

பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதய நோய் மீண்டும் தங்களைத் தாக்கும் அபாயத்தைத் தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் தங்களது அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்வது மிகவும் அவசியம்.
பயிற்சிக்குத் தயாராகுதல்: நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முன்பு சில எளிய பயிற்சிகளைச் செய்வது நன்மை பயக்கும். முதலில் மெதுவாக நடைப் பயிற்சி செய்து பின்னர் உங்களது நடையின் வேகத்தை படிப்படியாகக் கூட்டலாம். இது உடலை செüகரியமாக அசைக்கவும் பாதுகாப்புடன் சரி செய்து கொண்டு வேலையை அதிகரிக்கவும் அனுமதிக்கிறது.
உடற்பயிற்சிக்குப் பிறகு இதயத் துடிப்பை சகஜ நிலைக்குக் கொண்டு வருவது முக்கியம். பயிற்சியின்போது இயக்கப்படும் தசைகள் ரத்தத்தை இதயத்துக்குப் பாய்ச்சுகின்றன. இது திடீரென்று நின்றுவிட்டால் ரத்தம் உங்களது கால்களில் தேங்கி நிற்கும். இதன் காரணமாக தலைச் சுற்றல், குமட்டல், தசைப் பிடிப்பு, மயக்கம் போன்றவை ஏற்படும்.
எனவே உங்களது வேகத்தைக் குறைப்பதன் மூலம் படிப்படியாக உடற்பயிற்சியை நிறுத்தலாம். இதைத் தொடர்ந்து கை, கால்களை நீட்டுதல், ஆழ்ந்து மூச்சு விடுதல், கை கால்களை அசைத்தல் போன்றவற்றைச் செய்யலாம்.
நாடித் துடிப்பை அளவிடுங்கள்: உங்களது நாடித் துடிப்பை கண்காணிப்பது உங்களது பயிற்சிகளை, பாதுகாப்பான இதயத் துடிப்பின் எல்லைக்குள் வைத்துக் கொள்ள உதவும். உங்கள் நாடித் துடிப்பை அளவிட உள்ளங்கையை மேல்புறமாகத் திருப்பவும். மற்றொரு கையின் முதல் இரண்டு விரல்களை மணிக்கட்டின் மீது வைத்து கட்டை விரலை கையின் கீழ்ப் புறத்தில் வைக்கவும். பிறகு மணிக்கட்டில் விரல்களை லேசாக அழுத்துவதன் மூலம் நாடித் துடிப்பை உணரலாம்.
வினாடி முள் உள்ள ஒரு கைக்கடிகாரத்தை வைத்து 15 வினாடிகள் எண்ணவும். அதை நான்கால் பெருக்கினால் கிடைக்கும் எண்தான் உங்களது நாடித் துடிப்பாகும். நாடித் துடிப்பு ஒழுங்கற்று இருந்தால் அதை ஒரு நிமிஷம் முழுவதும் எண்ண வேண்டும்.
பயிற்சியின்போது கவனிக்க...வெளியிடங்களில் அதிக வெப்பமான சூழல்களில் நடைப்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். உணவு சாப்பிட்ட பிறகு, ஒரு மணி நேரத்துக்குள் பயிற்சி செய்யக் கூடாது. தகுந்த காலணிகளையும் உடைகளையும் அணிந்து கொண்டு பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்தத்தின் அளவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் நடைப்பயிற்சியை மெதுவாகத் தொடங்க வேண்டும். முதல் வாரத்தில் 3 முதல் 5 நிமிஷங்கள் வரை பயிற்சியைத் தொடங்கி படிப்படியாக 6-ஆவது வாரத்தில் 25 முதல் 35 நிமிஷம் வரை, ஒரே நேரத்தில் பயிற்சி எடுக்கும் விதமாக அமைத்துக் கொள்வது நலம்.
முன்னெச்சரிக்கைகள்: கீழ்க்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை பயிற்சிக்கு முன்போ, பயிற்சி தொடங்கிய பிறகோ கண்டறிந்தால் அதன் பிறகு பயிற்சியைத் தொடரக் கூடாது.
1. பயிற்சி முடித்த பிறகு ஏற்படும் களைப்பு
ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடிப்பது;
2. மார்பு, கழுத்து, தாடை, பல், தோள், முழங்கை
இதில் ஏதேனும் அசாதாரண வலி ஏற்படுதல்;
3. மிகவும் குறைவாக மூச்சு விடுதல்;
4. தலைச் சுற்றல் அல்லது குமட்டல்;
5. கணுக்கால்களில் வீக்கம் - உடல் எடை கூடுதல்;
6. இதயத் துடிப்பு அதிகரித்தல்;
7. வழக்கத்தைவிட அடிக்கடி இதயம்
விட்டு விட்டுத் துடித்தல்.
டாக்டர் பிரசாந்த் வைஜியநாத்,
இதய-நுரையீரல் அறுவைச் சிகிச்சை நிபுணர்,
கேஎம்சிஎச் மருத்துவமனை, கோவை.
தினமணி மருத்துவ மலர் (2014-15)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.