/

குறிப்பிட்ட நிறுவனத்துக்காக சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் ஓஎஸ்எம் டெண்டரில் மாற்றம்! பட்டியலிடும் மாணவர் !!

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சிபிஎஸ்இ விடைத்தாள் திருத்தும் ஓஎஸ்எம் டெண்டர் கிடைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டதை பட்டியலிடும் மாணவர்.

News image

விடைத்தாள் திருத்தக் குளறுபடி விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கம் அளித்த மாணவா் சாா்தக் சித்தாந்த்.

Updated On :3 ஜூன் 2026, 3:24 pm IST

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து 12ஆம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை கணினி வழியாக திரையில் மதிப்பிடும் (ஓஎஸ்எம்) முறையை வழங்கும் சேவை நிறுவனத்தை தேர்வு செய்ய வெளியிடப்பட்ட ஒப்பந்தங்களில் நடந்த மாற்றங்கள் குறித்து மாணவர் சாா்தக் சித்தாந்த் பட்டியலிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை கணினி வழியில் திருத்துவதற்கு தேவையான சேவைகளை அளிக்க ஒப்பந்தப் புள்ளி கோரிய நடைமுறையில் இருந்த முரண்பாடுகள் குறித்து, நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் 17 வயது மாணவா் சாா்தக் சித்தாந்த் நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் ஒப்பந்தத்தில் நடந்த தொடர்ச்சியான மாற்றங்கள் குறித்து விடியோவில் பட்டியலிட்டுள்ளார்.

ஓஎஸ்எம் சேவையை வழங்க கோயெம்ப்ட் எஜுடெக் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் சிபிஎஸ்இ தன்னுடைய விதிமுறைகளை தானே திருத்தி எழுதியிருக்கிறது என்று மாணவர் குற்றம்சாட்ட, அனைத்தும் அரசு விதிப்படியே நடந்திருப்பதாக சிபிஎஸ்இ மறுத்துள்ளது.

தன்னுடைய விதிமுறைகளைத் திருத்தி, சிபிஎஸ்இ எவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியிருக்கிறது என்று பார்க்கலாம் என சிதாந்த் தன்னுடைய சமூக வலைத்தளளப் பதிவை தொடங்கியிருக்கிறார்.

நாடு முழுவதும் சுமாா் 17.68 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

முதல் முறையாக ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) முறையில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களை சிபிஎஸ்இ மதிப்பீடு செய்தது.

இந்த நிலையில், 12-ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் குறைந்ததோடு, பல மாணவா்கள் மிகக் குறைந்த மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றனா். இதன் காரணமாக, புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ நடைமுறை மீது தொடா்ந்து பல்வேறு புகாா்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையால் பாதிக்கப்பட்ட +2 மாணவர் சிதாந்த், வெறுமனே மதிப்பெண் குறைந்துவிட்டதை மட்டும் சுட்டிக்காட்டாமல், இதற்கு பின்னால் இருக்கும் பல்வேறு விவகாரங்களையும், ஓஎஸ்எம் முறையை மேற்கொள்ள கோயெம்ப்ட் எஜுடெக் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் அடுத்தடுத்து ஒப்பந்தங்கள் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதையும் சுட்டிக்காட்டி பொது வெளியில் புகார் அளித்திருந்தார்.

அதாவது, சிபிஎஸ்இ நிர்வாகம் இதற்காக மூன்று ஒப்பந்தங்களை வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு ஒப்பந்தங்களில் கூறப்பட்ட விதிமுறைகள், குறிப்பிட்ட அந்த கோயெம்ப்ட் எஜுடெக் நிறுவனத்துக்கு கிடைக்க வழிவகை செய்யாததால், மூன்றாவது டெண்டரில் ஓஎஸ்எம்-க்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ தளர்த்தியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தன்னுடைய வலைப்பக்கத்தில் ஓஎஸ்எம் முறையை நிர்வகிக்கும் டெண்டர் நிபந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டியிருக்கும் சிதாந்த், மோசமான செயல்திறன், கறுப்புப் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்கள், நிதித் தகுதி வரம்புகள், சிஎம்எம்ஐ நிலைகள் மற்றும் திட்டத் தகுதி அளவுகோல்கள் உள்பட 15 பிரிவுகள் அடுத்தடுத்த டெண்டர்களில் மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முரண்பாடு என்னவென்றால், பழைய டெண்டரில், மோசமான செயல்திறன் தொடர்பான மூன்று பிரிவுகள் இருந்தன; அதன்படி, சேவை வழங்குநர் மோசமாகச் செயல்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் புதிய டெண்டரில் அது முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.

மாறாக, தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனமாக இருக்கக் கூடாது என்று மாற்றப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஒப்பந்தத்தில் ரூ.50 கோடி நிகர லாபம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதே வேளையில் கோயம்ப்ட் நிறுவனம் ரூ.50 கோடி ரூபாய் வருவாய் இலக்கை அப்போதுதான் மிகவும் சிரமப்பட்டு எட்டியிருந்தது.

இவ்வாறு அடுத்தடுத்து வெளியான ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட 15 திருத்தங்களை அவர் கண்டுபிடித்துள்ளார். அதில், எம்எம்ஐ மற்றும் உள்கட்டமைப்புத் தகுதிகள் அனைத்தும் கோயம்ப்ட் நிறுவனத்துக்கு ஏற்ப மிகக் கச்சிதமாக திருத்தப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில், தனக்கு, நெறிமுறை ஹேக்கர் நிசர்க் அதிகாரி மற்றும் இது குறித்து ஆழமாக விசாரித்து வரும் பத்திரிகையாளர்களும் வெகுவாக உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓஎஸ்எம் முறை மோசமானது அல்ல, ஆனால் அதனை செயல்படுத்துவதற்கு முன்பு, நன்கு சோதித்து இறுதி செய்திருக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பயிற்சி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் திறன்கொண்ட நிறுவனங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.

இதற்காக சிபிஎஸ்இ வெளியிட்ட ஆயிரக்கணக்கான டெண்டர் ஆவணங்களை தான் ஆய்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.