

இந்திய மேலாண்மை கழகம் (ஐ.ஐ.எம்.), இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐ.ஐ.டி.) போன்ற உலகப்புகழ்பெற்ற கல்விநிறுவனங்களின் வரிசையில் இந்திய அறிவியல் கழகம்(ஐஐஎஸ்சி) முதலிடத்தில் உள்ளது.
சுவாமி விவேகானந்தரின் ஆலோசனையின் பேரில் ஜம்ஷெட்ஜி நஸ்ஸர்வான்ஜி டாட்டாவால் 1911-ஆம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது தான் இந்திய அறிவியல் கழகம். பொது மற்றும் செயல்முறை சார்ந்த வேதியியல் மற்றும் மின்சார-தொழில்நுட்பத்துறைகளுடன் தொடங்கிய இந்திய அறிவியல் கஹழகத்தில் தற்போது 45 துறைகள் உள்ளன. 1956-ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகம், நிகர்நிலை பல்கலைக்கழகமாக இயங்கிவருகிறது.
படிப்புகள்
அறிவியல் ஆய்வுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் உயிரி வேதியியல் முதல் விமான விண்வெளியியல் வரை புதுமையான பல பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற அடிப்படை அறிவியலை அடிப்படையாக கொண்டு இங்கு பல்வேறு துறைகள் இயங்கி வருகின்றன.
அறிவியல், பொறியியல் பிரிவுகளில் பிஎச்டி, எம்எஸ்சி, ஒருங்கிணைந்த பிஎச்டி, பிஎஸ், எம்இ, எம்டெக் போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதலே மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கிவிடுகின்றன. நுழைவுத்தேர்வு மூலமே சேர்க்கைகள் நடைபெறுகின்றன.
இந்திய அறிவியல் கழகத்தில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், அறிவியலில் ஆழ்ந்த அறிவு படைத்திருக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படுகிறது. அதேபோல, அறிவியல் கழகத்தில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இந்திய அறிவியல் கழகத்தில் படித்து முடித்ததும் உலக அளவில் வேலைவாய்ப்புகள் காணக்கிடைக்கின்றன. கல்வித்தரம் சிறப்பாக இருப்பதால், வேலைவாய்ப்புகள் வீடு தேடிவரும் என்று கூறலாம்.
கல்வி வாய்ப்புகள்
இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் ஆராய்ச்சி மையமாக உருவெடுத்திருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் ஒருங்கிணைந்த பிஎச்டி, சாதாரண பிஎச்டி, எம்எஸ்சி, எம்இ, எம்டெக், எம்டிஇஎஸ், எம்எம்ஜிஎம்டி போன்ற படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளநிலை மாணவர்களிடையே ஆராய்ச்சிப் படிப்புகள் மீது ஈடுபாட்டை அதிகரிக்க 4 ஆண்டுகால பிஎஸ் (ஆராய்ச்சி) பட்டப்படிப்பையும் அளித்து வருகிறது. அத்துடன் உடனடி வேலைவாய்ப்பை அளிக்கும் பிடெக்-கணிதம், கம்ப்யூட்டிங் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
பிடெக் பட்டப்படிப்பு
கணிதம், கம்ப்யூட்டிங் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்புகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் 4 ஆண்டுகால பிடெக் (கணிதம் -கம்ப்யூட்டிங்) பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்பை முடித்ததும் மேலும் ஓராண்டு படித்தால் எம்டெக் பட்டத்தையும் பெறமுடியும். கணிதம், கணினி அறிவியல், தரவு அறிவியல் ஆகியவற்றின் ஆழமான பயன்பாடு தேவைப்படும் எதிர்கால துறைகள், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் குறித்த ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத்தில் புதிய தலைமுறை விற்பன்னர்களை உருவாக்குவதே இந்த படிப்பின் அடிப்படை நோக்கமாகும்.
எம்டெக் பட்டப்படிப்பு
விமானவியல் பொறியியல், செயற்கை நுண்ணறிவு, உயிரி பொறியியல், கட்டுமானப்பொறியியல், வேதிப்பொறியியல், பூமி மற்றும் பருவநிலை அறிவியல், கணக்கீடு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல், மின்னணுமுறை பொறியியல், மின்னணு பொருள் வடிவமைப்பு, இயக்க பொறியியல், கருவி பொறியியல், இயந்திர பொறியியல், திடப்பொருள் பொறியியல், நுண்மின்னணுவியல், குறைக்கடத்தி தொழில்நுட்பம், ரொபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி முறைகள், திறன் உற்பத்தி, சமிக்ஞை செயலாக்கவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை பட்டம் பெற்றவர்கள், கேட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் சேர்க்கை பெறலாம்.
மாணவர் சேர்க்கை
2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2-ஆம் ஆண்டு பியூசி, 12 ஆம் வகுப்பு படித்தோரும், தற்போது படித்துக்கொண்டிருப்போரும் 4 ஆண்டு பிஎஸ், பிடெக் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம், மொழிப்பாடம், வேறு பாடங்களை 2-ஆம் ஆண்டு பியூசி வகுப்பில் பயின்றிருக்க வேண்டும். 2-ஆம் ஆண்டு பியூசி வகுப்புத்தேர்வில் குறைந்தப்பட்சமாக 60 சதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ண்ண்ள்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கேட்(பொறியியலில் பட்டதாரி திறனறித் தேர்வு), என்.இ.டி ஜே.ஆர்.எஃப்.(தேசிய தகுதித் தேர்வு-ஜூனியர் ஆராய்ச்சி பெல்லோஷிப்), கூட்டுநுழைவுத்தேர்வில்(ஜேஇஇ-அட்வான்ஸ்டு) பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு தகுதி பெறுவர். பிஎஸ் படிப்பில் 137 மாணவர்களும், பிடெக் படிப்பில் 52 மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர். பெண்கள், வெளிநாட்டு மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது.
ஆராய்ச்சிப் படிப்புகள்
ஆராய்ச்சிப் படிப்புகளில் ஒருங்கிணைந்த பிஎச்டி, சாதாரண பிஎச்டி, எம்டெக், எம்டிஇஎஸ், எம்எம்ஜிடி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோபிசிக்ஸ், பயோகெமிட்ஸ்ரி, எக்காலஜிகல் சயின்சஸ், ஹையர் எனர்ஜி பிசிக்ஸ், இன்ஆர்கானிக் அண்ட் பிசிகல் கெமிஸ்ட்ரி, மெட்டீரியல்ஸ் ரிசர்ச், கணிதம், மைக்ரோபயாலஜி, செல் பயாலஜி, மாலிகுலர் பயோபிசிக்ஸ், மாலிகுலர் ரீபுரொடக்சன், டெவலப்மென்ட் அன்ட் ஜெனிடிக்ஸ், நியூரோ சயின்ஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, இயற்பியல், சாலிட்ஸ்டேட் அன்ட் ஸ்ட்ரக்சுரல் கெமிஸ்ட்ரி ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு வழங்கப்படுகின்றன. இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்கும் மாணவர்கள் ஒருங்கிணைந்த பிஎச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கேட் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு
Indian Institute of Science,
Malleshwaram,
Bangalore-560 012
தொலைபேசி: 080-22933400
தொலைநகல்: 080-23600853
மின்னஞ்சல்: admission.acad@iisc.ac.in
இணையதளம்: https://iisc.ac.in/admissions
- ந.முத்துமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.