குவாஹாட்டி, ஜன. 8: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் ஆ. ராசாவைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு மிக அதிகமாகக் காட்டப்பட்டுள்ளது என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் கணிப்பு தவறானது என்று அமைச்சர் பேட்டியளித்துள்ளார். இதன்மூலம், முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது. இதுபோன்ற பேட்டிகள் மூலம் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தை திசை திருப்ப காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
இந்த ஊழல் விவகாரத்தை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க மத்திய அரசு அஞ்சுவது ஏன்? முறைகேடுகளை மறைப்பதற்காகவே கூட்டுக் குழுவை அமைக்க மத்திய அரசு மறுக்கிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தன்னிச்சையாகச் செயல்படுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு ஊழல் தலைவர்கள் மீது தானாகவே நடவடிக்கை எடுக்கிறார். இந்தப் போக்கை அவர் கைவிட்டு, ஊழல்வாதிகளை சிறைக்குள் தள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகுலுக்கு கண்டனம்: தீவிரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது. ஆனால், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தியும், அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் அடிக்கடி மதத்தை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர். அவர்களது கருத்து நகைப்புக்குரியதாக உள்ளது.
வடகிழக்குப் பிராந்தியம் தொடர்பாக தொலைநோக்குப் பார்வையுடன் பாஜக அறிக்கை தயாரித்துள்ளது. பிரம்மபுத்திரா நதியில் சீனா கட்டி வரும் அணைகள், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வது குறித்து பாஜக அலசி ஆராய்ந்துள்ளது என்று ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.