தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திங்கள்கிழமை (ஜூன் 15) விளக்கம் அளித்துள்ளார்.
தவெகவில் இணைவதாக வெளிவந்த செய்திக்கு, “அப்படியெல்லாம் எதுவும் கிடையாது” என்று அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் தெனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்தது.
இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மற்றும் கூட்டணி அணுகுமுறைகளில் அதிருப்தி அடைந்த எஸ்பி. வேலுமணி மற்றும் சிவி. சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு அணி அவருக்கு எதிராக உருவானது. இந்த அணியில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் இடம்பெற்றிருந்தார்.
அதன் பிறகு, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்கும் வகையில், இரு தரப்பு தலைவர்களும் தங்கள் புகார்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் இன்று செய்திகள் வெளியாகின.
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், ”அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. தவறான செய்தி. எனக்கே நீங்கள் சொல்லித்தான் இந்த விஷயம் தெரியும்” என்று கூறினார்.
Summary
M.R. Vijayabhaskar has denied reports that he is joining TVK, stating, "There is nothing of the sort."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











