ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

மே 25-ல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள ஹரியாணாவின் 10 மக்களவைத் தொகுதிகளின் நிலவரம் பற்றி...

சண்டீகர்: பெரும்பாலும் சாதிகளைச் சுற்றியே இயங்கும் ஹரியாணா மாநில அரசியலில் மாநிலத்தின் மக்கள்தொகையில் சுமார் 28 சதவிகிதம் இருக்கும் ஜாட் வகுப்பினர் காலங்காலமாக ஒரு பெரிய பங்காற்றி வருகின்றனர். மாநிலத்தில் மே 25 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 10 மக்களவைத்  தொகுதிகளில் குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் – சிர்ஸா, ஹிஸ்ஸார், ரோஹ்தக், சோனிபேட் - இவர்களுடைய செல்வாக்கு கணிசமாக இருக்கிறது.

விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் போராட்டம் போன்றவற்றின் காரணமாகப் பெரும்பாலான ஜாட் மக்கள், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு எதிராக இருக்கின்றனர். மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர்கள் மக்களுடைய கோபத்தை எதிர்கொள்கின்றனர். கடந்த இரு தேர்தல்களில் கிடைத்த வெற்றிக்குக் காரணமான ஜாட் அல்லாத மக்களுடைய ஆதரவின் மீதுதான் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை வைத்துள்ளது.

மாநிலத்தில் ஜாட் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் மற்றும் அதன் பிரிவுகள், ஜனநாயக மக்கள் கட்சி ஆகியவற்றிடம்தான் பிரிந்துகிடக்கின்றன. ஜனநாயக மக்கள் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கண்டதன் மூலம் ஜாட் மக்களின் வாக்குகளைப் பிரித்துத் தங்களுக்கு ஆதரவாகத் திருப்பிவிட முடியும் என்றும் பாரதிய ஜனதா நம்புகிறது. ஜாட் மக்களின் வாக்குகள் பிரிந்துவிழுமா, அல்லது வழக்கம்போல ஒரேமாதிரி விழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?
நான் 'பயலாஜிகலாக'ப் பிறந்திருக்க வாய்ப்பில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி

ஜனநாயக மக்கள் கட்சியிடமிருந்து பிரிந்திருப்பதன் மூலம் காங்கிரஸுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியிருக்க முடியும். இவ்விரு கட்சிகளும் தேர்தலுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம். உள்ளபடியே இப்போது மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய விவசாய சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் பற்றியெல்லாம் தங்களுடைய நிலைப்பாடு என்னவென விவசாயிகளிடம் தெளிவுபடுத்த முடியாமல் ஜனநாயக மக்கள் கட்சி திணறிக்கொண்டிருக்கிறது என்கிறார் அரசியல் ஆய்வாளரான பஞ்சாப் பல்கலை. பேராசிரியர் அஷுதோஷ் குமார்.

சில நாள்கள் முன் சோனிபேட் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் மோகன் லால் படோலியை ரோஹ்னா கிராமத்தில், போராடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் சுற்றிவளைத்துக் கொண்டனர்; இதனால் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை அரைகுறையாக முடித்துக்கொண்டு அவர் திரும்ப வேண்டியதாயிற்று. இதேபோலத்தான் இருக்கிறது மற்றவர்களின் நிலைமையும் – ஹிஸ்ஸாரில் ரஞ்சித் சௌடாலா, ரோஹ்தக்கில் அரவிந்த் சர்மா, சிர்ஸாவில் அசோக் தன்வர்.

தாஹியா காப் பகுதியிலுள்ள சுமார் 24 கிராமங்கள் பாரதிய ஜனதா கட்சியைப் புறக்கணித்துள்ளதுடன் தங்களை அணுக முயன்ற வேட்பாளர்களையும் எச்சரித்துள்ளனர். ஹிஸ்ஸாரில் ஜாட் மக்களின் செல்வாக்கு மிக்க நரா கிராமத்திற்குள் நுழைய விடாமல் ஜனநாயக மக்கள் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான துஷ்யந்த் சௌடாலா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?
மக்களவைத் தேர்தல்: காஷ்மீர் டூ கன்னியாகுமரி - திருக்குறள் எக்ஸ்பிரஸில் அலசல்!

பாரதிய ஜனதா – ஜனநாயக மக்கள் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை விவசாயிகள் போராட்டக் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோர்ச்சாவில் இடம் வகிக்கும் பாக்ரி சம்பல் ஜட்டா கிஸான் சங்கர்ஷ் சமிதி முடுக்கிவிட்டிருக்கிறது.

“எங்களுடைய 20 கேள்விகளுக்கும் எவ்வித பதிலும் அளிக்காத பாரதிய ஜனதா – ஜனநாயக மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்; எங்களை வழக்குகள் மூலம் மிரட்டப் பார்க்கிறார்கள். பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளர்களைத் தோற்கடிக்கக் கூடிய மாற்றுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியேயில்லை” என்கிறார் சமிதியின் தலைவர் நன்தீப் சிங் நத்வான்.

“இந்த முறை ஜாட் மக்கள் மட்டுமல்ல, ஜாட் அல்லாத மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. ராணுவத்தில் சேர விரும்பும் மாநில இளைஞர்களின் நோக்கத்தைச் சிதைக்கும் மத்திய அரசின் அக்னிவீர் திட்டம் தொடர்பாகக் கடும் அதிருப்தியில்  இருக்கிறார்கள்” என்றும் நத்வான் தெரிவிக்கிறார்.

ஜாட் அல்லாத மக்களை ஒருங்கிணைக்கும் பா.ஜ.க. திட்டத்தில் மனோகர் லால் கட்டர்கூட ஓர் அங்கம்தான். ஆனால், தொடர்ந்து அவர் செல்வாக்கு இழந்துவந்த நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நயப் சிங் சைனியைக் கடந்த மார்ச் மாதத்தில் மாநில முதல்வராக்கியது பாரதிய ஜனதா கட்சி. மாநிலத்தில் சுமார் 8 சதவிகிதம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு வாக்காளர்கள் இருக்கின்றனர். ஜாட் அல்லாத மக்களின் வாக்குகளைத் தொடர்ந்து பெற வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ள பாரதிய ஜனதா நினைக்கிறது. இந்த முதல்வர் மாற்றம்கூட கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொள்வதைப் போல காட்டிக் கொள்வதற்காகத்தான் என அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?
‘நீதிகூட பணத்தை சார்ந்துள்ளது’: ராகுல் காந்தி

உள்ளூர் ஜாட் தலைவர்களைத் தொடர்புகொள்ள முயன்றபோதிலும் இதுவரையில் பாரதிய ஜனதாவால் வெற்றி பெற முடியவில்லை.

“இந்தப் போராட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் தொண்டர்களால் திட்டமிட்டு நடத்தப்படுபவை. மக்கள் அவர்கள் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் கொண்டுவந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள்” என்கிறார் கட்டர்.

ஹரியாணாவில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பெரிய சிக்கலில் தவிக்கிறது ஜனநாயக மக்கள் கட்சி. கொத்துக்கொத்தாக நிறைய பேர் கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார்கள். பெருமளவில் ஜாட் மக்களின் வாக்குகளைத்தான் ஜனநாயக மக்கள் கட்சி பிரிக்கும்; ஆனால், இந்த முறை போட்டியிலேயே காணப்படவில்லை. இந்திய தேசிய லோக்தளமோ தாக்குப் பிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் பக்கம்தான் வலுவாகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது.

மே 25 - வாக்குப் பதிவு, ஜூன் 4-ல் முடிவுகள் தெரிந்துவிடும். பார்க்கலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com