பகுஜன் சமாஜ் கட்சியுடன் நட்பு பாராட்டி வரும் சமாஜவாதி கட்சி, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தை (ஏப்.14) மிகப் பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர், புல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் களம் இறங்கிய அந்த மாநில பிரதான எதிர்க்கட்சியான சமாஜவாதியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பரஸ்பரம் ஆதரவளித்துக் கொண்டு இருகட்சிகளும் சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டன. எனினும், பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சமாஜவாதியின் வேட்பாளராக களம் கண்ட ஜெயா பச்சன் மட்டும் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் நெருங்கிய நட்பு பாராட்டி வருகின்றன.
இந்நிலையில், இம்மாதம் 14-ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்று சமாஜவாதி முடிவு செய்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் அம்பேத்கரின் பிறந்த தினத்தை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசியல் ஆய்வாளர் ரமேஷ் தீக்ஷித் கூறுகையில், 'எதிரணிகளை வீழ்த்தவே எதிர் எதிர் துருவங்களாக இருந்த இந்தக் கட்சிகள் தற்போது நட்பு பாராட்டி வருகின்றன' என்றார்.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில சமாஜவாதி தலைவர் நரேஷ் உத்தம் கூறுகையில், 'அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த தினத்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வேண்டும் என்றும் நாட்டுக்காகவும், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்காகவும் அவர் அளித்த பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.
'அம்பேத்கர் பிறந்த தினத்தை கொண்டாடுவது இது முதல் முறையல்ல. ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அவரது மறைவு தினத்திலும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறோம். இந்த முறை அவரது பிறந்த தினத்தை விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறோம்' என்று சமாஜவாதியின் செய்தித்தொடர்பாளர் ராஜேந்திர சௌதரி தெரிவித்தார்.
'மிகப் பெரிய நாடகத்தை சமாஜவாதி அரங்கேற்றி வருகிறது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியுடன் தற்போது நட்பு பாராட்டிவரும் நிலையில் தலித்துகளுக்காக கவலைப்படுவது போல் சமாஜவாதி காட்டிக் கொள்கிறது. உத்தரப் பிரதேச முதல்வராக அகிலேஷ் பதவி வகித்த காலத்தில் தலித்துகளுக்கு எதிராக சமாஜவாதி நடத்திய அராஜகத்தை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்' என்று அந்த மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







