உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பிஷ்கெக்கில் உயர்ந்த குரல்!

பல்வேறு நாடுகள் இணைந்து செயல்படும் சர்வதேச அமைப்புகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) மிகுந்த முக்கியத்துவம் உள்ளது

எஸ்சிஓ தலைவர்கள்

Published On :5 செப்டம்பர் 2026, 6:00 am IST

பல்வேறு நாடுகள் இணைந்து செயல்படும் சர்வதேச அமைப்புகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு (எஸ்சிஓ) மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டதாகும். ஐரோப்பா மற்றும் ஆசியாவை உள்ளடக்கிய யூரேசியாவில் எஸ்சிஓ தவிர்க்க முடியாத வலுவான சக்தி.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளுடன் "ஷாங்காய் ஃபைவ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 2001-இல் எஸ்சிஓவாக மாற்றப்பட்டது; அதில் கூடுதலாக உஸ்பெகிஸ்தான் இணைந்தது.

இந்தியாவும், பாகிஸ்தானும் 2017-இல் இந்த அமைப்பில் இணைந்தன. ஈரான் 2023-லும், பெலாரஸ் 2024-லும் இணைய, இப்போது 10 உறுப்பு நாடுகளுடன் செயல்பட்டு வருகிறது.

புவியியல் பரப்பு மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பிராந்திய அமைப்பாக எஸ்சிஓ திகழ்கிறது. உலகின் மொத்த பரப்பளவில் 24 சதவீதத்தையும் (யூரேசியாவில் 65%), உலக மக்கள்தொகையில் 42 சதவீதத்தையும் எஸ்சிஓ நாடுகள் கொண்டுள்ளன. இந்த நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளாதாரம் உலக ஜிடிபியில் 36%. சக்திவாய்ந்த அமைப்பான ஜி7 நாடுகளின் ஜிடிபி மதிப்பு 28%தான் என்பதிலிருந்து எஸ்சிஓவின் வலிமையை அறிய முடியும்.

ஆப்கானிஸ்தான், மங்கோலியா ஆகியவை எஸ்சிஓவின் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. எகிப்து, சவூதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் உள்பட 15 நாடுகள் பேச்சுவார்த்தைக் கூட்டாளிகளாகச் செயல்படுகின்றன. எஸ்சிஓவின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (ஆர்ஏடிஎஸ்) எனும் கூட்டு அமைப்பு உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் உள்ளது; இது, உளவுத் தகவல் பரிமாற்றம், பயிற்சி மற்றும் நிறுவனக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற எஸ்சிஓவின் 26-ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டுப் பிரகடனம், பயங்கரவாத எதிர்ப்பில் ஒருங்கிணைப்பை வலியுறுத்தியது. ஈரானுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மட்டுமன்றி, இன்று உலகத்தையே பெரும் எரிபொருள் சிக்கலை எதிர்கொள்ளச் செய்துள்ள ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலையும் வெளிப்படையாகக் கண்டித்தது.

"ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சபை சாசனத்தின் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை மீறுவதுடன், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகும். ஈரான் தலைமை மதகுருவாக இருந்த அயதுல்லா அலி கமேனியின் துயரமான மறைவுக்காக ஈரான் மக்களுக்கு எஸ்சிஓ உறுப்பு நாடுகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றன' என்று அந்தக் கூட்டுப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள், உக்ரைன் போரை காரணம் காட்டி ரஷியா மற்றும் அந்த நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்காக எஸ்சிஓ பிரகடனம் அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல் கண்டித்தது. ஐ.நா. மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணானதும், உலகப் பொருளாதாரத்தில் எந்தவொரு ஒருதலைப்பட்சமான கட்டாய நடவடிக்கைகளையும் எதிர்க்கிறோம் என்பது அமெரிக்காவுக்கு எஸ்சிஓ விடுத்திருக்கும் வலுவான செய்தி.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரால் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, உலகளாவிய விநியோகச் சங்கிலி, எரிசக்தி சந்தை மற்றும் நிதிச் சந்தைகள் நிலைகுலைந்துள்ள நிலையில், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து எஸ்சிஓ மாநாட்டில் விவாதிக்கப்பட்டது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. எரிசக்தி துறையில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை ஆதரிப்பதாகவும் எஸ்சிஓ பிரகடனம் உறுதிபடத் தெரிவித்தது.

பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய மூன்று தீமைகளை எதிர்த்துப் போராட எஸ்சிஓ நாடுகள் உறுதிபூண்டன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் வன்மையாகக் கண்டித்துள்ள இந்த நாடுகள், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் "இரட்டை நிலைப்பாடுகள்' ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும்

வலியுறுத்தின. எல்லை தாண்டிய ஊடுருவல் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்துக்கு அழைப்பு விடுத்தன.

"நிதியுதவி, ஆள்சேர்ப்பு, தீவிரவாதமயமாக்கல், புகலிடங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் முழுக் கட்டமைப்பும் ஒழிக்கப்பட வேண்டும். பயங்கரவாதம் என்பது மிகத் தீவிரமான விஷயம். இதை ஒழிப்பதில் இரட்டை நிலைப்பாடு இருக்கக் கூடாது என நாம் அனைவரும் ஒரே குரலாக வலியுறுத்த வேண்டும்' என்று எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை,

பயங்கரவாதத்தை ஆதரித்துவரும் பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடும் வகையில் அமைந்தது. உலகம் முழுவதும் பிளவுகள் அதிகரித்துவரும் வேளையில், நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தையும், வல்லரசுகளின் ஆதிக்க மனப்பான்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிவையும் பிரதிபலித்தது பிஷ்கெக் பிரகடனம்.

செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்

வினைக்குஅரிய யாவுள காப்பு?

நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?

திருக்குறள் (எண் 781) அதிகாரம்: நட்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.