
69 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் அதிமுக தடம் பதிக்காத தொகுதியாகவும், திமுகவின் கோட்டையாகவும் இருந்து வருகிறது திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி.
ஆம். சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலம். ஆஸ்ரமங்கள் நிறைந்த ஆன்மீக நகரம். கிரிவல நகரம் போன்ற பெருமைகளைப் பெற்றது திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதி. பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவது திருவண்ணாமலை நகரின் சிறப்பு.
திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட 39 வார்டுகள், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேங்கிக்கால், நல்லவன்பாளையம் உள்பட 49 கிராம ஊராட்சிகள், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் வருவாய் உள் வட்டத்தின் சில கிராமங்கள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் துர்க்கைநம்மியந்தல் உள்பட சில கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள், ஓரிரு சிறிய அளவிலான தொழிற்சாலைகள் இருந்தாலும் தொகுதியின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தொகுதியின் மொத்த வாக்காளர்களில் முதலியார், வன்னியர் சமூகத்தினர் அதிகப்படியாக உள்ளனர்.
இரட்டை உறுப்பினர் தொகுதி:
1952, 1957 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களின்போது இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக திருவண்ணாமலை தொகுதி இருந்தது. 1952 தேர்தலில் ஏ.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) பொதுத்தொகுதி உறுப்பினராகவும், ஆர்.தங்கவேலு (காங்கிரஸ்) தனித்தொகுதி உறுப்பினராகவும் வெற்றி பெற்றனர்.
1957 தேர்தலில் ப.உ.சண்முகம் (திமுக) பொதுத்தொகுதி உறுப்பினராகவும், பி.எஸ்.சந்தானம் (திமுக) தனித்தொகுதி உறுப்பினராகவும் வெற்றி பெற்றனர்.
தேர்தல்களில் வென்ற வேட்பாளர்கள்:
1962-பி.பழனிப்பிள்ளை (காங்கிரஸ்)
1967-டி.விஜயராஜ் (காங்கிரஸ்)
1971-ப.உ.சண்முகம் (திமுக)
1977-ப.உ.சண்முகம் (திமுக)
1980-கே.நாராயணசாமி (காங்கிரஸ்)
1984-ஏ.எஸ்.ரவீந்திரன் (காங்கிரஸ்)
1989-கு.பிச்சாண்டி (திமுக)
1991-வி.கண்ணன் (காங்கிரஸ்)
1996-கு.பிச்சாண்டி (திமுக)
2001-கு.பிச்சாண்டி (திமுக)
2006-கு.பிச்சாண்டி (திமுக)
2011-எ.வ.வேலு (திமுக)
2016-எ.வ.வேலு (திமுக)
திமுகவின் கோட்டை:
1952 முதல் 2016 வரை 15 முறை சட்டசபைத் தேர்தல்களை திருவண்ணாமலை தொகுதி சந்தித்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 9 முறையும் வென்றுள்ளன. இதன் மூலம் திருவண்ணாமலை தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது.
தடம் பதிக்காத அதிமுக:
இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் 1980-ல் போட்டியிட்ட ப.உ.சண்முகம், 2006இல் போட்டியிட்ட வி.பவன்குமார், 2011-ல் போட்டியிட்ட எஸ்.ராமச்சந்திரன், 2016-ல் போட்டியிட்ட பெருமாள்நகர் கே.ராஜன் ஆகியோர் தோல்வியைத் தழுவினர். 69 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒருமுறைகூட அதிமுக தடம் பதிக்கவில்லை.
நிறைவேற்றப்பட்ட முக்கியத் திட்டங்கள்:
கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதை ரூ.65 கோடியில் மேம்படுத்தப்பட்டு நடைபாதை, வடிகால் வசதி, பக்தர்களுக்கான ஓய்வறைகள் அமைக்கப்பட்டன.
திருவண்ணாமலை, ஈசான்ய லிங்கம் அருகே அறநிலையத்துறை சார்பில் கிரிவல பக்தர்களின் நலன் கருதி 123 அறைகளுடன் 430 பேர் தங்கும் வகையிலான யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்:
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளையும் இணைக்கும் வகையில் ரிங் ரோடு அமைக்கும் பணி, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரையிலான சாலை விரிவாக்கப் பணி ஆகியவை பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
விவசாயிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு:
திருவண்ணாமலை நகரில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு திடீரென மூடப்பட்ட டான்காப் எண்ணை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். திருவண்ணாமலையில் தனியார் நிர்வாகம் சார்பில் தொடங்கி மூடப்பட்ட ஸ்ரீஅருணாச்சலா சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.12 கோடியை பட்டுவாடா செய்யவேண்டும்.
நந்தன் கால்வாயை தூர்வாரி திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தின் 24 ஏரிகள் மூலம் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்ய வேண்டும் என்பன போன்ற விவசாயிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.
வாக்காளர்கள் விவரம்:
2021-ல் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் 1,37,856 ஆண் வாக்காளர்கள், 1,46,956 பெண் வாக்காளர்கள், இதர பாலின வாக்காளர்கள் 39 பேர் என மொத்தம் 2 லட்சத்து 84 ஆயிரத்து 851 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிக்க ஏதுவாக 296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கூட்டணிக்குப் போகும் தொகுதி?:
இந்தச் சூழலில் திருவண்ணாமலை சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பில் தமிழக முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளரும், தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான எ.வ.வேலு மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இந்தத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது.
இதேநேரத்தில் அதிமுக முக்கியப் புள்ளிகள் சிலரும் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். 69 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட தடம் பதிக்காத அதிமுக, இந்தத் தேர்தலில் மீண்டும் தனது வேட்பாளரையே நிறுத்துமா...? அல்லது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்குமா...? என்பது மதில்மேல் பூனையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.