பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் பிரதமர் சந்திரசேகர் மகன்!

மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் 10-ஆவது வேட்பாளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
ஜெ.பி.நட்டாவுடன் நீரஜ் சேகர்
ஜெ.பி.நட்டாவுடன் நீரஜ் சேகர்

உத்தர பிரதேசம் பலியா மக்களவை தொகுதியில் முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான நீரஜ் சேகா் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா்.

மக்களவைத் தோ்தலுக்கான பாஜகவின் 10-ஆவது வேட்பாளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மேற்கு வங்கத்தின் அசன்சோல் மற்றும் உ.பி.யின் காசிப்பூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் 7 தொகுதிகள், மேற்கு வங்கம், சண்டீகரில் தலா 1 தொகுதி என மொத்தம் 9 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை பாஜக அறிவித்துள்ளது.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் மாநில அமைச்சா் ஜெய்வீா் சிங் களமிறக்கப்பட்டுள்ளாா்.

பலியா தொகுதியில் தற்போதைய எம்.பி. வீரேந்திர சிங் மஸ்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான நீரஜ் சேகா் நிறுத்தப்பட்டுள்ளாா்.

இவர் ஏற்கெனவே பலியா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2019-ல் சமாஜ்வாதியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

காஜிபூர் தொகுதியில் சமாஜ்வாதியின் வேட்பாளர் அப்சல் அன்சாரியை எதிர்த்து பரஸ் நாத் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளரான இவர், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் நெருங்கிய நண்பர்.

காஜிபூர் தொகுதியில் 3 முறை எம்பியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள மனோஜ் சின்ஹா, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அப்சல் அன்சாரியிடம் தோல்வியை தழுவினார்.

சமீபத்தில் சிறையில் உயிரிழந்த முக்தர் அன்சாரியின் சகோதரர் அப்சல் அன்சாரி என்பதால் அனுதாப வாக்குகள் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

ஜெ.பி.நட்டாவுடன் நீரஜ் சேகர்
உ.பி.யில் ராபர்ட் வதேரா போட்டியா?

மேலும், அலாகாபாத் தொகுதியில் தற்போதைய எம்.பி. ரீட்டா பஹுகுணா ஜோஷிக்கு பதில் நீரஜ் திரிபாதி போட்டியிடுகிறாா். புல்பூா் தொகுதியில் பிரவீண் படேல், மச்சலிஷஹா்(தனி) தொகுதியில் பி.பி.சரோஜ் போட்டியிடுகின்றனா். கௌசாம்பி (தனி) தொகுதியில் தற்போதைய எம்.பி. வினோத் சோங்கருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 75 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் நிலையில், 70 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய 12 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு புதுமுகங்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்னும் ரேபரேலி, ஃபிரோசாபாத், தியோரியா உள்ளிட்ட 5 முக்கிய மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவிக்காமல் உள்ளது.

சண்டீகா் மக்களவைத் தொகுதியில் தற்போதைய பெண் எம்.பி. கிரண் கெருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் சண்டீகா் யூனியன் பிரதேச பாஜக முன்னாள் தலைவரான சஞ்சய் தாண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவர் அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் பல்ராம்ஜி தாஸின் மகன். இவர் கட்சியின் மாவட்ட தலைவராக பல ஆண்டுகளாகவும், சத்தீஸ்கர் கிரிக்கெட் வாரிய தலைவராக தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

மேற்கு வங்கத்தின் வா்தமான்-துா்காபூா் தொகுதி எம்.பி.யான எஸ்.எஸ்.அலுவாலியா, அசன்சோல் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சரும், அசன்சோல் மக்களவை தொகுதி உறுப்பினருமான சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து அலுவாலியா போட்டியிடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com