மக்களவை முன்னாள் தலைவர் பூர்ணோ அகிடோக் சங்மாவின் மறைவுக்கு, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு, அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
சங்மா மாரடைப்பால் உயிரிழந்த தகவலை மக்களவையில் தெரிவித்து, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் பேசியதாவது:
புன்னகை பூத்த முகத்துடன் அவை நடவடிக்கை மேற்கொள்வது எப்படி என்பதை சங்மா தெரிந்து வைத்திருந்தார். அந்தச் செயலை அவரிடம் இருந்து நானும் கற்றுக் கொண்டேன். நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் முன்னேற்றத்
துக்குத் தொடர்ந்து பாடுபட்டார் என்று சுமித்ரா மகாஜன் புகழாரம் சூட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சங்மா, பாடுபட்டு உயர்ந்த தலைவர் ஆவார். வடகிழக்கு மாநிலங்களுக்கு சங்மா ஆற்றிய பணி நினைவுகூரத்தக்கது. மக்களவைத் தலைவராக அவர் ஆற்றிய பணி மறக்கமுடியாததாகும். நெருங்கிப் பழகும் குணத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். நேதாஜி சந்திர போஸிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார் சங்மா என்றார் மோடி.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சரத் பவார் பேசுகையில், ""சங்மா திறமை வாய்ந்த மக்களவைத் தலைவராகத் திகழ்ந்தார். அவர் மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட தலைவரை, நாடு இழந்துவிட்டது'' என்றார்.
மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூர் பேசுகையில், ""கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வரை சங்மா அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார். குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்புக் கோரியிருந்தார்'' என்றார்.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரும் சங்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பிறகு, உறுப்பினர்கள் அனைவரும் மெளன அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவை வரும் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்: இதேபோல், சங்மாவின் மறைவுக்கு மாநிலங்களவையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் சங்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
மேகாலயத்தில் 7 நாள் துக்கம்: இதனிடையே, பி.ஏ.சங்மாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மேகாலயத்தில் 7 நாள்களுக்குத் துக்கம் அனுசரிப்பது என அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேகாலய சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஆளுநர் வி.சண்முகநாதனின் உரைக்குப் பிறகு, சங்மா மறைந்த செய்தியை பேரவைத் தலைவர் அபு தாஹிர் மண்டல் அவையில் தெரிவித்தார். சங்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வர் முகுல் சங்மா, அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மாநிலத்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
பிறகு, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், சங்மாவுக்கு புகழாரம் சூட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




