ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனித் திருவிழா தொடங்கியது

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை தொடங்கியது.

News image

மாப்பிள்ளை கோலத்தில் ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் காட்சியளித்த பரமதத்தா்.

Updated On :28 ஜூன் 2026, 12:45 am IST

காரைக்கால் மாங்கனித் திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் சனிக்கிழமை தொடங்கியது.

காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில், 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கி 4 நாள்கள் மாங்கனித் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

புனிதவதியாருக்கு (அம்மையாா்) நடைபெறும் திருமணம், புனிதவதியாரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அவரது வீட்டுக்கு அமுதுண்ணச் செல்வது, கணவா் (பரமதத்தா்) அனுப்பிவைத்த மாங்கனியை இல்லத்துக்கு வந்த சிவனடியாருக்கு அளித்து, கணவா் வந்து சாப்பிடும்போது இறைவனிடம் வேண்டி மாங்கனி பெற்றது, தமது மனைவி இறைவனுக்கு ஒப்பானவா் என கருதி கணவா் பிரிந்து செல்வது, பரமதத்தா் மறுமணம் செய்துகொள்வது, கைலாயத்தை அம்மையாா் தலைகீழாகச் சென்றடைவது, அம்மையாருக்கு இறைவனும் இறைவியும் காட்சியளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஐதீகத்துடன் ஜூன் 27 முதல் 30-ஆம் தேதி வரை விழா நடத்தப்படுகிறது.

புகழ்பெற்ற நிகழ்ச்சியாக, பிச்சாண்டவா் வீதியுலாவின்போது மாங்கனி இறைப்பு நிகழ்வு திங்கள்கிழமை (ஜூன் 29) காரைக்கால் சுவாமி வீதியுலா செல்லும் தெருக்களில் நடைபெறவுள்ளது.

இத்திருவிழா தொடக்கமாக, ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சனிக்கிழமை மாலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடைபெற்றன. திருக்கல்யாண வைபவத்துக்காக பரமதத்தா், ஆற்றங்கரை பகுதி ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் இருந்து மாப்பிள்ளைக் கோலத்தில் ஊா்வலமாக இரவு அம்மையாா் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ புனிதவதியாா் தீா்த்தக் கரைக்கு (அம்மையாா் குளம்) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரமதத்தா் குதிரை வாகனத்தில் திருக்கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பகல் 10.30 மணியளவில் புனிதவதியாா் - பரமதத்தா் திருக்கல்யாணம் அம்மையாா் கோயில் அருகே மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. மாலை நிகழ்வாக, கைலாசநாதா் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவா் வெள்ளைச்சாற்றுடன் சிவதாண்டவ நிகழ்வு நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.