

புதுடில்லி, ஜன. 5 - உணவில் கலப்படம் செய்வதால் உடல்நலனுக்கு பாதகமோ, மரணமோ அல்லது கடும் ஊறு விளைவிக்குமேயானால் கலப்படம் செய்வோருக்கு குறைந்தபட்சம் ரூ. 5000 அபராதத்திலிருந்து ஆயுள் தண்டனைவரை அளிக்கவேண்டும் என்று பார்லிமெண்ட் கூட்டுக் கமிட்டி யோசனை கூறியுள்ளது.
1974-ம் வருட உணவுக் கலப்படத் தடுப்பு (திருத்த) மசோதா பற்றிய கமிட்டி அறிக்கையை தலைவர் திரு. திரிலோக்சிங் ராஜ்ய சபையில் சமர்ப்பித்தார்.
வேண்டுமென்றே கலப்படம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஆனால் அதேநேரத்தில் ஒன்றுஅறியாத அப்பாவிகள் வேண்டாத கொடுமைக்கு உள்ளாக்கப்படக்கூடாதென்றும் கமிட்டி கருதுகிறது.
கலப்படக் குற்றங்களை கமிட்டி தரம் பிரித்து காட்டியுள்ளது. குற்றத்தின் தரத்திற்கேற்ப தண்டனைகளையும் கூறியுள்ளது.
உடல்நலனுக்கு கேடுசெய்யாத பிரதான உணவு, ஆனால் இயற்கை காரணங்களாலும் மனிதனுக்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் கெட்டுப்போய் யாராவது பாதிக்கப்பட்டால் இதற்கு சட்ட அமலிலிருந்து பூரணவிதி விலக்கு அளிக்கப்படுகிறது.
பிரதான உணவில் உடல்நலன் பாதிக்காத வகையில் கலப்படம் செய்யப்பட்டால், இதற்கான தண்டனை 3 மாதத்திலிருந்து 2 ஆண்டுகள் வரை சிறையும், ரூ. 500க்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.
கலப்பட உணவு மரணம், கடும் பாதிப்பு இன்றி உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கும் பட்சத்தில் தண்டனை ஓராண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை சிறையும், குறைந்தபட்ச அபராதம் ரூ. 2000மும் விதிக்கப்படும் என்று கமிட்டி கூறியுள்ளது.
கடும் தண்டனை தேவையிராத கலப்பட வழக்குகளை உடனடி விசாரணை செய்ய ஷரத்துகளை கமிட்டி சிபாரிசு செய்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டுகள் விசாரணை செய்ய வேண்டும். ...
... உணவு இலாகாவிலிருந்து ஊழலை ஒழிக்க திறமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கமிட்டி கூறுகிறது. தேவையான விஞ்ஞானப் படிப்புள்ள உணவு இன்ஸ்பெக்டர்களுக்கு நல்ல சம்பளம் அளித்தால் லஞ்சத்தை ஒழிக்கலாமென்று கமிட்டி கருதுகிறது.
பாலில்தான் கலப்படம் அதிகமாக உள்ளது. பால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுத்தால் டில்லி பால் பண்ணைத் திட்டம்கூட தப்பாதென்றும் இதற்கும் சத்தான பால் சப்ளைக்கும் எதாவது வழி கண்டுபிடிக்க வேண்டுமென்றும் கூறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.