/

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது: பாஜக எம்.பி.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்  தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:38 pm

DIN

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ்  தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக தலைவர்கள் சிலரும், ஹிந்து அமைப்பினரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வரிசையில் பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜும் தற்போது அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக லக்னெளவில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பாபர் மசூதியா? ராமர் கோயிலா? என்ற விவாதம் தற்போது கைவிடப்பட்டு விட்டது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டக் கூடாது என்று எதிர்த்தவர்களே தற்போது அதற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். எப்படி பார்த்தாலும் அவர்கள் அனைவருமே ராம பக்தர்கள்தானே; எனவே, அவர்களால் அத்தகைய முடிவைத்தான் எடுக்க முடியும். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக இருக்கின்றனர். அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார் அவர்.
இதனிடையே, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹிந்துத்துவ அமைப்பின் தலைவர் ராம்விலாஸ் வேதாந்தி, லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக செவ்வாய்க்கிழமை வந்தார். அப்போது அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், 'அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தின் மேற்கூரையை இடித்தவர்களில் நானும் ஒருவன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.