கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பெண்கள் பாதுகாப்பு: ஒருங்கிணைந்த முயற்சி தேவை- பிரதமர் மன்மோகன் சிங்

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க,  ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங்

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 6:22 pm

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க,  ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.

புது தில்லியில் குடிமைப் பணி தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் பேசியது:

நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்குப் பெரும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புது தில்லியில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவமும் சில நாள்களுக்கு முன்பு 5 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் கொடூர தாக்குதல் சம்பவமும் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் எனவும், பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிருக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு சட்டங்களை வலுப்படுத்தியுள்ள போதிலும் நாம் செய்ய வேண்டியனவற்றில் இது ஒரு சிறு பகுதிதான். இது போன்ற சமூக சீர்கேடுகளை வேருடன் களைய வேண்டுமானால் அதைச் செயல்படுத்த அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முயற்சி தேவை. மேலும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெண்கள் முன்னேற வேண்டுமானால் பொறுப்பு மிக்க குடிமக்கள் என்ற முறையில் நாம் ஒன்றுபட்டு பங்களிப்புச் செய்ய வேண்டும்.

முதலீடுகள் தேவை: நமது பொருளாதாரம் நெருக்கடியான கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. இதை விரைவாக சீர் செய்ய வேண்டியது அவசியம். பொருளாதார மீட்சி ஏற்பட வேண்டுமானால் அனைத்து துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

நேரடி மானிய திட்டம்: அரசின் உதவித் திட்டங்களின் பலன் மக்களுக்குப் போய்ச் சேர்வதில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதால்தான் நேரடி மானிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் பொருள், பணம் விரயமாவது குறைக்கப்படும்.

இத்திட்டம் வெற்றி அடைவதற்கு, அனைத்து அதிகாரிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்களது பங்களிப்பைச் செய்ய வேண்டும். ஊழல் ஒழிப்பு, வெளிப்படைத் தன்மை, மக்களுக்கு சேவை அளிப்பதில் பொறுப்புள்ள நடத்தை ஆகியவற்றை உறுதி செய்ய பல சட்டபூர்வ நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இத்திட்டத்தை மேலும் பலப்படுத்த வேண்டியது அவசியம் என்றார் அவர். பல்வேறு மாநிலங்களில் புதுமையான முறைகளைப் பின்பற்றி மக்கள் நல பணித் திட்டங்களை அமலாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி பிரதமர் கௌரவித்தார். ஊரக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலத்துக்கு வழங்கப்படும் விருதை  சிக்கிம் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.