வங்கதேச அச்சுறுத்தல்...

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் கடந்த ஆக. 7-ஆம் தேதி மேற்கொண்டன.

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர், சவூதி அரேபியாவின் மெக்காவில் ஆகஸ்ட் 7, 2026 அன்று மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - AP

Published On :42 வினாடிகள் முன்பு

பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை சவூதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் கடந்த ஆக. 7-ஆம் தேதி மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலும் மற்ற நாடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.

"தனது சொந்த நலன்கள், மாறி வரும் உலகப் பொருளாதார, வர்த்தகச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மூன்று நாடுகள் பாதுகாப்புக் கூட்டணியில் வங்கதேசம் இணைய வாய்ப்பு உள்ளது” என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர் சில நாள்களுக்கு முன்னர் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செயல்படுத்து வதற்காக சவூதியில் நிரந்தரச் செயலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் வங்கதேச அமைச்சரின் அறிக்கை இந்தியாவிடம் இருந்து அந்த நாடு விலகிச்செல்கிறது என்பதையே காட்டுகிறது.

வங்கதேசத்தில் இதற்கு முன்பு பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது, இந்தியாவுடன் முன்னெப்போதும் இல்லாத நல்லுறவு நிலவி வந்தது. கடந்த 2024 ஜூலையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்ற பின்னர், அங்கு மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மத அடிப்படைவாத அமைப்பான ஜமாத் ஏ இஸ்லாமியை ஷேக் ஹசீனா அரசு தடை செய்திருந்தது; அந்த தடையை முகமது யூனுஸ் விலக்கினார்.

அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததில்லை. தனது அரசியல் எதிரியான ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளதால், பிஎன்பி கட்சியைச் சேர்ந்த பிரதமர் தாரிக் ரஹ்மான் அதிருப்தி அடைந்துள்ளார்.

ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்தச் சூழலில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைப் போன்றே, தாரிக் ரஹ்மான் தலைமையிலான தற்போதைய அரசும் பாகிஸ்தானிடம் தீவிர நெருக்கம் காட்டத் தொடங்கி உள்ளது.

பல பத்தாண்டுகளில் முதல் முறையாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் தலைவர் அசிம் மாலிக் கடந்த 2025 ஜனவரியில் வங்கதேசம் சென்றார். அதைத் தொடர்ந்து, வங்கதேச ராணுவக் குழுவினர் ராவல்பிண்டி சென்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீரைச் சந்தித்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகத்தில் ஐஎஸ்ஐ சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பல பத்தாண்டுகளாக தடைபட்டிருந்த நேரடி கடல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டது. பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் இந்த நெருக்கம் இந்தியாவுக்குப் புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

புது தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பங்கேற்ற ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஸேத் ஜாய், "கிழக்குப் பகுதியில் இன்னொரு பாகிஸ்தானாக வங்கதேசம் உருவாகி வருகிறது. வங்கதேசத்தில் ஹிஸ்ப் உத் தாஹ்ரிர் பயங்கரவாத அமைப்பினர் சுதந்திரமாக பேரணி நடத்துகின்றனர். பொதுக்கூட்டங்களில் அல் காய்தா அமைப்பினர் பேசுகின்றனர். வரும் காலங்களில் பாகிஸ்தானுக்குப் பதிலாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் இருந்து நுழைவார்கள்” என்று எச்சரித்துள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.

வங்கதேசத்துடன் இந்தியா சுமார் 4,000 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. வேலி அமைத்தல், ட்ரோன் மூலம் கண்காணிப்பு என இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தினாலும் அவ்வளவு தொலைவுள்ள எல்லையையும் கண்காணிப்பது எளிதானதல்ல.

கடந்த பல ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான வங்கதேசத்தவர் மேற்கு வங்கத்தில் நுழைந்து விட்டனர். பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பி மறைமுகப் போரை நடத்தி வருவதையே பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

வங்கதேசத்தை தனது தளமாகப் பயன்படுத்தி பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் முனைந்தால், இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நிச்சயமற்ற சூழலை அது ஏற்படுத்தி விடும்.

இந்தப் பின்னணியில், பாகிஸ்தான், வங்கதேசம், சீனா ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகமான மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ள இந்தியா திட்டமிடுவது காலத்தின் கட்டாயமாகும்.

இளைதுஆக முள்மரம் கொல்க; களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.

திருக்குறள் (எண் 879) அதிகாரம்: பகைத்திறம் தெரிதல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.