்கப் பதக்கம் பெறக் காரணமாக இருந்தவர் கோல் கீப்பரான சவிதா புனியா. ஹரியாணா மாநிலம் சிர்ஸாவைச் சேர்ந்தவர் அவர். மே 2026-இல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 883 பெண் குழந்தைகள் என்கிற பாலியல் விகிதப் பகுப்பு சிர்ஸாவில் பதிவாகி இருக்கிறது.

அதற்கென்ன என்று கேட்காதீர்கள். சிர்ஸா, குருகிராம், ஜிந்த் உள்ளிட்ட ஹரியாணா மாநில மாவட்டங்களில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள் அண்டை மாநிலமான ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பெண் சிசுக்களின் கருக்கலைப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. சட்டவிரோதமாகக் கருக்கலைப்பதை அனுமதித்ததற்காக அண்மையில் நான்கு மருத்துவர்களை அரசு இடைக்கால நிறுத்தம் செய்திருக்கிறது. நல்லவேளை, சவிதா புனியா கருவிலேயே கொல்லப்பட்டிருந்தால், இப்போது இந்தியா தங்கப் பதக்கம் வென்றிருக்காது.

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலிமா டெடெ, ஜார்க்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தில் உள்ள பர்கி சாப்பர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியை வழிநடத்தியவர். இந்தியா திரும்பி தனது கிராமத்துக்குப் போவதற்கு முன்னால் சலிமா டெடெ, அனைவருக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினார். அதைப் பார்த்த எல்லோரும் அதிர்ந்தனர்.

''நான் ஜார்க்கண்டிலுள்ள எனது கிராமத்துக்குத் திரும்புகிறேன். தயவுசெய்து நண்பர்கள் யாரும் என்னைத் தொடர்புகொள்ள முயல வேண்டாம். எங்கள் கிராமத்தில் கைப்பேசி தொடர்பு கிடையாது'' என்பதுதான் அந்தக் குறுஞ்செய்தி. '' இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் என்னுடைய கிராமத்துக்குக் கைப்பேசித் தொடர்புகூட இல்லை என்று மற்றவர்களிடம் தெரிவிக்க வேதனையாகவும், சங்கடமாகவும் இருக்கிறது'' என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்ததைக் கேட்கும்போதே நமக்கு விழியில் ஈரம் கசிகிறது.

இப்படிப்பட்ட பின்னணிகளில் இருந்துதான் அந்த வீராங்கனைகள் பயிற்சியை மேற்கொண்டு பல்வேறு தடைகளைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறார்கள். அனைவருமே ஒருசேர 'கேலோ இந்தியா' முனைப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்று தெரிவிக்கிறார்கள். மாவட்ட அளவில் பயிற்சி மேற்கொள்ளவும், மாநில அளவில் வாய்ப்புகள் பெறவும் நரேந்திர மோடி அரசின் 'கேலோ இந்தியா' திட்டம் உதவி இருக்கிறது என்பதை அவர்களின் சாதனைகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அந்த வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டபோது தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்கிற வேறுபாடுகள் காற்றில் கரைந்தன. இந்தியாவுக்குப் பதக்கம் பெற்று பெருமை சேர்க்க வேண்டும் என்கிற ஒற்றை நினைப்பில் இணைந்த அவர்கள் அனைவருக்குமே, போட்டியில் ஓடும்போது தனிப்பட்ட சாதனை குறித்த சிந்தனை இருக்கவில்லை. அதற்காக அவர்களை வணங்கி வாழ்த்த முற்படும் அதே வேளையில், அவர்களின் பின்னணிகள் குறித்த சிந்தனை எழும்போது வேதனைதான் உயர்கிறது.

ஊட்டச்சத்து இல்லாத குழந்தைப் பருவம்; சமூக அழுத்தங்கள்; வறுமையின் அச்சுறுத்தல்கள்; பாலியல் துன்புறுத்தல்கள்; சீண்டல்கள்; இந்தியாவின் பின்தங்கிய கிராமங்களுக்கே உரித்தான அடிப்படைப் பிரச்னைகள்-இவற்றை எல்லாம் சகித்துக் கொண்டும், எதிர்கொண்டும் அந்த வீராங்கனைகள் இந்திய தேசியக் கொடியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்திருக்கிறார்கள் என்பதை நம்மில் எத்தனை பேர் சிந்தித்துப் பார்த்தோம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றுஅது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

திருக்குறள் (எண் 596) அதிகாரம்: ஊக்கம் உடைமை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.