முதல் ஆறுமாதம் தாய்ப்பால் கட்டாயம்!
ஒவ்வோர் ஆண்டும் "உலக தாய்ப்பால் வாரம்' ஆகஸ்ட் முதல்வாரம் கடைபிடிக்கப்படுகிறது.


ஒவ்வோர் ஆண்டும் "உலக தாய்ப்பால் வாரம்' ஆகஸ்ட் முதல்வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தாயும் தாய்ப்பாலின் மகத்துவத்தையும், உன்னதத்தையும் உணர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பதே. மேலும், தாய்ப்பாலின் அவசியம் குறித்தும், இளம் தாய்மார்கள் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் கௌரி மீனா.
"இன்றைய காலகட்டத்தைப் பொருத்தவரை பெரும்பாலான இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கான சில ஆலோசனைகளை வழங்கலாமென நினைக்கிறேன்.
தற்போது நம் நாட்டை பொருத்தவரை வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான பிரசவகால விடுமுறை என்பது ஆறுமாதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அது மிகவும் வரவேற்க தக்க விஷயம் என்றாலும் சில அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும் இளம் தாய்மார்களுக்கு ஆறுமாதகால விடுப்பு கிடைக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான்.
அப்படி ஆறுமாதகால விடுப்பு கிடைக்காத பட்சத்தில், அந்த தாய்மார்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால்? தாங்கள் திடீரென்று வேலைக்குச் சென்றுவிட்டால் குழந்தை தாய்ப்பாலுக்காக ஏங்கிவிடும் என்பதால் குழந்தை பிறந்த இரண்டு - மூன்று மாதங்களிலேயே தாய்ப்பாலை நிறுத்தி புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஒருசிலர் தனக்கு அவ்வளவாக தாய்ப்பால் சுரக்கவில்லை என்றும் அதனால் புட்டிப் பால் பழக்கத்தை ஏற்படுகின்றனர்.
இதுபோன்ற இளம் தாய்மார்களுக்கு முக்கியமாக நான் சொல்ல நினைப்பது குறைந்தபட்சம் ஒரு குழந்தைக்கு கட்டாயமாக ஆறுமாத காலமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஆறுமாத காலம் வரை நிச்சயமாக புட்டிப் பால் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
காரணம், குழந்தை பிறந்த ஆறுமாத காலம் வரை தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறெதுவும் இருக்க முடியாது. பொதுவாக தாய்ப்பாலை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று (Four Milk) அதாவது ஒவ்வொருமுறை தாய் பால்கொடுக்கும்போது முதலில் வருவது ஃபோர் மில்க். அதில் குழந்தைக்கு தேவையான மாவு சத்து அதிகம் இருக்கும். அடுத்து இரண்டாவதாக வருவது ஹைன்ட் மில்க் (Hynd Milk) இதில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக அவசியமானது. இயற்கையாகவே தாய்ப்பாலின் தன்மை அப்படி அமைந்திருக்கிறது. இதனால்தான் தாய்ப்பால் நல்லமுறையில் அருந்தும் குழந்தைகளுக்கு டயோரியா, ஆஸ்துமா, ஓவர் வெயிட், த்ரொட் இன்ஃபெக்ஷன் போன்றவை ஏற்படுவது மிக மிக குறைவாக உள்ளது. மேலும் குழந்தையின் "ஐக்யூ'வும் நன்றாக வளர்ச்சியடைகிறது. அப்படியில்லாமல் அம்மாவின் அரவணைப்பில் பால் அருந்தாத குழந்தைக்கு அம்மாவின் அன்பு சரிவர கிடைக்காததால் பிற்காலத்தில் குழந்தைக்கு குடும்பத்தின் மீதான பாசம் பற்றுதல் குறைவாக உள்ளதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை இன்றைய இளம் தாய்மார்கள் தவிர்க்க பல்வேறு வழிகள் இருக்கின்றன:
வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அலுவலகம், வீட்டிற்கு அருகில் இருந்தால் குழந்தையைப் பார்த்துக் கொள்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு குழந்தையை கொண்டு சென்று பால் அருந்த வைக்கலாம்.
ஒருவேளை தாய்மார்களின் அலுவலகம் தூரத்தில் இருந்தால் Breast Feeding Pumps என்ற முறையில் பம்பை உபயோகப்படுத்தி பாலை எடுத்து வைத்துவிட்டுச் செல்லலாம். பொதுவாக நமது அறையின் தட்பவெட்ப நிலைக்கு தாயிடம் இருந்து எடுக்கப்படும் தாய்ப்பாலானது 2 மணிநேரம் வரை தாங்கும். அதுவே குளிர்சாதனப்பெட்டியின் வெளிஅறைகளில் வைத்தால் குறைந்தது 6 மணி நேரம் வரை தாங்கும் திறன் கொண்டது. ஒருவேளை தாய் குழந்தையைப் பிரிந்து 2 நாட்களுக்கு கட்டாயமாக வெளியூர் எங்காவது செல்ல வேண்டியிருந்தால் தாய்ப்பாலை குளிர்சாதனப்பெட்டியின் ப்ரீசரில் வைத்தால் 3-4 நாட்கள்வரை கெட்டுப்போகாது. காரணம் ப்ரீசரில் உயிரிகள் வளராது. அதனால் அதன் தன்மையும் கெட்டுப் போகாது. இதில் முக்கியமானது குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் தாய்ப்பாலை எடுத்து பயன்படுத்தும்போது அதை சூடு பண்ணக் கூடாது. அப்படி சூடுப் பண்ணினால் அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் அழிந்து அது பயனற்றதாக போய்விடும்.
இதுபோன்று பம்ப் பயன்படுத்தும் முறையில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று மேனுவலாக எடுப்பது மற்றொன்று மிஷின் வைத்து எடுப்பது. பிரசவகாலம் முடிந்து வெகு சீக்கிரத்தில் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள். குழந்தை பிரசவிக்கும் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள், செவிலியர் உதவியுடன் பம்ப் பயன்படுத்தும் முறையைப் பற்றி நன்கு அறிந்து, பயிற்சி பெற்று வர வேண்டும். அலுவலகத்தில் குளிர்சாதனப்பெட்டி இருந்தால் அலுவலக மேலதரிகாரிகளின் அனுமதியோடு பாலை எடுத்து வைக்கலாம்.
இன்றைய பச்சிளம் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பது. "ஹியூமன் மில்க் பேங்க்' (Human Milk Bank). அதாவது குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் இதுபோன்ற மில்க் பேங்க் சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த மில்க் பேங்க் பெரும்பாலும் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதித்த தாயின் கருவில் பிறக்கும் குழந்தைகள், ஏதாவது காரணத்தினால் தாயை பிரிந்த குழந்தைகள் அல்லது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் தாயின் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே பலதரப்பட்ட தாய்மார்களிடம் இருந்து பெறப்பட்ட தாய்ப்பால் உரிய சோதனைகளுக்கு பிறகு தக்கமுறையில் பதப்படுத்தி சேமித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படுபவர்கள் அங்கிருந்து தாய்ப்பாலைப் பெற்று குழந்தைக்கு புகட்டலாம்.
தாய்ப்பால் புகட்டுவதில் இன்னொரு நன்மை என்னவென்றால் தாயின் எடையை அதிகரிக்க செய்யாது. காரணம், உட்கார்ந்த நிலையிலேயே செய்யும் ஒருவித உடற் பயிற்சி தான் தாய்ப்பால் புகட்டுவது.
மேலும், ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தைக்கு கட்டாயமாக பாலுட்ட வேண்டும் என்கிற "மைண்ட் செட்' வர வேண்டும். சமீபத்தில் கூட இதுபோன்ற ஒருசெய்தி கேள்விப் பட்டிருப்பீர்கள். அதாவது பார்லிமெண்ட்டில் அமர்ந்தபடியே ஒரு பெண் அமைச்சர் தனது குழந்தைக்கு பாலூட்டியதை. அதனால் ஒவ்வொரு தாய்மாரும் தன் குழந்தைக்கு நிச்சயம் பாலூட்ட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலே அவர்களுக்கு ஏதாவது ஒரு வழி நிச்சயம் கிடைக்கும்.
-ஸ்ரீதேவி குமரேசன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...