பெருந்துறை: நகர்ப்புறமும் கிராமப்புறமும்

பெருந்துறை தொகுதி : கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் நகர்ப்புறங்களில் திமுகவுக்கு கணிசமான வாக்குகளும் உள்ளன.
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம்
பெருந்துறை சிப்காட் தொழில் வளாகம் முகப்புத் தோற்றம்

ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் கிராமப் பகுதிகளையும் 10 சதவீதம் நகரப் பகுதியையும் உள்ளடக்கியது பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி. விவசாயம், நெசவு, குறு, சிறு தொழில்கள், சிப்காட் தொழில்பேட்டை என தொழில் வளம் கொண்டது இந்தத் தொகுதி. வடக்கே, பவானி, கோபி தொகுதிகளையும் தெற்கே, காங்கயம், பல்லடம் தொகுதிகளையும், கிழக்கே, ஈரோடு மேற்கு தொகுதியும், மேற்கே, திருப்பூர் வடக்கு தொகுதியையும் எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

பெருந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட 29 ஊராட்சிகளும், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம் ஆகிய 6 பேரூராட்சிகளும், ஊத்துக்குளி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளும், ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய 2 பேரூராட்சிகளும், சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட 6 ஊராட்சி பகுதிகளும் இந்தத் தொகுதியில் அடங்கும். 

   பெருந்துறையிலுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி தோற்றம்  
   பெருந்துறையிலுள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி தோற்றம்  

சமூக, பொருளாதார நிலவரம்

வேளாண்மையும், தொழிற்சாலைகளும் இந்தத் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன. இதைத் தவிர ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பரிசீலிக்கப்பட்ட இடங்களில் பெருந்துறையும் ஒன்று. பெருந்துறை தொகுதியில், கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் 35 சதவீதமும், அருந்ததியர் சமூகத்தினர் 20 சதவீதமும், முதலியார் சமூகத்தினர் 15 சதவீதமும், பிற சமூகத்தினர் 20 சதவீதமும், புலம்பெயர் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 10 சதவீதமும் உள்ளனர்.

வாக்காளர் விவரம்

ஆண்கள் - 1,10,325, பெண்கள்- 1,17,067, மூன்றாம் பாலினத்தவர் - 6, மொத்தம் - 2,27,398

கடந்த தேர்தல்கள் 

1957 - என்.கே. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1962 - என்.எஸ்.எஸ். மான்றாடியார் (காங்கிரஸ்)
1967 - பாலசுப்பிரமணியம் (சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி)
1969 - சண்முக சுந்தரம் (சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி) (இடைத்தேர்தல்)
1970 - எஸ்.ஆர். சென்னியப்பன் (திமுக) (இடைத் தேர்தல்)
1971 - என்.கே. பழனிசாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
1977 - மருத்துவர் அ. பொன்னுசாமி (அதிமுக)
1980 - டி.கே. நல்லப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்)
1984 - மருத்துவர் அ.பொன்னுசாமி (அதிமுக)
1989 - வி.என். சுப்பிரமணியன் (அதிமுக., ஜெ)
1991 - வி.என். சுப்பிரமணியன் (அதிமுக)
1994 - வி.பி. பெரியசாமி (அதிமுக)
1996 - என். பெரியசாமி (இந்திய கம்யூனிஸ்ட்)
2001 - கே.எஸ். பழனிசாமி (அதிமுக)
2006 - சி. பொன்னுதுரை (அதிமுக)
2011 - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (அதிமுக)
2016 - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (அதிமுக)

இந்தத் தொகுதியில் கடந்த 1970 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தத் தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே திமுக ஒதுக்கி வந்தது. கடந்த 2016 தேர்தலில் நேரடியாக திமுக வேட்பாளர் களம் கண்டார். திமுக சார்பில் போட்டியிட பி.மோகனசுந்தரம் 12,771 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் தோப்பு என்.டி.வெங்கடாச்சலத்திடம் தோல்வி அடைந்தார்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

இதுவரை ஆற்றுக் குடிநீர் வழங்கப்படாத, பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 130 கிராமங்களுக்கும், ஊத்துக்குளி ஒன்றியத்தில் 238 கிராமங்களுக்கும்  ரூ. 50 கோடி செலவில் தொடங்கப்பட்ட புதிய திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. அதேபோல் பெருந்துறை தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி வழங்குவதற்காக ரூ 123.76 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டப் பணி நடைபெற்று வருகிறது.

சாலைப் போக்குவரத்து நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்த பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு மருந்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம் போன்றவை கட்டப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் சாலைப் பணி, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள்ளன. தொகுப்பு வீடுகள், நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளன. 

முக்கிய பிரச்சனைகள்

சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், துடுப்பதி, பி.ஓலப்பாளையம், சரளை, பல்லகவுண்டன்பாளையம் ஆகிய பிரதான சாலைகளில் மேம்பாலம், அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும். பெருந்துறை தொகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் காற்று, நிலம், நீர் மாசுபட்டுள்ளது. இதனால் மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான சிகிச்சை மையங்கங்களை குறிப்பாக புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

போட்டியிட வாய்ப்புள்ள கட்சிகள்

அதிமுக அதிக முறை வெற்றி பெற்றுள்ள தொகுதி என்பதால் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அதிமுக நேரடியாகவே போட்டியிடும். இந்த முறையும் தோப்பு என்.டி.வெங்கடாசலமே போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியைப் பொருத்தவரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த கட்சியின் மாநிலப் பொருளாளர் கே.கே.சி.பாலசுப்பிரமணியம் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் நகர்ப்புறங்களில் திமுகவுக்கு கணிசமான வாக்குகளும் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com