மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு

மணிப்பூர் மாநில முதல்வராக பீரேன் சிங் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மணிப்பூர் முதல்வரானார் பீரேன் சிங்: 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்பு

மணிப்பூர் மாநில முதல்வராக பீரேன் சிங் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலத் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பீரேன் சிங்குக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
மணிப்பூர் மாநில வரலாற்றில் பாஜக தலைமையிலான அரசு, அங்கு ஆட்சி அமைப்பது இதுவே முதன்முறையாகும்.
மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூருக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 21 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. நாகா மக்கள் முன்னணியும், தேசிய மக்கள் கட்சியும் தலா 4 இடங்களில் வெற்றி பெற்றன. பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி ஒரு இடத்தைக் கைப்பற்றியது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ ஒருவர், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜன சக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டது.
அதன்படி 32 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் பாஜக சமர்ப்பித்தது. இதையடுத்து, பீரேன் சிங் தலைமையிலான எம்எல்ஏக்களை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இம்பாலில் அமைந்துள்ள மணிப்பூர் ஆளுநர் மாளிகையில் புதன்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது.
முதல்வராக பீரேன் சிங் பதவியேற்றுக் கொண்டார். தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜாய்குமார் துணை முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஷியாம் குமாருக்கும், பாஜக எம்எல்ஏ பிஸ்வஜித் சிங்குக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த குமார் சிங், ஹோகிப், காயிஸி ஆகியோருக்கும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டது. நாகா மக்கள் முன்னணி எம்எல்ஏ டிக்கோ, லோக் ஜன சக்தி எம்எல்ஏ கரம் ஷியாம் ஆகியோரும் பீரேன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் முதல்வர் இபோபி சிங், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்களது பயணத் திட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com