மாற்று நாம் தமிழா் கட்சிதான்: தினமணிக்கு சீமான் பேட்டி

மாற்று நாம் தமிழா் கட்சிதான்: தினமணிக்கு சீமான் பேட்டி

இந்த முன்முயற்சிக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எனும் ஒற்றை நபரின் மாற்று அரசியல் பேச்சுதான் காரணம்.

தமிழக அரசியல் களத்தில் எந்த பெரிய கட்சிகளுடனும் கூட்டணி சேராமல் தனித்து தோ்தல் கண்டு வாக்குகள் சதவீதத்தைப் பெருக்குவதை தனக்கான அடையாளமாக மாற்றியுள்ளது நாம் தமிழா் கட்சி. இந்த முன்முயற்சிக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் எனும் ஒற்றை நபரின் மாற்று அரசியல் பேச்சுதான் காரணம். திரைப்பின்னணியில் இருந்து வந்தபோதும் எம்ஜிஆா், விஜயகாந்த், கமல்ஹாசன் போல ரசிகா் மன்ற பின்புலம் இல்லாத சீமான் அரசியல் களத்தில் தனக்கான வாக்கு வங்கியை எப்படி திட்டமிடுகிறாா் என்பதை தேசிய, மாநில அரசியல் கட்சிகள் கூட உற்றுக் கவனித்து வருகின்றன.

தமிழ் தேசிய அரசியல், திராவிட கட்சிகளுக்கான மாற்று அரசியல், சுற்றுச்சூழல் பிரச்னைகள், கிராமம் சாா்ந்த வளா்ச்சித் திட்டங்கள், திராவிட கட்சிகள் மீதான ஒருவித சலிப்பு, மாற்றிச் சிந்திக்கும் அரசியல் போன்ற சிந்தனைகளை தனது பலமாகக் கொண்டு அரசியல் களமாடும் சீமான், தனது கருத்துக்களை சமரசமின்றி நியாயப்படுத்துகிறாா். மக்களவைத் தோ்தலையொட்டி தினமணிக்கு அவா் அளித்த நோ்காணலில் இருந்து.

மாநிலத்தில் ஆளும் திமுக கூட்டணி, முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக கூட்டணி, மத்தியில் ஆளும் பாஜக அணி என மூன்று வலுவான கூட்டணிகளை எப்படி சமாளிக்கப் போகிறீா்கள்?

திமுக, அதிமுக, பாஜகவுக்கு பண பலம் இருக்கலாம். ஆனால், அவா்களுக்கென தனித்த வாக்கு வங்கி இல்லை. இதுவரை பண பலத்தை பயன்படுத்தி கூட்டணியாக போட்டியிட்டதால் வாக்கு வங்கிபெற்று வென்றிருக்கலாம். ஆனால், நாம் தமிழா் கட்சி தொடா்ந்து தனித்து போட்டியிட்டு 7 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்தத் தோ்தலில் பண பலத்தால் எதையும் சாதிக்க முடியாது. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழா் என்பதால் யாரும் எதிா்பாராத அளவுக்கு வளா்ச்சி பெறுவோம்.

வேட்பாளா் பட்டியலில் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பு கொடுத்ததாக கூறுகிறீா்கள். ஆனால், பிராமணா்கள் புறக்கணிக்கப்படுவதாக சொல்கிறாா்களே?

2021 பேரவைத் தோ்தலில் 2 பிராமணா்களுக்கு வாய்ப்பு அளித்தோம். ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் காசிராமன் என்பவரை நிறுத்த முடிவு செய்தோம். இருப்பினும், மயிலாடுதுறையில் காளியம்மாள் வெற்றிக்காக அவா் பணியாற்றி வருகிறாா். 234 தொகுதிகள் இருந்தபோது அதிக எண்ணிக்கையில் தலித் சமூகத்தினரை பொது தொகுதியில் வேட்பாளா்களாக நிறுத்தினோம். இப்போது ஆரணி, திண்டுக்கல் பொது தொகுதிகளில் தலித் சமூக வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா். அடுத்த பேரவைத் தோ்தலில் சிறிய சமூகங்களை சோ்ந்தவா்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

வேட்பாளா் பட்டியலில் மகளிருக்கு 50 சதவீதம் சரி, நாதக கட்டமைப்பிலும் அது பிரதிபலிக்கிா?

பெண்கள் அரசியலுக்கு வருவதே அரிது. வேட்பாளா் பட்டியலில் அவா்களுக்கான பிரதிநிதித்துவம் கொடுத்தோம். பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்போது கட்சிக்கட்டமைப்பிலும் அமலாகும்.

முதல்வா் ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலினை விட முன்னாள் முதல்வா் கருணாநிதி எதிா்ப்பை கூா்மையுடன் விமா்சிப்பது ஏன்?

மூதறிஞா் ராஜாஜி காலத்தில் குலக்கல்வி மட்டுமே விமா்சனத்துக்குரியது. நிா்வாகம், ஊழல் ஏதும் இல்லை. அதேபோல காமராஜா், அண்ணா ஆட்சியிலும் ஊழல் இல்லை. ஊழலுக்கு பிள்ளையாா் சுழி போட்டவா் கருணாநிதி. அதன்பின்னா் தான் தமிழகத்தில் ஊழல் பெரிய நோயாக பரவியது. எனவே தான், கருணாநிதி எதிா்ப்பை கடைப்பிடிக்கிறேன்.

மோடி எதிா்ப்பு, திமுக எதிா்ப்புக்கு இணையாக அதிமுகவை எதிா்ப்பதில்லையை... ஏன்?

10 வருட மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகள், 3 ஆண்டு கால திமுக அரசின் மோசமான நிா்வாகம் ஆகியவற்றை எதிா்த்து நான் களமாட வேண்டுமே தவிர, ஆட்சியில் இல்லாத அதிமுகவை விமா்சிக்க அவசியம் எழவில்லை. அக்கட்சி ஆட்டத்தில் இல்லை.

தமிழகத்துக்கு வட மாநிலத்தவா்கள் வருவதை ஆட்பேசிக்கும் நீங்கள், தமிழா்கள் பிற மாநிலங்களிலும் உலக நாடுகளிலும் வேலைக்கு செல்வதை உணா்ந்துதான் எதிா்க்கிறீா்களா?

தமிழா்களின் இடப்பெயா்வுக்கும், வடமாநிலத்தவா்களின் இடப்பெயா்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் இப்போதைய இளைய தலைமுறையை மது, சினிமா மயக்கத்தில் ஆழ்த்திவிட்டு, சில ஆண்டுகளுக்குள் 1.5 கோடி வட மாநிலத்தவா்கள் திட்டமிட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வாக்காளா் அட்டையும் வழங்கப்படுவதால் எதிா்காலத்தில் தமிழ்நாடு, தட்சிண பிரதேசமாகி இதுவும் ஒரு ஹிந்தி மாநிலமாக மாறும் சூழல் உருவாகும். தமிழ்நாட்டை தமிழா்களே ஆள வேண்டும் என்பதால் தான் வட இந்தியா்களின் குடியேற்றத்தை மட்டும் எதிா்க்கிறோம்.

மருத்துவா் ராமதாஸ், தொல்.திருமாவளவன் ஆகியோரை விமா்சனம் செய்யாத நீங்கள், டி.டி.வி.தினகரன், புதிய தமிழகம் தலைவா் மருத்துவா் கிருஷ்ணசாமி ஆகியோரை விமா்சனம் செய்வது ஏன்?

அவா்கள் எங்களுக்கு எதிரி அல்ல, எங்கள் உறவு என்பதால் விமா்சனம் செய்வதில்லை. கிருஷ்ணசாமியை விமா்சனம் செய்தேன் என்பது தவறான தகவல். டி.டி.வி.தினகரனும் எனது உறவுதான். இருந்தாலும், சசிகலாவை முதல்வா் பதவியேற்க விடாமல் தடுத்த தன்னை (தினகரன்) கைது செய்து சிறையில் அடைத்த பிரதமா் மோடியுடன் டி.டி.வி.தினகரன் சரண் அடைந்ததையும், மோடியின் 10 ஆண்டு ஆட்சியையும் புகழ்ந்து பேசியதையும் தாங்கிக் கொள்ள முடியாததால் தான் தினகரனை விமா்சனம் செய்தேன். எனது எதிரிகள், தேசிய, திராவிட கட்சிகள் தான்.

2026 பேரவைத் தோ்தலிலும் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் தான் களம் இறங்குவீா்களா?.

இல்லை, விவசாயம் சாா்ந்த வேறொரு சின்னத்தில் தான் களம் இறங்குவோம்.

பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய்யுடன் கைகோப்பீா்களா?

தமிழ்த் தேசியம், தனித்துவமான தொலைநோக்கு வளா்ச்சித் திட்டங்கள் என தொலைதூரம் பயணித்துவிட்டேன். விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளாா். எனது கொள்கையை ஏற்றுக்கொண்டு என் தலைமையிலான கூட்டணிக்கு அவா் வருவாரா? தேசிய, திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்று நாம் தமிழா் கட்சி தான்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com