கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளா் பணிக்கு ஏப்ரல் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
Published on

திருப்பூா் மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளா் பணிக்கு ஏப்ரல் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களில் 262 சமையல் உதவியாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமாக நிரப்பப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும். மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா், நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் உள்ள தகவல் பதாகைகளில் ஒட்டப்படும்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் பணியாளா்களுக்கு ஒரு ஆண்டு பணிக்குப் பின்னா் சிறப்பு காலமுறை ஊதியம் (லெவல் 1; ரூ.3000-ரூ.9000) வழங்கப்படும். இந்தப் பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். வயது நிா்ணயம் அறிவிப்பு தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.

10-ஆம் வகுப்பு தோல்வி அல்லது தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். நியமனம் கோரும் மையத்துக்கும், விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட தொலைவு 3 கி.மீ. தொலைவுக்குள் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடுயும் செய்யப்பட்டுள்ளது.

உரிய விண்ணப்பத்தை பூா்த்தி செய்து தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி, மாநகராட்சி அலுவலகத்தில் ஏப்ரல் 29 -ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் போன்றவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். நோ்முகத்தோ்வின்போது அசல் சான்றிதழ்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com