
8.9.1976: சர்க்காரியா கமிஷன் தினசரி விசாரணை சென்னையில் அக்டோபர் மாதம் நடக்கலாம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

8.9.1976 - Dinamani
சென்னை, செப். 7 - முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் ஏழு தி.மு.க. மாஜி அமைச்சர்கள் மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு நபர் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் தனது தினசரி விசாரணையை இம்மாதக் கடைசியிலோ அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்திலோ சென்னையில் தொடங்கும் என்று இப்போது கிடைத்துள்ள தகவல்களிலிருந்து தெரிகிறது. வருகிற சனிக்கிழமை (11ம் தேதி) விசாரணைக் கமிஷனின் கூட்டம் டில்லியில் நடைபெறும்போது இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
நேர்முக சாட்சியங்களின் பதிவு சென்னையிலும், பிரமாண வாக்குமூலங்களாக தஸ்தாவேஜுகள் மூலமாக (அபிடவிட்) தாக்கல் செய்யும் சாட்சியங்கள் டில்லியிலும் நடைபெறும் என்று அறியப்படுகிறது. நேர்முகமாக சாட்சியம் சொல்ல வருகிறவர்களின் வசதி, விசாரணைக்கு ஆதாரமாகத் தேவைப்படும் ஏராளமான தஸ்தாவேஜுகள், ரிகார்டுகள் ஆகியவற்றை டில்லிக்கு எடுத்துச் செல்வதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றைக் கருதி தினசரி விசாரணையை சென்னையில் வைத்துக் கொள்வதே உசிதமென்று கருதப்படுகிறது. எனவே நேர்முக சாட்சியப் பதிவு, விசாரணையை சென்னையில் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள "காஞ்சி" இல்லம் (முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் உத்தியோகப் பூர்வமான இல்லமாக இருந்த வீடு) புதுப்பிக்கப்பட்டுள்ளது. சாட்சியப் பதிவு, விசாரணைக்கான கோர்ட் மண்டபம், கமிஷனின் அலுவலகம் ஆகியவை இங்கு அமையத்தக்க வகையில் இந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடலெண்ணெய் கடத்த முயன்றதாக இருவர் கைது
சென்னை, செப். 7 - சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு கடலை எண்ணெய் கடத்திய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணா ரெட்டி (35), வெங்கடேச ராவ் (30) ஆகிய இருவரும் பேசின்பிரிட்ஜ் பஸ் நிலையத்திலிருந்து 170 லிட்டர் கடலை எண்ணெய் கடத்த முயன்ற போது வடக்கு சரக போலீஸ் துணைக் கமிஷனர் ராதாகிருஷ்ணனும், வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வரத்தினமும் கைது செய்தனர். கைதான இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.
Summary
8.9.1976: Two arrested for attempting to smuggle groundnut oil.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


