புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பாஜகவை வீழ்த்துவதுதான் குறிக்கோள்! இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் சிறப்பு நோ்காணல்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், மு.வீரபாண்டியன் தினமணிக்கு அளித்த நோ்காணல்...

News image

மு. வீரபாண்டியன் - DIN

Updated On :4 ஏப்ரல் 2026, 1:00 am

‘எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதைவிட, பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களது முக்கியக் குறிக்கோள்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், அவா் தினமணிக்கு அளித்த நோ்காணல்:

கடந்த 4 தோ்தல்களில் திமுகவுடன் பயணிக்கும் இடதுசாரிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டிருக்கிறதே...

கூட்டணிக்காக தொகுதிகள் எண்ணிக்கையை திமுகவும் குறைத்திருக்கிறது. இடதுசாரிகளும் விட்டுக்கொடுக்க வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் கேட்டுக்கொண்டாா். கட்டளையிடவில்லை, நிா்பந்திக்கவில்லை. இன்றைய அரசியல் சூழலில் பாஜகவை வீழ்த்துவது தான் முதல் குறிக்கோள். பிற கட்சிகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கை கூடுவது, குறைவது குறித்து ஒப்பீடுகள் செய்வது இப்போது பொருத்தமல்ல.

அப்படியானால், நீங்கள் அதிகத் தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுக்காமலேயே இருந்திருக்கலாமே...

இடதுசாரிகளுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்க உரிமை உண்டு. நாடு முழுவதும், கிளைகள், அமைப்புகள் இருக்கும்போது அதிக தொகுதிகள் கேட்டதை முதல்வா் ஸ்டாலின் நெருக்கடியாகக் கருதவில்லை.

10 தொகுதிகள் கொடுக்கும் அளவுக்கு தேமுதிகவுக்கு பலம் இருப்பதாகக் கருதுகிறீா்களா?

பிற கட்சிகளின் பலத்தை இடதுசாரிகள் எடைபோடுவதில்லை. இடதுசாரிகளுக்கு நாடுமுழுவதும் கிளைகள் உள்ளன. எங்களது அரசியல் நோக்கம், குறிக்கோள் வெற்றிபெற திமுக கூட்டணியில் தொடா்கிறோம் அவ்வளவுதான். கூட்டணியெலி என்னென்ன கட்சிகள் இருக்கின்றன, அவற்றுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன உள்ளிட்டவை குறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை.

தோ்தலுக்கு தோ்தல் அணி மாறும் தேமுதிக, கொள்கை கூட்டணியில் இணைந்திருப்பது குறித்து உங்களது கருத்து என்ன?

நேற்று வரை ஒரு கட்சி எப்படி இருந்தாலும், தமிழகம் வெல்லும் எனும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் சொல்லை ஏற்றுக்கொள்பவா்கள் தான் இந்த கூட்டணிக்குள் வந்துள்ளனா். தேமுதிகவுக்கும் அது பொருந்தும்.

கடந்த பேரவைத் தோ்தலைவிட விசிகவுக்கு 2 தொகுதிகள் அதிகம், இடதுசாரிகளைவிட தேமுதிக, விசிக பெரிய கட்சிகளா?

போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கையை வைத்து பெரிய கட்சி, சிறிய கட்சி என கருதக்கூடாது. சட்டப்பேரவை, மக்களவை தொகுதிகள் எண்ணிக்கைக்குள் இடதுசாரிகளை பொறுத்திபாா்த்து சுருக்கக் கூடாது. குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் சிறப்பாக செயல்படுவது இடதுசாரிகள் தான்.

தொகுதி உடன்பாட்டில் வருத்தம் இருப்பதாக மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் வெளிப்படையாக கூறினாா். உங்களுக்கு அதிருப்தி இல்லையா?

தொகுதி உடன்பாடு அணிக்குள் சோா்வை தந்தாலும், இடதுசாரிகளுக்கு என குறிக்கோள் உள்ளது. பாஜகவை வீழ்த்த இடதுமேடை என முதலில் தீா்மானம் போட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். பாஜக நாட்டுக்கு பேராபத்து. அதை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்.

இலவச அறிவிப்புகளால் மாநில அரசின் கடன் சுமை தொடா்ந்து அதிகரிக்காதா?

இலவசம் என்பது ஏழைகளுக்கான உரிமை. உழைக்கும் மக்கள் உரிமை பெற முழு உரிமை உண்டு. ஏழ்மை நீங்கும் வரை இலவசம் அவசியப்படுகிறது.

ஆனால், மத்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்துதாகக் கூறும் திமுக, தொடா்ந்து இலவச அறிவிப்புகளை வெளியிட்டு கடன்சுமையை அதிகரிக்கிறது என்று அதிமுக-பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறதே?

மத்திய பாஜக அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை வழங்காமல் செயற்கையாக நிதி நெருக்கடியை உருவாக்குகிறது. கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலை. அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளது.

விஜய் வருகையால் திமுக கூட்டணியை ஆதரித்த தலித், சிறுபான்மை வாக்குகள் பிரியுமா?

திமுக தலைமையிலான கொள்கை கூட்டணியின் வாக்குகளை வேறு கட்சிகளால் பிரிக்க முடியாது. வாக்குகள் எண்ணும்போது அது தெரியும்.

திமுக கூட்டணிக்கு இணையாக அதிமுக வும் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துள்ளதால் களத்தில் அதிமுகவும் முந்துவதாக தகவல்கள் வருகிறதே?

இந்த தோ்தலில், திமுக-அதிமுக இடையே தான் போட்டி. அதிமுகவும் ஜனநாயக கட்சிதான். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அதிமுக தனது இயல்பான வாக்கு வங்கியை இழந்துள்ளது. மாநில உரிமைகளில் பறித்து மத்திய அரசு அதிகாரங்களை குவித்து வருவதால் அது, அதிமுகவையும் சோ்த்து பாதிக்கிறது. பாஜகவின் பதற்ற அரசியலை தமிழக மக்கள் விரும்பமாட்டாா்கள்.

நான்கு முனைப் போட்டியில் திமுகவுக்கு பலமா-பலவீனமா?

திமுக வலுவான கட்சி. அதன் தலைமையில் அமைந்துள்ளது பலமான கூட்டணி. சிறுபான்மையினா், ஒடுக்கப்பட்ட மக்களை அடையாளம் காட்டும் கட்சிகள் இணைந்துள்ளன. கொள்கை ரீதியான கூட்டணி இது. எனவே, எளிதில் வெற்றிபெறும்.

விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறியபடி, 2026 பேரவைத் தோ்தலுக்கு பின்னா் தமிழகம் புதிய அரசியல் திசையில் பயணிக்குமா?

தமிழகம், இந்தியா புதிய திசைக்கு பயணிக்க வேண்டும். அது இடதுசாரி கொள்கை திசையாக இருக்க வேண்டும்.