தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பள்ளியில் ஏசி பொருத்தியதால் கட்டணத்தை உயர்த்தலாமா? தில்லி நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு

பள்ளியில் குளிர்சாதனக் கருவியை (ஏசி) பொருத்தியதற்கும், அதனால் ஏற்படும் மின்சார செலவை ஈடுசெய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்தலாமா என்ற வழக்கில் தில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2017, 9:23 am

தினமணி


புது தில்லி: பள்ளியில் குளிர்சாதனக் கருவியை (ஏசி) பொருத்தியதற்கும், அதனால் ஏற்படும் மின்சார செலவை ஈடுசெய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்தலாமா என்ற வழக்கில் தில்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

பள்ளிகளில் குளிர்சாதன கருவிகளைப் பொருத்தியக் காரணத்தால், பள்ளிக் கட்டணத்தை 15 சதவீத அளவுக்கு உயர்த்தியிருப்பது சட்டவிரோதமானது என்றும், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தை திரும்ப செலுத்தவும் உத்தரவிட்டு தில்லி கல்வித்துறை கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

தில்லி கல்வித் துறை கடந்த 2016, ஜூன் 16ம் தேதி வெளியிட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இரண்டு தனியார் பள்ளிகள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

அதில், மோசமான வெப்பநிலையும், காற்று மாசுபாடும் காரணமாக பள்ளிகளில் குளிர்சாதனக் கருவி பொருத்தப்பட்டது. அவற்றை பராமரிக்கவே, கூடுதலாக 15 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் லாப நோக்கம் எதுவும் இல்லை. ஆண்டுக் கட்டணத்தையும், கல்விக் கட்டணத்தையும் உயர்த்த எந்த விதியும் தடை செய்யவில்லை என்று பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கல்வித் துறை சார்பில் வாதாடுகையில், பள்ளிகள் கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதில் வழக்கமான ஆண்டுக் கட்டணம் 10 சதவீதம் அளவுக்கும், கூடுதலாக குளிர்சாதனக் கருவி பொருத்தியதற்கு 15 சதவீதமும் அடங்கும். இவ்வாறு 25 சதவீத அளவுக்கு கட்டணம் உயர்வது மற்ற கட்டணங்களின் உயர்வுக்கும் வழி வகுக்கும் என்று கூறியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், பள்ளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், குளிர்சாதனக் கருவிகளைப் பொருத்தத் தேவையான செலவினங்களை, பள்ளிக்குக் கிடைக்கும் கல்விக் கட்டணத்தில் இருந்து சேமித்து அதில் தான் மேற்கொள்ள வேண்டும். அதோடு, குளிர்சாதனக் கருவிகளை இயக்குவதால் ஏற்படும் மின்சாரக் கட்டணத்தை ஈடு செய்யவும், கல்விக் கட்டணத்தை உயர்த்த முடியாது.  ஏற்கனவே பள்ளிகள் ஆண்டுக் கல்விக் கட்டணத்தை வழக்கம் போல உயர்த்தும் போது, கூடுதலாக கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.