துறையூர்(தனி): தொகுதியை மீட்குமா அதிமுக?

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு தனித் தொகுதியான துறையூரில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுமே களம் காணுகின்றன.
துறையூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
துறையூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்
Published on
Updated on
2 min read

தொகுதி அறிமுகம்:  உப்பிலியபுரம் தனித் தொகுதியே 2011 தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு துறையூர் (தனி) தொகுதியாக பெயர் மாற்றப்பட்டு பட்டியல் சாதியினர் போட்டியிட வகை செய்யப்பட்டது. 1962ல் உருவாக்கப்பட்ட உப்பிலியபுரம் தொகுதி 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் பொதுத் தொகுதியாகவும், அதன் பின்னர்  1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006 வரை நடைபெற்ற தேர்தல்களில் பழங்குடியினத்தவருக்கான தனித் தொகுதியாகவும், 2011, 2016 தேர்தல்களில் பட்டியலினத்தவருகான துறையூர் தனித் தொகுதியாகவும் உள்ளது.

துறையூர் நகராட்சியும், உப்பிலியபுரம், பாலகிருஷ்ணம்பட்டி என 2 பேரூராட்சிகளும், துறையூர், உப்பிலியபுரம் ஒன்றியங்களில் சுமார் 53 ஊராட்சிகளும் உள்ளன.

பச்சைமலை
பச்சைமலை

சமூகம், தொழில்கள்:  பட்டியலினத்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முத்தரையர், உடையார், ரெட்டியார், வெள்ளாளர்,  கவுண்டர், முதலியார், செட்டியார், வன்னியர், முஸ்லீம், கிறிஸ்துவர் சமூகத்தினரும் கணிசமாக  உள்ளனர். வறண்ட பகுதியாக உள்ள இயற்கை வளங்களும் தொழிற்சாலைகளும் இல்லாத தொகுதி. மழைநீரையும், ஏரிப் பாசனத்தையும் பெரிதும் விவசாயத்துக்கு நம்பியுள்ள பகுதி.

நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள்: துறையூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நாமக்கல் - துறையூர் -பெரம்பலூர் -அரியலூர் ரயில் சேவை வசதி, துர்நாற்றம் வீசும் துறையூர் சின்ன ஏரியிலிருந்து கழிவுநீரை வெளியேற்றி அதனைத் தூர் வாரி சுத்தம் செய்தல் ஆகியவை தேர்ல் வாக்குறுதிகளாகவே தொடர்கின்றன.

துறையூர் நகர எல்லை விரிவுபடுத்தப்பட்டு, மக்கள்தொகையும், வீடுகளும் அதிகரித்துள்ள நிலையில் துறையூர் நகர மக்களுக்கு என்று தனியாக காவிரி குடிநீர் திட்டத்தை செயல்படுத்துதல், துறையூரில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், காய்கனி மார்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றுதல், விபத்து மற்றும் மகப்பேறு உள்ளிட்ட அவசரகால மருத்துவ சேவையுடன் துறையூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தல், நகர்புற மருந்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகளும் வெறும் தேர்தல் வாக்குறுதிகளாகவே நீண்ட காலமாக உள்ளன.

கோரையாறு
கோரையாறு

1996ல் திமுக அரசு செயல்படுத்திய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் விடுபட்டு போன 199 கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்த  அதிமுக அரசு 2015ம் ஆண்டு ரூ. 143 கோடி ஒதுக்கியிருந்த நிலையில், பணிகள் நிலுவையிலேயே உள்ளன.

தொகுதியின் எதிர்பார்ப்புகள்: தென் திருப்பதி என்றழைக்கப்படும் பெருமாள்மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மலைச் சாலையை விரிவுபடுத்தி அரசு பேருந்து வசதி ஏற்படுத்துதல் நீண்ட நாளைய கோரிக்கை.

பச்சமலையில் உள்ள மங்களம் அருவி, கோரையாறு அருவியில் தடுப்புக் கம்பிகள் பொருத்துதல், பச்சமலைக்கு சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் மருத்துவச் செடிகள் வளர்ப்புப் பூங்கா, பூக்கள் கண்காட்சியை நடத்த ஏதுவாக பல்வேறு வகையான பூக்கள் வளர்ப்பு பூங்கா, ரோப் கார் வசதி, கீழக்கரையில் செயற்கையாக ஏரி அமைத்து படகு சவாரி வசதி செய்தல், புளியஞ்சோலை சுற்றுலா மையத்தில் குழந்தைகள் -பெரியவர்கள் மனமகிழ் பூங்கா, அங்கு குடிநீர், கழிவறை, மின் விளக்கு வசதி ஆகிய அடிப்படை வசதி செய்து தருதல், பெரம்பலூர் சாலை - ஆத்தூர் சாலை வரையும், முசிறி  பிரிவு  சாலை - ஆத்தூர் சாலை வரையும் புறவழிச்சாலைகள் அமைத்தல், உத்தமர் கோவிலிலிருந்து துறையூர் வழியாக வாழப்பாடி வரையுள்ள மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தல், பெரம்பலூரிலிருந்து துறையூர் வழியாக கரூர், நாமக்கல்லுக்கு நான்கு வழிச்சாலை அமைத்தலும் கிடப்பில் உள்ள கோரிக்கைகள்.

நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள புளியஞ்சோலை ஆற்றுநீரை புதுப்பட்டி கிராமத்தில் அணை கட்டி தேக்குதல்,  2006 - 2011 திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட சரபங்கா- திருமணிமுத்தாறு- அய்யாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றுதல், வைரிசெட்டிப்பாளையத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல், பச்சமலையில் விளைவிக்கப்படும் கிழங்கு, முந்திரி, பலாப்பலம் ஆகியவற்றை சந்தைப்படுத்தவும், நேரடி கொள்முதல் செய்யவும் வசதி செய்தல், துறையூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம், கோட்டாட்சியர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நீடித்த வண்ணம் உள்ளது. துறையூர் தனி மாவட்டம் கோரிக்கையும் தனித்தே நிற்கிறது.

இதுவரை வெற்றி பெற்றவர்கள்: இங்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 2 முறை காங்கிரசும், 5 முறை திமுகவும், 6 முறை (1987ல் அதிமுக (ஜெ) அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற   மூக்கன் உள்பட) அதிமுகவும் வெற்றிப் பெற்றுள்ளன.

தொடர்ந்து அதிமுக, திமுக இரு கட்சிகளுமே களம் காணுகின்றன. வரும் தேர்தலும் இதற்கான களம்தான். இருப்பினும், கடந்த முறை சொற்ப வாக்குகளில் கைவிட்ட தொகுதியை மீட்க வேண்டும் என அதிமுகவும், மீண்டும் தொகுதியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக-வும் களம் காணவுள்ளன.

தற்போதைய வாக்காளர்கள்:  ஆண்- 1,09,171, பெண்- 1,16,359, மூன்றாம் பாலினம்- 15, மொத்தம்- 2,25,545.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com