காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

அழுத்தத்தில் இமயம்...!

நெகிழிக் கழிவுகள் நுண்ணிய நெகிழித் துகள்களாகச் சிதைவடைந்து இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனிப்படிவுகள், பனிப்பாறைகள் மற்றும் உயரமான மலைப்பகுதி ஏரிகளில் படிந்துவிடும் ஆபத்து உள்ளது.

இமயமலை

Published On :

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது கேதார்நாத். சுமார் 890 பேரை மட்டுமே மக்கள்தொகையாகக் கொண்ட கேதார்நாத், இந்தியாவின் 12 ஜோதிர்லிங்கங்களில் மிக உயரமான ஜோதிர்லிங்கம் அமைந்த வழிபாட்டுத் தலம்.

இந்தியாவின் முக்கியமான இமயமலை புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு கழிவு உருவாக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு கேதார்நாத் நகரப் பஞ்சாயத்து அளித்த தரவுகளில்தான் இந்த அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உள்ள 5 மாதங்களில் மட்டும் இந்தக் கோயிலில் 50.30 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகியுள்ளன. இது கடந்த 2025-ஆம் ஆண்டு முழு யாத்திரை காலத்தில் உருவான கழிவைவிட இரண்டு மடங்கு அதிகம். கேதார்நாத்தில் கடந்த 2023-இல் 32.58 டன் கழிவுகளும், 2024-இல் 26.10 டன்னும், 2025-இல் 21.40 டன் கழிவுகளும் உருவானது. இவற்றுடன் ஒப்பிடும்போது, 2026-இல் கடந்த 5 மாதங்களில் மட்டும் 50.30 டன் கழிவு உருவாகியுள்ளது என்பது கேதார்நாத் சுற்றுச்சூழல் ஆபத்தை எதிர்கொள்வதை உணர்த்துகிறது.

கேதார்நாத்தில் உருவாகும் கழிவுகள் நெகிழிகள், கரிமக் கழிவு, விலங்குக் கழிவுகள் எனப் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. யாத்ரிகர்களையும், பொருள்களையும் ஏற்றிச் செல்ல கோவேறு கழுதைகள் மற்றும் குதிரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் கழிவுகளும் பெரிய அளவில் சேகரமாகின்றன. கடந்த 5 மாதங்களில் இங்கு உருவான 50.30 டன் கழிவுகளில், சுமார் 20 டன் நெகிழிக் கழிவு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நெகிழிக் கழிவுகள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். காரணம், இவை பனிப்பொழிவு உருகுவதை வேகப்படுத்தி, சுற்றுச்சூழலை மேலும் நிலையற்றதாக்கும் என அவர்கள் கருதுகின்றனர். மேலும், முறையாக அகற்றப்படாத நெகிழிக் கழிவுகள் நுண்ணிய நெகிழித் துகள்களாகச் சிதைவடைந்து இமயமலைப் பகுதி முழுவதும் உள்ள பனிப்படிவுகள், பனிப்பாறைகள் மற்றும் உயரமான மலைப்பகுதி ஏரிகளில் படிந்துவிடும் ஆபத்து உள்ளது.

அத்துடன், இவை அதிகமாக சூரிய கதிர்வீச்சை உறிஞ்சி, பனி மற்றும் பனிப்பாறைகள் உருகுவதை விரைவுபடுத்தலாம் என்றும், அவ்வாறு அவை உருகும்போது அதில் உள்ள நுண்ணிய நெகிழித் துகள்கள் கங்கை போன்ற ஆறுகளுக்குக் கடத்தப்பட்டு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

கேதார்நாத்தில் உருவாகும் கழிவுகளின் அதிகரிப்பு, இங்கு வரும் யாத்ரிகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்புடன் நேரடித் தொடர்புடையது. இந்தத் திருத்தலத்துக்கு கடந்த 1990-இல் 1.18 லட்சம் பேர் மட்டுமே வந்துள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை 2000-த்தில் 2.15 லட்சமாகவும், 2010-இல் 4 லட்சமாகவும் உயர்ந்தது. 2022-இல் 15.63 லட்சமாகவும், 2023-இல் 19.61 லட்சமாகவும், 2024-இல் 16.52 லட்சமாகவும், 2025-இல் 17.68 லட்சமாகவும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நிகழாண்டில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்துள்ளனர்.

கழிவுகளை ஒரு பெரிய செயலாக்க நிலையத்துக்கு எளிதாகக் கொண்டுசென்று, அவற்றை மறுசுழற்சி செய்ய, சாதாரண சுற்றுலா நகரமான கேதார்நாத்தில் சாத்தியமில்லை. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் இமயமலையில் அமைந்துள்ள இந்தப் பகுதியில் புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் காரணமாக பெரிய கழிவு செயலாக்க வசதிகளை அமைப்பது இயலாது.

கேதார்நாத் மீதான பக்தர்களின் ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்கள் சாலை வழியாகவும், நடந்தும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்துள்ள ஹெலிகாப்டர் சேவை வழியாகவும் வந்தவண்ணம் உள்ளனர். இது, கேதார்நாத்தில் உள்கட்டமைப்பு, கடினமான இடங்களில் நீர், சுகாதாரம், கழிவு சேகரிப்பு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த 2013, ஜூன் மாதத்தில் பெய்த பலத்த மழையின்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பெரும் அழிவைச் சந்தித்தது கேதார்நாத் என்பதையும், இதில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 5,500 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

கேதார்நாத்தின் அருகே அமைந்துள்ள சோராபரி பனிப்பாறை மந்தாகினி ஆற்றின் நீராதாரமாகவும் உள்ளது. அதிகப்படியான யாத்ரிகர்களின் வருகையும், கழிவு சேகரமும் இப்பகுதி சுற்றுச்சூழலில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துமானால், அது சோராபரி பனிப்பாறை உருகுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, மேலும் ஓர் ஆபத்துக்கு வித்திடலாம்.

கேதார்நாத் போன்ற இமயமலைப் பகுதியில் சுற்றுலா வளர்ச்சியைக் காட்டிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புதான் முக்கியமானது. இதை அரசும், யாத்ரிகர்களும் உணர்வது அவசியம்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

திருக்குறள் (எண் 428) அதிகாரம்: அறிவு உடைமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.