திரைப்படத் துறையினருக்குக் குடியிருப்புகள் கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் கருணாநிதி புலம்போ புலம்பு என்று புலம்பியிருக்கிறார். 22-8-10 அன்று காலையில் வெளியான தினமணி நாளிதழில் ஓவியர் மதி வரைந்திருந்த விகடத் துணுக்கு அவரைப் படாதபாடு படுத்தியிருக்கிறது.
கலைஞர் வரலாற்றிலேயே முதன்முறையாக... கலைஞர் கதை வசனத்தில்... கலைஞர் பேரன் தயாரிப்பில்... கலைஞர் பேரன் இயக்கத்தில்... கலைஞர் பேரன் நடித்த... புத்தம் புதிய திரைக்காவியம்... கலைஞர் டி.வி.யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள் என்பதுதான் அந்த விகடத் துணுக்கு ஆகும்.
திரைப்பட விழாவில் இதற்கென நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு பின்வருமாறு பதிலளித்திருக்கிறார். "கலைஞருக்கு மகன் இருக்கக்கூடாதா, பேரன் பேத்தி இருக்கக்கூடாதா அவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபடக்கூடாதா வேறு யாருக்கும் வாரிசு இருந்து அவர்கள் இந்தத் துறையிலேயே ஈடுபட்டதே கிடையாதா?
மகத்தான நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகன் ராஜ்கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்தானே. ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசிகபூர், அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரணதீப் கபூர் இந்த கபூர்களெல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா!
கலைஞர் வீட்டில் மட்டும் உதயநிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவுநிதி என்று வந்தால் அது ஆகாது. இதற்காக பெரிய கேலிச்சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக்கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால், உண்மையை நீங்கள்தான் உணர்ந்து கொள்ளவேண்டும்.
பிரித்விராஜ் கபூரின் பேரன், கொள்ளுப்பேரன், பேத்தி வரை கலைத்துறையில் இருக்கலாம். சிவாஜி கணேசனின் மகன் பிரபு இருக்கலாம், அவரது மகன் துஷ்யந்த் இருக்கலாம். கருணாநிதி மட்டும் இருக்கக்கூடாது.
ஏனென்றால், கருணாநிதி செய்கிற குற்றம் திராவிட இனத்துக்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். அதை ஒழிக்க வேண்டும், வீழ்த்த வேண்டும் என்ற குறுகிய நோக்கமே அவர்களுக்கு உள்ளது. அதைத் தவிர வேறு உண்மையான எண்ணம் இருந்தால் என் பெயர் ஞாபகத்துக்கு வரும்போது பிரித்விராஜ் பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். அதேபோல் ரஜினிகாந்த்தின் மருமகனும் நடிப்பதால் அவருடைய பெயரும் ஞாபகத்துக்கு வந்திருக்க வேண்டும். ரஜினி முழு நேர அரசியலில் இல்லாத காரணத்தால் அவரை விட்டுவிடுகிறார்கள்'.
முதலமைச்சர் என்னும் உயர்ந்த பதவி வகிக்கிற ஒருவர் பத்திரிகையில் வெளிவரும் விகடத் துணுக்கு அல்லது கேலிச்சித்திரத்துக்குக் கொதித்தெழுந்து பதில் கூறுவது என்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்பது மட்டுமல்ல; சிறிதளவுகூட சகிப்புத் தன்மையும் கேலிச்சித்திரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு புன்முறுவல் பூக்கும் பெருந்தன்மையும் கொஞ்சங்கூட இல்லை என்பதையே அவருடைய பேச்சு எடுத்துக்காட்டியிருக்கிறது.
1940-களில் சங்கர் என மிகப்புகழ்பெற்ற கேலிச்சித்திர ஓவியர் இருந்தார். இந்தியாவின் மிகப்பெரிய பத்திரிகைகளில் அவருடைய கேலிச்சித்திரங்கள் அடிக்கடி வெளியாகி மக்களின் பாராட்டுக்கு உரியனவாகியிருக்கின்றன. பிற்காலத்தில் அவர் பெயரிலேயே சங்கர்ஸ் வீக்லி என்ற பெயரில் முழுக்க முழுக்க கேலிச்சித்திரங்களைக் கொண்ட பத்திரிகை ஒன்றை அவர் நடத்தினார்.
அந்தப் பத்திரிகையின் முதலாவது இதழை வெளியிடும் விழாவுக்கு இந்தியாவின் துணைப் பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் தலைமை தாங்கினார். பிரதமர் ஜவஹர்லால் நேரு இதழை வெளியிட்டார். இந்தியாவின் மிகப்பெரிய தலைவர்கள் இருவர் கலந்துகொண்ட அந்த விழாவில் மக்களும் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். விழா தொடங்கிற்று முதல் இதழை எடுத்து பிரதமர் நேருவிடம் சங்கர் கொடுத்தார். மற்றோர் இதழை வல்லபாய் படேலிடம் கொடுத்தார். அதன் அட்டைப்பட கேலிச்சித்திரத்தைப் பார்த்து இருவருமே புன்னகை பூத்தவண்ணம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த நாளில் நேருவுக்கும் படேலுக்கும் இடையே மிகுந்த கருத்து வேறுபாடு இருந்ததாகச் செய்திகள் வெளியான காலகட்டம். அதைச் சுட்டிக்காட்டும் வகையில் சங்கர் கேலிச்சித்திரம் வரைந்திருந்தார். நேருவும் படேலும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்த வண்ணம் பாய் பாய் என்கிறார்கள். ஆனால், ஒருவரின் முதுகுப்பக்கம் மற்றொருவரின் கையில் கத்தி இருப்பதாக வரைந்திருந்தார். இப்படியொரு படத்தை வரைந்து அட்டைப்படத்தில் போட்டுவிட்டு அந்த இருவரையுமே இதழ் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பது என்று சொன்னால் சங்கர் மிகப்பெரிய துணிச்சல்காரராக இருந்திருக்க வேண்டும்.
சங்கருக்கு இருந்த துணிச்சலைப் பாராட்டுவதைவிட நேருவும் படேலும் இந்த கேலிச் சித்திரத்தைச் சிரித்தவண்ணம் ஏற்றுக்கொண்டு சங்கரைப் புகழ்ந்து பேசியது அவர்கள் எவ்வளவு பெருந்தன்மை நிறைந்த பெருந்தலைவர்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பத்திரிகைகளில் பல்வேறு அரசியல் தலைவர்களைப் பற்றி அவர்களின் நடவடிக்கைகள் குறித்து கேலிச்சித்திரங்கள் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. கேலிச்சித்திரங்களைச் சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லையென்று சொன்னால் தலைமைப் பொறுப்புக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதுதான் பொருளாகும். சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன் என புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சாடியதைப்போல் இருக்கக்கூடாது.
திரையுலகைச் சேர்ந்தவர்கள் கூடியிருக்கும் அந்த விழாவில் ஒரு விகடத் துணுக்கைச் சாடிப் பேசுவதற்கு முதலமைச்சர் நீண்டநேரம் எடுத்துக்கொண்டது என்பது கூடியிருந்த கூட்டத்தினருக்கிடையே எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை முதலமைச்சர் அறிய மாட்டார். பாராட்டுமழையில் நனைந்து கிடக்கும்போது சிந்திக்க நேரம் ஏது?
முதலமைச்சரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திரைப்படத் துறையில் பணியாற்றுவது குறித்து யாரும் குறைசொல்லவில்லை. நடிப்புத் திறமை, இயக்கும் திறமை போன்ற தங்களது சொந்தத் திறமைகளின் மூலம் யார் வேண்டுமானாலும் திரைப்படத்துறையில் ஈடுபடலாம். ஒளிவிட்டு மின்னலாம். ஆனால், அதிகார பலத்தைப் பின்னணியாகக் கொண்டு திரையுலகை ஆட்டிப்படைக்க முற்படும்போதுதான் எதிர்ப்பு விமர்சனங்கள் கிளம்புகின்றன.
1970-களின் தொடக்கத்தில் முதலமைச்சர் கருணாநிதி தனது மூத்த மகன் மு.க. முத்துவை திரைப்படத்தில் நடிக்க வைத்து அவருக்கு நாடெங்கும் ரசிகர் மன்றங்களை உருவாக்கி எம்.ஜி.ஆருக்கு எதிராகவும், போட்டியாகவும் அவரைத் தூக்கி நிறுத்த முயற்சி செய்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால், அந்த முயற்சியில் மு.க.முத்துவும் வெற்றிபெறவில்லை. கருணாநிதியும் தோற்றுப்போனார். விளைவு எம்.ஜி.ஆர். கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகாலம் ஆட்சி பீடத்தின் அருகேகூட கருணாநிதியை நெருங்கவிடவில்லை.
திரையுலகில் இப்போது அதிகார பலத்தைக் காட்டி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும் மிரட்டப்படுகிறார்கள். நடிகைகள் படும்பாடு வெளியே சொல்ல முடியாது. தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் இருக்கக்கூடிய 300-க்கும் மேற்பட்ட திரைப்படக் கொட்டகைகள் முதலமைச்சரின் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவர்களை மீறி எந்தத் தயாரிப்பாளரானாலும் அல்லது நடிகரானாலும் எதுவும் செய்யமுடியாது. வெற்றிகரமாக ஓடக்கூடிய படங்களை இவர்கள் மூலம் மட்டுமே திரையிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. இல்லையேல், அதிகார பலத்தின் மூலம் அந்தப் படங்களுக்குத் திரைப்படக் கொட்டகைகள் கிடைக்காதபடி தடுத்து நிறுத்தப்படுகிறது அல்லது ஓரிரு நாளுக்குமேல் அந்தப் படங்கள் ஓடாதபடி முடக்கப்படுகின்றன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட நூறுக்கு மேற்பட்ட படங்கள் திரையிட முடியாமல் துருப்பிடித்துக் கிடப்பது ஏன்? இவையெல்லாம் முதலமைச்சருக்குத் தெரியாமலா நடக்கின்றன?
சில மாதங்களுக்கு முன்னால் முதலமைச்சருக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் பேசிய நடிகர் அஜீத் யாருக்கும் அஞ்சாமல் துணிவாகச் சில கருத்துகளை வெளியிட்டார். இதுபோல நடக்கும் திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களும், நடிகைகளும் கட்டாயப்படுத்தப்படுவதாகப் பகிரங்கமாகப் புகார் செய்தார். மேடையில் முன்வரிசையில் முதலமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து தனது இரு கரங்களையும் தலைக்குமேல் உயர்த்திக் கைதட்டியபோது கூட்டமே ஆரவாரத்தால் அதிர்ந்தது. அஜீத்தின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் வாய்மூடி மௌனம் சாதித்தார்.
பிரித்விராஜ் கபூரோ அல்லது சிவாஜி கணேசனோ தங்களது வாரிசுகளை அதிகார பலத்தின் துணைகொண்டு திரையுலகில் நுழைத்தது இல்லை. அவரவர்களுக்கு இருந்த இயற்கையான திறமையின் மூலமே அவர்கள் திரையுலகில் மின்னினார்கள். எந்தக் கட்டத்திலும் அவர்கள் திரையுலகைச் சேர்ந்தவர்களை மிரட்டியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததில்லை. சற்றும் பொருத்தமில்லாமலும் தேவையற்ற வகையிலும் பிரித்விராஜ் கபூரையும், சிவாஜி கணேசனையும் தன்னுடன் ஒப்பிட்டுக்கொள்ள முதலமைச்சர் முயன்றிருப்பது வெட்கக்கேடானதாகும்.
விகடத் துணுக்கு ஒன்றையே சகித்துக்கொள்ள முடியாத கருணாநிதி அவரது முரசொலி பத்திரிகையில் அப்போது முதலமைச்சராகவும் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் இருந்த காமராஜரை இழிவுபடுத்தும்வண்ணம் தொடர்ந்து கேலிச்சித்திரங்களை வெளியிடவில்லையா. அதற்கு காமராசர் என்றைக்கேனும் கோபித்தது உண்டா? அவற்றைப் பொருள்படுத்தியது உண்டா?
காமராசரை மட்டுமல்ல, எந்தத் தலைவரைத்தான் முரசொலி விட்டுவைத்தது? காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, பல்வேறு கட்சித் தலைவர்களும் ரசக்குறைவான கேலிச்சித்திரங்களின் மூலம் இழிவுபடுத்தப்பட்டார்களே. அவற்றையெல்லாம் ஒருதடவை திரும்பிப் பார்க்கும்படி கருணாநிதிக்கு நினைவுபடுத்துவது நமது கடமையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.