

புதுடில்லி, ஜன. 23 - வருமாண்டுகளில் இந்தியாவிடமிருந்து அதிகளவில் பொருள்களை வாங்கவும், பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப, விஞ்ஞான துறைகளில் இரு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்புக்கும் பிரான்ஸ் இன்று உறுதி கூறியது.
4 நாள் அரசாங்க விஜயம் செய்ய பிரெஞ்சு பிரதமர் ஜேக்விஸ் சிராக் இன்று டில்லி வந்து சேர்ந்த பின், பிற்பகலில் பிரதமர் திருமதி இந்திரா காந்தியுடன் 75 நிமிஷம் பேச்சு நடத்தியபோது இதை அறிவித்தார்.
பகலுணவுக்கு முன்பு இரு பிரதமர்களும் உதவியாளர் யாருமின்றியும், பின்னர் உதவியாளர்களுடனும் பேச்சு நடத்தினர். அநேகமாக பெரும்பாலான முக்கிய சர்வதேச பிரச்னைகளில் இரு தலைவர்களும் ஒருமித்த கருத்துகளை தெரிவித்தனர்.
திருமதி காந்தியின் கருத்துக்களை தாம் கேட்டறிந்த பின்பு, அபிவிருத்தித் துறையிலும், ஜனநாயகத்தை காப்பதிலும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை தமது நாடு பாராட்டுவதாக திருமதி காந்தியிடம் தாம் தெரிவித்ததாக பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் திரு. சிராக் கூறினார். இந்த ஆண்டே பிரான்ஸுக்கு விஜயம் செய்யுமாறு தாம் திருமதி காந்திக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறினார்.
திருமதி காந்தியுடன் திரு சிராக் பேசியபின், ராஷ்டிரபதி திரு. பக்ருதீன் அலி அகமதையும் சந்தித்து அரை மணி நேரம் பேசினார்.
நாளை ராஷ்டிரபதியும், திருமதி அகமதும், பிரதமர் திரு. சிராக் தம்பதிகளை கெளரவிக்க விருந்தளிக்கிறார்கள்.
மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா சம்பந்தமாக பல்வேறு விஷயங்களிலும் நாங்கள் ஒரே கருத்துக் கொண்டிருந்தது பற்றி வியப்படையத் தேவை இல்லை என திரு. சிராக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
சர்வதேச பிரச்னைகள் குறித்தும் இரு நாட்டுக் கருத்துக்களும் ஒரே மாதிரி இருந்தன. இந்தியாவின் அபிவிருத்தி முயற்சிகள் பற்றி திருமதி காந்தி எடுத்துரைத்தார்.
சூயஸ் கால்வாய் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டதால், பிரான்ஸ் இந்தியாவின் மேற்கு கரைப்பகுதிக்கு வெகு அருகாமையில் வந்து விட்டதால், இந்நாட்டிலிருந்து அதிகளவில் இரும்புக்கனியை பிரான்ஸ் இறக்குமதி செய்து கொள்ள வேண்டும் என்று இந்தியா கோரியுள்ளது.
இருதரப்பு விவகாரங்கள், ஒத்துழைப்பு பற்றியும் பேசப்பட்டான. நாளையும் பேச்சுகள் தொடரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.