

புதுதில்லி: கடந்த நவம்பர் எட்டாம் தேதி கொண்டு வரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இந்தியாவின் நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் ஐம்பது நாட்கள் கழித்து மக்களிடம் உரையாற்றுவதாக கூறியதை அடுத்தும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்க்கட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு தற்போதுஉரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் ஊழலை ஒழிக்கவும் ஏழைகள் நலம் பெறவுமே பண மதிப்பிழப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய நேர்மை மரபு காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் ஊழலை ஒழிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனர். நாட்டில் உள்ள கறுப்பு பணம், கள்ளச்சந்தை மற்றும் விலைவாசியால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கறுப்பு பண ஒழிப்பால் நீண்ட நாட்களுக்கு பயன் கிடைக்கும். என்பது உறுதி. எனவேதான் பணமதிப்பிழப்புக்கு நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைத் தந்து வருகிறார்கள்.
நாட்டு மக்கள் தற்போது ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளார்கள். சமூகத்தில் நிலவவும் தீமையை அழிக்க வேண்டுமென்று மக்கள் அனைவரும் சபதம் ஏற்றால் விளைவு நன்றாக இருக்கும் என்பதற்கு நமது நாடு உதாரணம். நவம்பரில் நிகழந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் புதிய சவால்கள் மக்களுக்கு காத்திருந்தன. ஆனால் ஊழல் பிரச்சனைகளை அகற்ற ஒன்று சேர்ந்து போராடுகிறோம் என்ற உணர்வவே அனைவரையும் ஒன்றிணைத்தது.
தற்போது கிராமங்களில் நிலவி வரும் பணப் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்படும். நாட்டிலுள்ள வங்கிகள் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்கு வரும். ரொக்க பண பரிமாற்றத்தை மக்கள் நிறுத்த வேண்டும். டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும். மக்களின் பணம் வங்கிக்கு வந்தால் நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கும்.
காமராஜர் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் மக்களை பாராட்டுவர். ஏழைகளை முன்னேற்ற இதுபோன்ற நடவடிக்கை தேவை. இந்தியர்கள் தியாகமும், பொறுமையும் உலகிற்கே ஒரு உதாரணம். இவ்வாறு மோடி புகழ்ந்துரைத்தார்.
மேலும் பேசிய அவர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தவறு செய்த வங்கி அதிகாரிகளை நாங்கள் விட்டு வைக்க மாட்டோம். சாமானிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் போராடி வருகிறோம்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் சிலர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அரசு கொண்டு வந்த வருமான ஒப்புதல் திட்டத்தில் ரூ10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளது என மொத்தம் 24 லட்சம் பேர்தான் ஒப்புக் கொள்கின்றனர். தற்பொழுது அரசு எடுத்த நடவடிக்கை தேசத்தின் வருங்காலத்துக்கு மிகவும் பயன் தரும்.
இந்த சோதனையான நேரத்தில் துணை நின்ற 100 கோடி இந்தியர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு விவகாரத்தை சிலர் அரசியலாக்குகின்றனர். ஆனால் ஊழலை ஒழித்து ஏழைகள் நலம் பெறவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இத்துடன் பொது மக்கள் நலம் சார்ந்த திட்டங்களையம் மோடி தன்னுடைய உரையில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.